என் மலர்

    சினிமா

    சினிமாவில் நடித்தே தீருவேன் - விஜயகுமார் உறுதி
    X

    சினிமாவில் நடித்தே தீருவேன் - விஜயகுமார் உறுதி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சினிமாவில் நடித்தே தீருவது என்ற உறுதியுடன் இருந்ததால், விஜயகுமார் சினிமாவில் நடிப்பதற்கு தந்தை அனுமதி அளித்தார்.
    சினிமாவில் நடித்தே தீருவது என்ற உறுதியுடன் இருந்ததால், விஜயகுமார் சினிமாவில் நடிப்பதற்கு தந்தை அனுமதி அளித்தார்.

    நடிக்கும் ஆசையில் ஊரில் இருந்து ரெயில் ஏறிய விஜயகுமார், சென்னை வந்து பெட்டிக்கடை வைத்திருக்கிற அண்ணனை சந்தித்தார். அண்ணனுக்கு இவரைப் பார்த்ததும் அதிர்ச்சி.

    இதுபற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "எந்தவித தகவலும் இல்லாமல் தன்னந்தனியாய் தஞ்சையில் இருந்து சென்னைக்கு வந்து அண்ணனை பார்த்ததும் அவருக்கு தூக்கிவாரிப் போட்டது. "என்னப்பா திடீர்னு?'' என்று அதிர்ச்சி விலகாமல் கேட்டார்.

    அண்ணன் கேட்ட தோரணையிலேயே எனது சென்னை விஜயம் அவருக்குப் பிடிக்கவில்லை என்பது புரிந்து போயிற்று. நடிக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்ததாக கூறினால், மறுநிமிடமே ஊருக்கு அனுப்பி வைத்துவிடுவார் என்று தோன்றியது. இதனால் "ஊரை சுற்றிப் பார்க்க வந்தேன்'' என்று பொய் சொல்லி சமாளித்து விட்டேன்.

    ஆனாலும் அண்ணனிடம் நாலைந்து நாட்களுக்கு மேல் இருக்க முடியவில்லை. அண்ணன் கடையில் சுப்பாராவ் என்பவர் வேலை பார்த்தார். அந்த சின்னக் கடையில் ஒரே நேரத்தில்

    2 பேருக்கு மேல் நிற்க முடியாது. என்றாலும் தங்கும் ஆசையில் `பீடா' தயாரிக்க கற்றுக் கொடுக்கும்படி கடையில் இருந்த சுப்பாராவிடம் கேட்டேன்.

    அவர் கற்றுக்கொடுப்பதற்குள் அண்ணன் என்னைப் புரிந்து கொண்டு, புது டிரெஸ், ஷு எல்லாம் வாங்கிக் கொடுத்து ஊருக்கு ரெயிலேற்றி விட்டுவிட்டார்.

    ஒரு வாரம்கூட ஆகவில்லை. போன வேகத்தில் திரும்பி வந்த என்னை அப்பா ஆச்சரியமாக பார்த்தார். அப்பா எனது சென்னைப் பயணம் உடனடியாக முடிந்து போனது பற்றி கேட்டபோது, "மறுபடியும் சென்னைக்குப்போய் நடிக்கும் முயற்சியை தொடங்கப் போகிறேன்'' என்றேன்.

    இப்போது அப்பா என்னிடம், "சென்னையில் உனக்கு தெரிந்தது உன் அண்ணன் மட்டும்தானே. இது மாதிரி ஏதாவது ஏடாகூடம் பண்ணி வைக்கக்கூடாது என்பதற்காகத்தானே உன்னை உடனடியாக ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டான்'' என்றார்.

    இப்போது அப்பாவிடம் கொஞ்சம் தைரியமாக வாய் திறந்தேன். "சென்னையில் எனக்குத் தெரிந்த இன்னொருவர் இருக்கிறார். அவரது அறையில் தங்கிக்கொண்டு சினிமாவுக்கும் முயற்சிப்பேன்'' என்றேன்.

    என் பிடிவாதமும், அதில் நிலைத்து நின்ற உறுதியும் அப்பாவுக்கு பிடித்திருக்க வேண்டும். என் விருப்பத்துக்கு பச்சைக்கொடி காட்டினார்.

    "சரி சரி. மாதம் உனக்கு நான் எவ்வளவு பணம் அனுப்பி வைக்கவேண்டும்?'' என்று கேட்டார்.

    "மாதம் முன்னூறு ரூபாய் அனுப்பினால் போதும்'' என்றேன். முன்னூறு ரூபாய் என்பது அப்போது கொஞ்சம் பெரிய தொகைதான். ஏனென்றால் தஞ்சையில் இருந்து சென்னை வர ரெயில் கட்டணமே 7 ரூபாய்தான்!

    நான் தெளிவாக சொல்லி விட்டபிறகு அப்பா எந்த குறுக்கீடும் செய்யவில்லை. "போய் முயற்சி பண்ணு. உன் ஆசை அதுதான் என்றால், அதிலேயே தீவிரமாக முயற்சி செய்'' என்று என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார், அப்பா.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

    இப்படியாக இரண்டாவது முறையும் சென்னை வந்த விஜயகுமாருக்கு, சுப்பாராவ் தங்கியிருந்த மைலாப்பூர் அப்பு முதலி தெருவில் இருந்த அறை அடைக்கலம் கொடுத்தது. தம்பி வந்தது அண்ணனுக்கும் தெரிந்து போயிற்று. இதற்குள் தம்பியின் நோக்கம் அப்பாவால் `தபால்' மூலம் அண்ணனுக்கு விளக்கப்பட்டுவிட, அண்ணன் தரப்பிலும் எதிர்ப்பில்லை.

