என் மலர்

    சினிமா

    பிரபல இயக்குனர்களுடன் மூர்த்தி பெற்ற அனுபவம்
    X

    பிரபல இயக்குனர்களுடன் மூர்த்தி பெற்ற அனுபவம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வெண்ணிற ஆடை மூர்த்தி மாதிரியே டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் ஜோதிடத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

    வெண்ணிற ஆடை மூர்த்தி மாதிரியே டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் ஜோதிடத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில், இருவரும் ஜோதிடம் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு, இருவருக்குமே ஜோதிடத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கையும் இருந்தது.

    அதே நேரத்தில், படப்பிடிப்பு என்று வந்துவிட்டால் பம்பரமாய் சுழலும் கோபாலகிருஷ்ணனை 'அவரா இவர்!' என்கிற ரீதியில் ஆச்சரியப்பார்வை பார்ப்பார், மூர்த்தி.

    அதுபற்றி கூறுகிறார்:

    "படப்பிடிப்பு என்று வந்துவிட்டால், டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் வேகம் பார்க்க பிரமிப்பாக இருக்கும். பெரும்பாலும் அவர் மனதில் உருவாகிற கதைகளையே திரைக்கதையாக்குவதால் படத்தின் கேரக்டர்கள் அத்தனையும் அவருக்கு அத்துப்படியாகி விடும்.

    படப்பிடிப்புக்கு முன் ஒத்திகையின்போது கேரக்டர்களின் வசனங்களை கோர்வையாக சொல்லிக்கொண்டு வருவார். அப்போது புதிது புதிதாக வசனங்களை சேர்ப்பார். இதன் பிறகு அந்த வசனங்களை முன்னும் பின்னுமாக சேர்ப்பார். இப்போது வசனங்கள் இன்னும் அழுத்தமாக அமைந்து விடும். ஆனாலும் படத்தில் நடிப்பவர்கள்தான் வசனச் சுமைகளால் திணறிப்போவார்கள்.

    தான் எதிர்பார்த்த மாதிரி காட்சி அமைந்து விட்டால் 'டக்'கென்று உற்சாகமாக முதுகில் தட்டிக்கொடுப்பார். கொஞ்சம் வலிக்கிற அளவுக்கு இந்த 'தட்டல்' இருக்கும்.

    டைரக்டர் ராமண்ணா: கோபம் இருக்கிற இடத்தில்தான் குணமும் இருக்கும் என்கிற பழமொழியை பொய்யாக்கியவர் இவர். ஆளும் அழகு. குணமும் அருமை. அப்படியிருந்தும் இவரிடம் கோபமே குடிகொண்டதில்லை என்பது நான் அறிந்த உண்மை.

    படப்பிடிப்பு நேரத்தில் ஒரு டைரக்டர் எவ்வளவு டென்ஷனாக இருப்பார்? ஆனால் இவரோ 'டென்ஷன்' என்றால் என்ன என்று நம்மிடமே கேட்பார். அத்தனை அமைதி. 'அணுகுண்டு போட்டாலும் அசர மாட்டார்' என்று ஊரில் யாரையாவது சொல்வார்கள். அந்த ஒப்பீடு இவருக்கும் அப்படியே பொருந்தும்.

    ஒரு சமயம் இவரது படப்பிடிப்பில் முக்கியமான நடிகர் வரவில்லை. அவர் வரவில்லை என்று இவரிடம் சொல்லப்பட்டதும், "அப்படியானால் இப்போது அவர் தேவைப்படாத காட்சிகளை படமாக்குவோம்'' என்று சாதாரணமாக கூறிவிட்டு அதற்கான வேலைகளை முடுக்கி விட்டார். இவர் இயக்கத்தில் குப்பத்து ராஜா, நீச்சல் குளம் உள்பட 5 படங்களில் காமெடி டிராக்கில் நடித்திருக்கிறேன்.

    ஸ்ரீதர்: என்னைக் கண்டுபிடித்தவர் என்பதால் எப்போதும் இவர் மீது மரியாதை அதிகம். இவர் இயக்கத்தில் வெண்ணிற ஆடை தவிர சிவந்த மண், அவளுக்கென்றோர் மனம், குளிர்கால மேகங்கள், நானும் ஒரு தொழிலாளி என 4 படங்களில் நடித்திருக்கிறேன்.

