என் மலர்

    சினிமா

    ஜோதிடக் கலையை கற்ற மூர்த்தி
    X

    ஜோதிடக் கலையை கற்ற மூர்த்தி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தனக்கு ஜோதிடர் சொன்ன ஜோதிடம் பலித்ததால், ஜோதிடக் கலையைக் கற்றுத் தேர்ந்தார், வெண்ணிற ஆடை மூர்த்தி. "நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆவீர்கள்" என்று ரஜினிகாந்துக்கு ஜோதிடம் சொன்னார்.

    தனக்கு ஜோதிடர் சொன்ன ஜோதிடம் பலித்ததால், ஜோதிடக் கலையைக் கற்றுத் தேர்ந்தார், வெண்ணிற ஆடை மூர்த்தி. "நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆவீர்கள்" என்று ரஜினிகாந்துக்கு ஜோதிடம் சொன்னார்.

    நாடகங்களில் நடித்த அனுபவத்தில் "வெண்ணிற ஆடை" மூர்த்தியும் ஒரு நாடகம் உருவாக்கினார். "லட்சுமி கல்யாண வைபோகமே" என்ற அந்த நாடகத்தில் பழமை மாறாத ஒரு கிராமத்தை கண்முன் நிறுத்தினார். இந்த நாடகம் சிங்கப்பூர், இலங்கை என வெளிநாடுகளிலும் நடந்தது.

    இந்த நாடகம் நூறாவது நாளாக மேடையேறியபோது, டைரக்டர் கே.பாலசந்தர், கவிஞர் வைரமுத்து போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

    வெண்ணிற ஆடை மூர்த்தி சினிமாவுக்காக 2 கதைகள் எழுதினார். "மாலை சூடவா" என்ற கதை, கமலஹாசன் நடிக்க, சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் படமானது.

    "ருசி" என்ற பெயரில் எழுதிய இன்னொரு கதையில் மோகன் நடிக்க, "அன்னக்கிளி" டைரக்டர்கள் தேவராஜ் - மோகனில் ஒருவரான மோகன் இயக்கினார். இந்த இரண்டு படங்களுக்கும் வசனமும் எழுதினார், வெண்ணிற ஆடை மூர்த்தி.

    இந்த காலகட்டத்தில் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையும் மூர்த்திக்கு பெரிய அளவில் வந்துவிட்டது. ஜோதிடம் தொடர்பாக புத்தகங்களை கருத்தூன்றி படித்து, அதில் தன்னை மெருகேற்றிக் கொண்டார். தனக்கு நடிக்கும் வாய்ப்பு தேடிவரும் என்று சொன்ன ஜோதிடர் `பண்டிட்' கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை அடிக்கடி சந்தித்து, ஜோதிடம் தொடர்பான புதுப்புது விவரங்களை தெரிந்து கொண்டார். இந்த முயற்சியில் ஜோதிடம் தொடர்பான 2 கட்டுரைகளை ஜோதிடர் ஆசிரியராக இருந்த பத்திரிகையிலேயே எழுதினார். ஒருநாள் அந்த ஜோதிடரே இவரிடம், "உனக்கு ஜோதிடம் நன்றாக வருகிறது. அதிலும் உன்னை வளர்த்துக்கொள்" என்றிருக்கிறார்.

    வெண்ணிற ஆடை மூர்த்திக்கு ஜோதிடமும் அத்துப்படியான நேரத்தில் ரஜினியின் ஜாதகத்தை வாங்கிப் பார்த்தார். அப்போது ரஜினியின் சினிமா எதிர்காலம் பற்றி தெளிவாக சொன்னார். அதுபற்றி வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியதாவது:-

    "ரஜினியுடன் நான் "முள்ளும் மலரும்" படத்தில் சேர்ந்து நடித்தேன். நீண்ட இடைவெளிக்குப்பிறகு, "சிகப்பு சூரியன்" படத்தில் நடித்தோம். அப்போது அவர் நடிப்பில் வளர்ந்து வந்த நேரம். ஒருநாள் படப்பிடிப்பு இடைவேளையில் ரஜினி தனது ஜாதகத்தை என்னிடம் காட்டினார். அதைப்பார்த்த நான், "நடிப்பில் பெரும் புகழ் உங்களை வந்து சேரும். பெரிய சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு வந்துடுவீங்க" என்றேன். ரஜினி சிரித்துக்கொண்டார். அடுத்தடுத்து அவர் நடிப்பில் வந்த படங்கள் பெரிய அளவில் வசூலைத்தர, ஜோதிடம் சொன்னது போலவே சூப்பர் ஸ்டாராகி விட்டார்.

    அதுமாதிரி நடிகர் திலகம் சிவாஜியுடனும் எனக்கு ஒரு ஜோதிட அனுபவம் உண்டு. சிவாஜி சார் நடித்த "அஞ்சல் பெட்டி-520" படத்தில் நடித்தேன். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது என்னிடம் பிரியமாக பேசுவார். "யோவ்! காமெடியன்! இங்கே வாய்யா" என்றுதான் அழைப்பார்.

    நான் ஜோதிடக் கலையை கற்றுத் தேர்ந்த நேரத்தில் ஒருநாள் படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்த்தேன்.

     "வணக்கம் சார்! நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டேன்.

    "உனக்கு ஜோசியம் தெரியுமாமே" என்று கேட்டார், சிவாஜி.

    "தெரியும் சார்" என்றேன்.

