என் மலர்

    சினிமா

    சேரனின் முதல் படம் பாரதி கண்ணம்மா: சோதனைகளை வெல்ல விஜயகுமார் உதவி
    X

    சேரனின் முதல் படம் "பாரதி கண்ணம்மா'': சோதனைகளை வெல்ல விஜயகுமார் உதவி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டைரக்டர் சேரனின் முதல் படமான "பாரதி கண்ணம்மா'' உருவாவதற்கு பெரிதும் உதவினார், விஜயகுமார்.
    டைரக்டர் சேரனின் முதல் படமான "பாரதி கண்ணம்மா'' உருவாவதற்கு பெரிதும் உதவினார், விஜயகுமார். டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் அசோசியேட் டைரக்டராகப் பணியாற்றியவர் சேரன்.

    சேரன் டைரக்ஷனில் உருவான "பாரதி கண்ணம்மா'' படம் சம்பந்தப்பட்ட தனது அனுபவங்களை விஜயகுமார் பகிர்ந்து கொண்டார்:

    "டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரின் ïனிட்டில் இருந்தபோதே சேரனை எனக்குத் தெரியும். ரவிக்குமார் மாதிரியே இவரும் தயாரிப்புத்துறை நிர்வாகத்தில் அனுபவம் பெற்றிருந்தார். ஒருநாள் என்னை சந்தித்த சேரன், "சார்! நான் ஒரு கதை தயார் செய்திருக்கிறேன். ஹென்றி தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

    இப்படிச் சொன்னதோடல்லாமல் புத்தக வடிவிலான கதை வசன பகுதியை கொடுத்து "இதுதான் சார் கதை! படித்துப் பார்த்து சொல்லுங்கள்'' என்றும் கேட்டுக்கொண்டார்.

    என் சினிமா அனுபவத்தில் இப்படி படம் இயக்கும் யாரும் கதையை காட்சியமைப்புகளுடன் புத்தகமாக தந்ததில்லை. ஆலிவுட்டில் வேண்டுமானால் இது சகஜமாக இருக்கலாம். இங்கே இப்படித் தந்து என்னை அசத்தியவர் சேரன்.

    கதை, காட்சியமைப்பு மட்டுமின்றி காட்சிகளை படமாக்க வேண்டிய டிராலி, மிட்ஷாட், குளோசப் ஷாட் என கேமரா நுணுக்கங்கள் பற்றியும் விலாவாரியாக குறிப்பிட்டிருந்தார்.

    மேலோட்டமாக புரட்டிப் பார்த்து இதை தெரிந்து கொண்ட நான், முழு ஸ்கிரிப்ட்டையும் படித்து விட்டு சொல்வதாக தெரிவித்தேன். ஆனால் அன்றைக்கு எனக்கிருந்த அடுத்தடுத்த பணிகளில் அந்தக் கதையை படித்துப் பார்க்க அவகாசம் இல்லாமல் போய்விட்டது.

    ஆனால் மஞ்சுளா, அன்றிரவே அக்கதையைப் படித்துப் பார்த்திருக்கிறார். காலையில் படப்பிடிப்புக்கு நான் தயாரானபோது, "நேற்று ஒரு கதை கொடுத்தீங்களே! சூப்பர். அவசியம் நீங்கள் இதில் நடிக்கிறீர்கள்'' என்றார்.

    அன்றைய தினம் சேரன் என்னை சந்தித்தார். நான் அவரிடம், "சேரன்! எனக்கு முழுக்கதையையும் படிக்க நேரமில்லை. ஆனால் மஞ்சுளா படித்துப் பார்த்து `பிரமாதம்'னு சொன்னாங்க. உங்க படத்தில் நான் நடிக்கிறேன். படத்துக்கு ஹீரோ யார்னு முடிவு பண்ணிட்டீங்களா?'' என்று கேட்டேன்.

    பதிலுக்கு சேரன் என்னிடம், "சார்! ஹீரோதான் இன்னும் முடிவாகாமல் இருக்குது! படத்தில் நீங்க அப்பா கேரக்டரிலும் உங்கள் மகன் அருண் ஹீரோவாகவும் பண்ணினால் நன்றாக இருக்கும்'' என்றார்.

    நான் அவரிடம், "ஒண்ணு ஹீரோவா அருண் பண்ணட்டும். இல்லேன்னா அந்த `பவர்புல்' அப்பா கேரக்டரில் நான் பண்றேன். நானும் அருணும் சேர்ந்து பண்ணினா சரி வராது. யாராவது ஒருத்தரை செலக்ட் பண்ணிடுங்க'' என்றேன்.

    நடிகர் கார்த்திக் என் நண்பர். அவர் ஹீரோவாக இந்தப் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நான் சேரனிடம் "கார்த்திக்கை கேட்கலாமா?'' என்று கேட்டேன்.