    வித்தியாசமான சிந்தனையாளர் 'வசன' சினிமாவை 'காட்சி' சினிமாவாக்கி, தமிழ் சினிமாவை புதிய தளத்திற்குள் கொண்டு சென்றவர். புது நடிகர் - நடிகைகளை நடிக்க வைப்பது என்பது எவ்வளவு சிரமமான காரியம்! இருந்தாலும் தான் எதிர்பார்க்கிற நடிப்பையும் வாங்கிவிட்டு, அவர்களையும் புகழேணியில் ஏற்றி விடுவதென்பது இவர் மாதிரியான பிறவிக் கலைஞர்களுக்கே சாத்தியம்.

    டி.ராஜேந்தர்: 'ராகம் தேடும் பல்லவி' படத்தில் நடிக்கிறப்பதான் டைரக்டர் டி.ராஜேந்தர் எனக்கு அறிமுகம். அந்தப் படத்தில்கூட தயாரிப்பு நிர்வாகிதான் என்னை நடிக்க ஒப்பந்தம் செய்தார். 'ஒருதலைராகம்' படம் மூலமாகத்தான் இவர் சினிமாவுக்கு வந்தார். அந்தப்படத்தை இவரே டைரக்ட் செய்தார்னு நினைத்து, அவரிடம் இந்தப்பட செட்டில் வாழ்த்து சொன்னேன். அந்தப் படத்துக்கு நான் டைரக்டர் இல்லை என்று வாழ்த்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

    இவர்கிட்ட நான் ஆச்சரியப்பட்ட விஷயம், எப்பவுமே வசனத்தை எழுதி வெச்சு சொல்லித்தரமாட்டார். நடிக்கிறபோதுதான் மளமளன்னு வாயாலே வசனத்தை சொல்லித் தருவார். ஒரு சீன்ல நடிக்கிறப்ப இவர் கொடுத்திருந்த வசனத்துடன் ஒரு வரி சேர்த்து பேசிட்டேன். கரெக்டா கண்டுபிடித்தவர், "இது என் வசனத்தில் இல்லியே!'' என்றார். பதிலுக்கு நான், "காட்சியில் பேசறப்ப என்னையறியாம அந்த வசனமும் சேர்ந்து வந்துட்டுது. வேணாம்னா அந்த வசனத்தை நீக்கிடுங்க சார்'' என்றேன். "இருக்கட்டும்'' என்று அனுமதித்தார்.

    அடுத்த சீன்லயும் அவர் தராத ஒரு வசனம் என்னிடம் வந்துவிழ, அதுக்கும் எதுவுமே சொல்லலை. பிறகு நானா வசனம் ஏதாவது சேர்த்து சொன்னால் சிரிக்க ஆரம்பிச்சிடுவார். இவர் நாக்கில் சரசுவதி இருக்கிறாள். இவரிடம் பழகிய பிறகுதான், என் மாதிரியே இவரும் ஜாதக நம்பிக்கை உள்ளவர்னு தெரிஞ்சது. அப்ப தொடங்கி இப்ப வரை அதாவது "ராகம் தேடும் பல்லவி'' தொடங்கி, லேட்டஸ்டா அவர் டைரக்ட் செய்த "வீராசாமி'' வரை அவரோட படத்துல தொடர்ந்து நான் இருக்கிறேன் என்றால், அதுக்கு என் மீதான அவரோட அன்புதான்

    ராமசுந்தரம்: நான் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பி.ஏ. படித்தபோது என்னுடன் படித்தவர் ராமசுந்தரம். கல்லூரிக் காலத்திலேயே இவர் என் நல்ல நண்பர். சேலத்தில் புகழ் பெற்ற சினிமாக் கம்பெனியான மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்தின் மகன் இவர். கல்லூரிப் படிப்பை முடித்ததும் இவர் திரைப்படத் துறைக்குள் வந்துவிட்டார். நான்கு கில்லாடிகள், சி.ஐ.டி. சகுந்தலா என 2 படங்களை இயக்கவும் செய்தார். பழைய நட்பை மறக்காமல் இந்த 2 படத்திலும் என்னை நடிக்க வைத்தார். இரண்டுமே வெற்றிப் படங்களாயின. சி.ஐ.டி. சங்கர் படத்தில் நடிகை சகுந்தலா நாயகியாக நடித்ததால் அவருடன் 'சி.ஐ.டி' என்ற பெயர் ஒட்டிக்கொண்டது.