    "உன் ஜோசியம் எனக்கு என்னய்யா சொல்லுது?" - கேட்டார் சிவாஜி.

    நான் அவரிடம் ஜாலியாக, "ஜோசியம் பார்த்தால் எல்லாரும் பணம் கொடுப்பாங்க. நீங்க என்ன கொடுப்பீங்க?" என்று கேட்டேன்.

     "என்னடா நீ! வம்பு பிடிச்ச ஆளா இருப்பே போலிருக்கே" என்று சிரித்த சிவாஜியிடம், "இல்ல சார்! உங்களுக்கு பார்த்து சொல்றதைவிட பெரிய பாக்கியம் என்ன இருக்கிறது?" என்று சொன்னவன், அவர் ஜாதகத்தை வரவழைத்து அப்போதே   பார்த்தேன்.

    நான் அவரிடம், "அரசியலில் உங்களுக்கு ஒரு பதவி வர இருக்கிறது" என்றேன்.

    நான் சொன்னதை நம்பவில்லை என்பதை அவரது கண்கள் காட்டிக் கொடுத்தன.

    ஆனால் ஜோதிடம் பொய்யாகவில்லை. சில நாட்களிலேயே ராஜ்யசபா எம்.பி.யாக சிவாஜியை நியமித்து அறிவிப்பு வந்தது."

    இவ்வாறு மூர்த்தி கூறினார்.

    சினிமாவில் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆருடன் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்ற ஏக்கம் மூர்த்திக்கு இருந்தது. எம்.ஜி.ஆர். நடித்த "ராமன் தேடிய சீதை" படத்தில் அப்படியொரு வாய்ப்பும் வந்தது. ஆனால் துரதிருஷ்டம்! கதையுடன் ஒட்டவில்லை என்று கூறி வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த காமெடிக் காட்சிகளையே நீக்கி விட்டார்கள்!

    இதுபற்றி மூர்த்தி கூறியதாவது:- 

    "எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிவிட்டேன். ஆனாலும் செட்டில் அவர் நடித்த நாட்களில் எனக்கு ஷூட்டிங் இருக்காது. எம்.ஜி.ஆர். நடித்துக் கொடுத்து 2 நாட்களுக்குப் பிறகே என்னை அழைத்தார்கள். டி.எஸ்.பாலையா, ஜெயலலிதா நடித்த காட்சியில் நானும் நடித்தேன். நான் நடித்த காட்சி படத்தில் இடம் பெறவில்லை என்பது படம் ரிலீசான பிறகே எனக்குத் தெரியும்.

    அவர் படத்தில் நான் இல்லையே தவிர, நான் நடித்த நாடகம் ஒன்றில் என் நடிப்பை மனதார பாராட்டிய வள்ளல் அவர். மேஜர் சுந்தர்ராஜன் நடத்திய "தீர்ப்பு" என்ற நாடகம் நூறாவது நாள் கண்டது. நூறாவது நாள் விழாவுக்கு எம்.ஜி.ஆர். வந்திருந்தார். முழு நாடகத்தையும் பார்த்து ரசித்தார். அவர் பேசும்போது, "மேஜர் சுந்தர்ராஜன் நன்றாக நடிப்பார் என்பது எனக்குத் தெரியும். இந்த நாடகத்தில் `ராமு' என்ற கேரக்டரில் நடித்தவரின் நடிப்பை நான் இதுவரை பார்த்ததில்லை. அருமையாக நடிக்கிறார். என் தாயின் ஆசியோடு சொல்கிறேன். அவர் நல்லா வருவார்" என்றார்.

    நாடகத்தில் `ராமு'வாக நடித்தது நான்தான். அவரின் மனப்பூர்வ பாராட்டு எனக்கு `ஆசி'யாக அமைந்தது. நடிப்பில் எனக்கு வளர்ச்சியாகவும் அமைந்தது.

    எம்.ஜி.ஆர். அவர்களின் பாராட்டுக்கு இணையான பாராட்டு நான் நடிக்க வரும் முன்பே எனக்கு கிடைத்து விட்டது. அப்போது என்னைப் பாராட்டியவர் நகைச்சுவை மாமேதை `கலைவாணர்' என்.எஸ்.கிருஷ்ணன்.

    அப்போது நான் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. படித்துக்கொண்டிருந்தேன். கல்லூரி விழாவில் நாங்கள் "ஐம்பதும் அறுபதும்" என்ற பெயரில் ஒரு காமெடி நாடகம் போட்டோம். கல்லூரி விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - மதுரம் தம்பதிகள் வந்திருந்தார்கள். எங்கள் நாடகத்தை பார்த்த தம்பதியர் இருவருமே பாராட்டினார்கள். மதுரம் அம்மா பேசும்போது, என்னை சுட்டிக்காட்டி, "இந்தப் பையன் ரொம்ப நல்லா `ஆக்ட்' பண்றான்" என்றார். கலைவாணர் என்னை அழைத்து, "நல்லா படிப்பா. படிப்பை பூர்த்தி பண்ணிட்டு அப்புறமா சினிமாவுக்கு வா" என்று கூறினார்.

    நான் சினிமா பற்றி சிந்திக்காத அந்தக் காலத்தில், என்னை நடிக்க வரச்சொல்லி வாழ்த்திய கலைவாணரின் ஆசியும் எனக்கு கிடைத்திருப்பதாகவே கருதுகிறேன்."

    இவ்வாறு கூறினார், வெண்ணிற ஆடை மூர்த்தி.
    Next Story
    ×