என் மலர்

    சினிமா

    பாலசந்தர் உருவாக்கிய இருகோடுகள் மகத்தான வெற்றி: ஜனாதிபதி பரிசை பெற்றது
    X

    பாலசந்தர் உருவாக்கிய இருகோடுகள் மகத்தான வெற்றி: ஜனாதிபதி பரிசை பெற்றது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த "இருகோடுகள்'' சிறந்த குடும்பப்படம் என்று பெயர் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது.
    பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த "இருகோடுகள்'' சிறந்த குடும்பப்படம் என்று பெயர் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது.

    இதற்கிடையே, தமிழில் வெற்றி பெற்ற பாலசந்தரின் படங்கள் தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான மொழிகளில் எடுக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை பாலசந்தரே இயக்கினார். இதனால் தென்னாடெங்கும் பாலசந்தரின் புகழ் பரவியது.

    ஜோசப் ஆனந்தன் எழுதிய "இருகோடுகள்'' (1969) ஏற்கனவே நாடகமாக மேடை ஏறி வெற்றி பெற்றிருந்தது. அதை திரைப்படமாக்க "கலாகேந்திரா'' முடிவு செய்தது. திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை பாலசந்தர் ஏற்றார்.

    இதன் கதைக்கரு வித்தியாசமானது. விவாகரத்து செய்து கொள்ளும் கணவனும், மனைவியும் எதிர்பாராமல் மீண்டும் சந்திக்கிறார்கள். அப்போது மனைவி கலெக்டர். கணவன், அவளிடம் வேலை பார்க்கும் குமாஸ்தா!

    கலெக்டராக சவுகார் ஜானகியும், கணவனாக ஜெமினிகணேசனும், அவருடைய இரண்டாவது மனைவியாக ஜெயந்தியும் நடித்தனர். சுவையான முக்கோண காதல் கதையை அருமையாக எடுத்திருந்தார், பாலசந்தர். வி.குமார் இசை அமைப்பில் "புன்னகை மன்னன் பூழிவிக்கண்ணன்'', "நான் ஒரு குமாஸ்தா'' பாடல்கள் ஹிட்டாயின.

    பாலசந்தரின் மிகச்சிறந்த 10 படங்களை தேர்வு செய்தால், அதில் "இருகோடுகள்'' நிச்சயம் இடம் பெறும்.

    "உழைத்து பாஸ் செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் எடுத்த படம்தான் "இருகோடுகள்.'' மக்களின் ஆதரவை மிகப்பெரிய அளவில் பெற்றதுகூட உண்மைதான். மாநில மொழிப்படங்களில் சிறந்த படம் என்று, ஜனாதிபதியின் பரிசை பெற்றதும் என்னவோ உண்மைதான்.

    ஆனாலும் ஒரு இயக்குனருக்கு இதுவெறும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுதானே! பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவனுக்கு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கிடைக்கும் வெற்றி மிகப்பெரிதாகத் தோன்றலாம். ஆனால் ஆற அமர ஆராய்ந்து பார்த்தால், படிப்பே இத்துடன் முடிந்து விடுவதில்லையே. குறுக்கு வழிகளைத் தேடிப்போகாமல் நேர்கோட்டில் நடைபோட்ட எனக்கு, "இருகோடுகள்'' தந்தது இணையற்ற வெற்றிதான். இருப்பினும், இன்னும் எத்தனையோ இருக்கிறது. கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு ஆயிற்றே! எனவே சினிமாவில் என் படிப்பு தொடர்ந்தது.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    1970-ல் வெளிவந்த "பத்தாம்பசலி'' ஒரு தோல்விப்படமாக அமைந்தது.

    அதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "இருகோடுகளை அடுத்து வெளிவந்த பத்தாம் பசலி பெரிய சறுக்கல்.

    ஆனாலும், இப்படம் கற்றுத்தந்த சிறந்த பாடம் ஒன்றும் இருக்கிறது. இதே பத்தாம் பசலி கதையை, இதே திரைக்கதை அமைப்புகளுடன் நான் ஏற்கனவே தெலுங்கில் இயக்கி வெளிவந்தபோது, அந்தப்படம் பெரிய வெற்றி பெற்றது. அதே திரைக்கதை தமிழில் மட்டும் தோல்வியைத் தழுவுவானேன். காரணம் இருக்கத்தான் செய்தது.