    இந்தப் படங்களைத் தொடர்ந்து ராமசுந்தரம், "வல்லவன் ஒருவன்'', "ஜஸ்டிஸ் விஸ்வநாத்'' என மேலும் 2 படங்களை இயக்கினார். இவையும் வெற்றிப்படமே. உடல் நலக்குறைவு காரணமாக தொடர்ந்து அவர் படங்களை இயக்கவில்லை.

    ராம.நாராயணன்: டைரக்டர் ராம.நாராயணன் என் மீது தனி அக்கறை கொண்டவர். அவரது இயக்கத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். டென்ஷன் இல்லாமல் படப்பிடிப்பை நடத்தும் இயக்குனர். இவரது இயக்கத்தில் "நாகபாலம்மா'' என்ற தெலுங்குப் படத்திலும் நடித்திருக்கிறேன். "குறைந்த பட்ஜெட், குறுகிய நாட்கள் படப்பிடிப்பு, வெற்றிப்படம்'' என்ற   இவரது 'பார்முலா' தமிழ் சினிமாவில் ரொம்பவே பிரபலம்.

    கலைமணி: டைரக்டர் கலைமணி தமிழ் சினிமாவில் சிறந்த எழுத்தாளர் என்று தெரியும். 'மனைவி சொல்லே மந்திரம்' படம் மூலம் சிறந்த தயாரிப்பாளராகவும் தன்னை வெளிப்படுத்தினார். இந்தப் படத்தில் நடிக்க தயாரிப்பாளர் தரப்பில் தயாரிப்பு நிர்வாகி என்னை அணுகினார்.

    "சம்பளம் எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டார். எழுத்தாளர் படம் எடுக்கிறார் என்றதும் சாதாரண சம்பளம் கேட்டேன். இதுபற்றிய தகவல் கலைமணிக்கு தெரியவந்ததும், எப்படி இவ்வளவு கம்மியா சம்பளம் கேட்டீங்க?'' என்று உரிமையுடன் கோபித்துக்கொண்டார். நியாயமான சம்பளம் தருவேன் என்றவர், அவரே எனக்கு சம்பளம் நிர்ணயித்தார். இவர் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்த 'ஏழை ஜாதி'' படத்திலும் நான் நடித்தேன். அப்போது பட உலகில் எதிர்பாராத விதமாய் ஸ்டிரைக் வந்துவிட்டது. ஸ்டிரைக் இன்று முடியும். நாளை முடியும் என்று எதிர்பார்த்து நாட்களை நகர்த்தினால், ஸ்டிரைக் மட்டும் முடிவுக்கு வருவதாக இல்லை. இருந்தாலும் அவ்வப்போது கலைமணி சாருக்கு போன் செய்து, "எப்ப சார் ஸ்டிரைக் முடியும்?'' என்று கேட்டுக்கொண்டிருப்பேன்.

    இப்படி பட உலகம் ஸ்தம்பித்துப்போன ஒரு நாளில் திடீரென கலைமணி சார் எங்கள் வீட்டுக்கு வந்தார். "ஷூட்டிங் தள்ளிப்போச்சுல்ல. ஒரு மாசமா படப்பிடிப்பு எதுவும் நடக்கலை. அதுதான் உங்களை பார்த்துட்டுப் போகலாம் என்று வந்தேன்'' என்று சொன்னவர்,  கொஞ்சமும் எதிர்பாராமல் ஆயிரம் ரூபாயை எடுத்து என் கைகளுக்குள் வைத்துவிட்டார். "தப்பா நினைக்கக் கூடாது. எவ்வளவோ செலவு இருக்கும். தற்சமயத்துக்கு வெச்சுக்குங்க'' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

    எனக்கு நிஜமாகவே அதிர்ச்சி. படப்பிடிப்பு நின்று போன நிலையில் அவருக்கே ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். அப்படியிருந்தும் படத்தில் நடிக்கிற கலைஞர்கள் பற்றிய சிந்தனையும் அவர் மனதில் ஓடியிருக்கிறதே... உதவ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறதே! எத்தனை பெரிய மனசு. படத்தில் பணியாற்றிய மற்ற கலைஞர்களுக்கும் அவர் இது மாதிரி அவசரத் தேவைக்கு உதவியதாக பின்னாளில் அறிந்தேன்.

    டைரக்டர் மனோபாலா இயக்கிய பல படங்களில் நான் இருப்பேன். நடிகர் அர்ஜூன் தயாரித்த 3 படங்களிலும் என்னை நடிக்க வைத்திருக்கிறார்.
    Next Story
    ×