    சுப்பாராவின் முயற்சியில் விஜயகுமாருக்கு முதலில் அமைந்தது நாடகத்தில் நடிக்கும் வாய்ப்புதான்.

    அதுபற்றி விஜயகுமார் விவரிக்கிறார்:-

    "அப்போது ஆர்.எஸ்.மனோகர் நாடகம் பிரபலம். அவரிடம் நடித்துக்கொண்டிருந்த சரோஜா பிரிந்துபோய் "சரோஜ் நாடக தியேட்டர்'' ஆரம்பித்தார். இந்த கம்பெனியின் மானேஜர் மகாதேவ அய்யரிடம் சுப்பாராவ் என்னை சிபாரிசு செய்தார். என்னிடம் ஒன்றிரண்டு கேள்விகளை கேட்ட மகாதேவ அய்யர், அப்போது தயாராக இருந்த "ராமபக்தி'' நாடகத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு தந்தார்.

    அதுவும் முதல் நாடகத்திலேயே எனக்கு இரட்டை வேடம்! நாடகத்தின் தொடக்கத்தில் பிள்ளையார் வேடம்; முடியும்போது மகாவிஷ்ணு

    வேடம்!நாடக ஒத்திகைகள் மளமளவென நடந்தன. இதற்குள் சுப்பாராவுடன் நான் தங்கியிருந்த மேன்சனில் ஒன்றிரெண்டு பேர் நண்பர்கள் ஆனார்கள். நான் நடிக்கப்போகும் விஷயத்தை அவர்களிடம் சொல்லியிருந்தேன்.

    நாடகத்தின் முதல் நாள் காட்சி தொடங்கவிருக்கிறது. என்னைத்தவிர மற்ற எல்லாருக்கும் `மேக்கப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டம் வரை பொறுத்துப் பார்த்த நான், "எனக்கு மேக்கப் போடவில்லையே'' என்று கேட்டுவிட்டேன். கேட்டதுதான் தாமதம், விநாயகர் கவசத்தை என் தலையில் மாட்டி நாடக அரங்கில் உட்கார வைத்து விட்டார்கள். கையில் ஒரு எழுத்தாணியும் கொடுத்திருந்தார்கள்.

    நாடக காட்சிக்கான திரைவிலகியதும், விநாயகரானநான் எழுத்தாணியால் எழுதுகிற காட்சிதான் ரசிகர்களுக்கு தெரியும்.

    நாடக இடைவேளை வந்தபோது மேன்ஷன் நண்பர்கள் என்னை வந்து பார்த்தார்கள். அவர்களிடம், தலைக்கு கவசம் போட்டபடி விநாயகராக வந்தது நான்தான் என்று சொன்னதை அவர்கள் நம்பவில்லை! அந்த நாட கத்தில் கடைசியில் நான் ஏற்றிருந்த "மகா விஷ்ணு'' வேடம் தான் அவர்களை நம்ப வைத்தது.''

    இவ்வாறு கூறினார், விஜயகுமார்.

    18 வயதில் நாடகம் மூலம் நடிகராக வெளிப்பட்ட நடிகர் விஜயகுமாருக்கு, சினிமா வாய்ப்பு ஏற்படக் காரணமாக இருந்தவர் ஒரு ஜோதிடர். அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:

    "நான் நாடகங்களில் நடித்து வந்த நேரத்தில் கும்பகோணம் வையாபுரி ஜோசியர்எனக்கு அறிமுகமானார். இவர் டைரக்டர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், மல்லியம் ராஜகோபால் போன்றவர்களுக்கு ஆஸ்தான ஜோதிடராக இருந்தார்.

    இவரது நட்பு எனக்கு கிடைத்தபோது, அவருடன் தொடர்பு வைத்திருந்த எல்லா சினிமா கம்பெனிகளுக்கும் என்னையும் அழைத்துப் போனார். அப்படி அழைத்துப்போனபோது டைரக்டர் ராமண்ணா எனக்கு அறிமுகமானார். என் நடிப்பு ஆர்வம் ஜோதிடர் மூலமாக அவருக்கு சொல்லப்பட்டதும் அவர், "இப்போது சிவாஜி - பத்மினி நடித்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் "ஸ்ரீவள்ளி'' படத்தில் சின்ன வயது முருகனாக நடிக்க ஒரு இளைஞர் தேவைதான்'' என்றவர், அந்த வாய்ப்பை எனக்கு வழங்கினார். இந்த வகையில் படத்தின் பெரிய முருகன் சிவாஜி; சின்ன முருகன்

    நான்!1961-ல் வெளியான இந்தப்படம்தான் தமிழில் தயாரான முதல் கலர் படம்.

    இந்தப்படம் வந்தபோது, ஒரே நாளில் எங்கள் சொந்த ஊரான "நாட்டுச்சாலை'' முழுக்க பிரபலமாகி விட்டேன்'' என்றார்,

    விஜயகுமார்.படத்தில் நடித்துவிட்ட போதிலும், தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. அதற்குக் காரணம் அவரது 18 வயதுப் பருவம்தான். சிறுவனாகவும் இல்லாமல், இளைஞனாகவும் இல்லாத அந்த இரண்டுங்கெட்டான் வயதில் இருந்த விஜயகுமாரிடம், "கொஞ்சம் பொறுமையாக இருங்கள். கதாநாயகன் வாய்ப்பை நானே தருகிறேன்'' என்று டைரக்டர் ராமண்ணா கூறினார்.

    அதன்படி விஜயகுமார் பொறுமையுடன் காத்திருந்தார். ஒரு ஆண்டோ, இரண்டு ஆண்டோ அல்ல; ஐந்து ஆண்டுகள்! 
    Next Story
    ×