    தெலுங்குப்படத்தில் கதாநாயகன் சலம். தமிழ்ப்படத்தில் நாகேஷ். சலம் இத்தகைய வேடத்தில் நடிப்பது இதுவே முதல் தடவை. எனவே புதுமையாக இருந்தது. நாகேஷ் ஏற்கனவே பல படங்களில் பிரமிக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கதாநாயகனாக நடிப்பதும் இது முதல் தடவை அல்ல.

    கதை அமைப்பின்படி, தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த நாகேசுக்கு இதில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. அத்துடன் ஒரு முட்டாள் கதாபாத்திரத்தில் நாகேசை மக்கள் ஏற்கவில்லை.

    பாத்திரத்திற்கு ஏற்ப நடிகர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை, இப்படத்தின் மூலம் நான் கற்றுக்கொண்டேன்.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    இதே ஆண்டு வெளிவந்த "நவக்கிரகம்'' மிகச்சாதாரணமாக அமைந்தது.

    ஒரு இந்திப்படத்தை தழுவி இரு வேடங்களில் சவுகார் ஜானகி நடித்த "காவியத் தலைவி'', சவுகார் ஜானகியின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியதே தவிர, பாலசந்தரின் திறமையை எடுத்துக் காட்டும் படமாக அமையவில்லை.

    சிவாஜிகணேசன் பெரும் புகழ் பெற்ற நடிகராக வலம் வந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது.

    `சிவாஜியும், பாலசந்தரும் இணைந்து பணியாற்றினால், அப்படம் எவ்வளவு பிரமாதமாக இருக்கும்'' என்று ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

    இவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில், "எதிரொலி'' என்ற படத்தை ஜி.என்.வேலுமணி தயாரித்தார். இதில், சிவாஜிகணேசனும், கே.ஆர்.விஜயாவும் நடித்தனர்.

    கதை, வசனம் எழுதி, டைரக்ட் செய்தார், பாலசந்தர்.

    1970 ஜுன் 27-ந்தேதி வெளிவந்த "எதிரொலி'' தோல்வியை சந்தித்தது. அதற்குக் காரணம் அது சிவாஜி படமாகவும் இல்லை; பாலசந்தர் படமாகவும் இல்லை.

    இதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் முழுத்திறமையையும் பயன்படுத்திக் கொள்ள முடியாத ஒரு கதையில், அவரை கதாநாயகனாக நடிக்க வைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை "எதிரொலி'' எனக்கு எடுத்துக் காட்டியது.

    ரசிகர்களிடம் மிகுந்த மதிப்பும், செல்வாக்கும் பெற்ற நடிகர்களை, குற்றம் செய்யும் கதாபாத்திரத்தில் காட்டுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும், எதிரொலி எனக்கு சொல்லிக் கொடுத்தது.

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    இதன்பின், நான்கு சுவர்கள், நூற்றுக்கு நூறு, புன்னகை, வெள்ளி விழா, கண்ணா நலமா முதலான படங்களை பாலசந்தர் எடுத்தார்.

    இவற்றில் "புன்னகை''யை தனது லட்சியப்படமாக பாலசந்தர் கருதினார். அமுதம் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப்படத்தில் ஜெமினிகணேசனும், ஜெயந்தியும் நடித்தனர். கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை பாலசந்தர் கவனித்தார்.

    1971 நவம்பரில் வெளிவந்த இப்படம், நன்றாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

    இது பாலசந்தருக்கு பெரும் வருத்தத்தை அளித்தது. "புன்னகை படம், என் முகத்தில் புன்னகையைப் பறித்ததுடன், என்னை மிகப்பெரிய சோதனையில் ஆழ்த்தியது. "முதலில் ரசிகப் பெருமக்களைப் புரிந்து கொள்'' என்பதே, புன்னகை மூலம் நான் கற்றுக்கொண்ட பாடம்'' என்றார், பாலசந்தர்.
    Next Story
    ×