    சேரன் முகத்தில் இப்போது மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது. கார்த்திக் நடித்தால் ரொம்ப நல்லாயிருக்கும் சார்'' என்றார்.

    அப்போதே நான் கார்த்திக்குக்கு போன் போட்டு பேசினேன். "நீங்களே படம் பற்றி இப்படிச் சொல்றதால நான் கதை கூட கேட்கப் போறதில்லை. சேரனை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க'' என்றார், கார்த்திக்.

    உடனே போய் கார்த்திக்கை சந்தித்தார் சேரன். அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் கார்த்திக் அப்போது பிசியாக இருந்ததால் `கால்ஷீட்' தேதிகளை ஒரு வருடம் கழித்து தருகிறேன்'' என்று சொன்னார்.

    ஆனால், அதுவரை முடியாத நிலையில் சேரன் இருந்தார். அடுத்தடுத்து சில ஹீரோக்களை சந்தித்து கதை சொல்வதும் கால்ஷீட் கேட்பதுமாக இருந்தார். எந்த ஹீரோவும் முடிவாகாத நிலையில், மறுபடியும் சேரன் என்னை சந்தித்தபோது, "பார்த்திபன் சார் நடித்தால் எப்படி இருக்கும்?'' என்று கேட்டேன்.

    "பிரமாதமாய் இருக்கும் சார்! ஆனால் அவரோ சொந்தமாகப் படம் தயாரித்து இயக்கிக் கொண்டிருக்கிறார். என் படத்தில் நடிக்க சம்மதிப்பாரா?'' என்று கேட்டார்.

    நான் பார்த்திபனின் ஆபீசுக்கு போன் செய்தேன். அவர் டெல்லிக்குப் போயிருப்பதாக சொன்னார்கள். குறிப்பிட்ட ஓட்டலின் பெயரை சொல்லி, இரவு 8 மணிக்கு மேல் தொடர்பு கொண்டால் பார்த்திபனிடம் பேசமுடியும் என்றும் சொன்னார்கள்.

    அப்படியே செய்தேன். பார்த்திபன் பேசினார். நான் அவரிடம் "சேரன்னு புது டைரக்டர் அருமையான ஒரு ஸ்கிரிப்ட் வைத்திருக்கிறார். நீங்க ஹீரோவா நடித்தால் நன்றாக இருக்கும்'' என்றேன்.

    "நீங்களே சொல்றீங்க! அதனால, நான் கதை பற்றி கேட்காமல் நடிக்க சம்மதம்'' என்றார், பார்த்திபன்.

    பார்த்திபன் சம்மதம் சொன்னதும், என் கைகளை பிடித்துக்கொண்ட சேரன், "சார்! நீங்க எனக்கு `லைப்' கொடுத்திருக்கீங்க'' என்று சொல்லி நெகிழ்ந்தார்.

    படப்பிடிப்பு தொடங்கியது. என் கால்ஷீட்50 நாட்களுக்கு தேவை என்றார் சேரன். அப்படியானால் சம்பளம் அதிகமாகுமே என்றேன். மஞ்சுளாவோ "இந்தப் படத்துக்கு நீங்கள் சம்பளமே பேசக்கூடாது'' என்று கண்டிஷனாக சொல்லி விட்டதால், சேரன் கேட்ட தேதிகளை கொடுத்தேன்.

    படம் முடிந்து திரைக்கு வரவேண்டிய நேரத்தில் ஒரு பிரச்சினை. படத்தின் முடிவு சோகப் பின்னணியைக் கொண்டது என்பதால் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் கிளைமாக்சை மாற்றவேண்டும் என்று சேரனிடம் கேட்டுக்கொண்டார்கள். கிளைமாக்சை மாற்ற மனதில்லாவிட்டாலும் தனது முதல் படத்துக்கு முட்டுக்கட்டை விழுந்து விடக்கூடாது என்று சேரனும் சம்மதித்தார்.

    படம் முடிந்த நிலையில் ஒரு நாள் என்னிடம் "சார்! கிளைமாக்சை மாற்ற வேண்டியிருக்கிறது. அதனால் இன்னும் சில நாள் கால்ஷீட் வேண்டும்'' என்றார்.

    நான் அவரிடம், "உங்கள் கதைக்கு இந்த கிளைமாக்ஸ்தான் சரியாக இருக்கும். எனவே, கிளைமாக்சை மாற்றும் பொருட்டு நீங்கள் கேட்கிற தேதிகளை நான் தருவதற்கில்லை. ஒரு நல்ல படத்தை கெடுக்க நான் உதவமாட்டேன்'' என்று பிடிவாதமாக மறுத்துவிட்டேன்.

    பாரதி கண்ணம்மா `கிளைமாக்ஸ்' மாற்றப்படாமல் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. சேரனும் பிரபல இயக்குனர் அந்தஸ்தை பெற்றார்.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

    Next Story
    ×