என் மலர்

    சினிமா

    கே.பாலசந்தரின் தாமரை நெஞ்சம் விஜயகுமாரிக்கு பதில் சரோஜாதேவி நடித்தார்
    X

    கே.பாலசந்தரின் "தாமரை நெஞ்சம்'' விஜயகுமாரிக்கு பதில் சரோஜாதேவி நடித்தார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டைரக்டர் கே.பாலசந்தர் டைரக்ஷனில் உருவான "தாமரை நெஞ்சம்'' படத்தில், கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு விஜயகுமாரியை தேடி வந்தது. ஆயினும், அந்த வாய்ப்பை நழுவ விட்டார். அவருக்கு பதிலாக சரோஜாதேவி நடித்து பெரும் புகழ் பெற்றார்.
    டைரக்டர் கே.பாலசந்தர் டைரக்ஷனில் உருவான "தாமரை நெஞ்சம்'' படத்தில், கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு விஜயகுமாரியை தேடி வந்தது. ஆயினும், அந்த வாய்ப்பை நழுவ விட்டார். அவருக்கு பதிலாக சரோஜாதேவி நடித்து பெரும் புகழ் பெற்றார்.

    "பூம்புகார்'' படத்தின் மூலம் புகழின் சிகரத்தைத் தொட்ட விஜயகுமாரி, தன் திரை உலகப் பயணம் பற்றி தொடர்ந்து கூறியதாவது:-

    "கலைஞர் வசனத்தில் கண்ணகி வேடத்தில் நடித்த எனக்கு, மற்றொரு அதிர்ஷ்டமும் வந்தது. உதயசூரியன் பட நிறுவனம் தயாரித்த "எதையும் தாங்கும் இதயம்'' படத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய வசனத்தை பேசி நடித்தேன்.

    இந்தப் படத்தில் என் கணவருக்கு நான் ஜோடியாக நடித்தேன். கே.ஆர்.ராமசாமி, சந்திரகாந்தா, பி.எஸ்.சரோஜா ஆகியோர்

    நடித்தனர்.இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிற்கு அண்ணா, எம்.ஜி.ஆர் அவர்களும் வந்திருந்தார்கள். இதை எங்களுக்க கிடைத்த பாக்கியமாக கருதினோம். அதோடு இந்தப்படம் வெற்றிப்படமாக அமைந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் "தெய்வத்தின் தெய்வம்'' படத்திற்குப் பிறகு ஒரு புதிய படம் தயாரித்தார். அந்தப் படத்தில் நடிப்பதற்காக என்னை கேட்டார்கள். என்னால் அந்த சமயத்தில் நடிக்க முடியவில்லை. இதனால் அவருக்கு வருத்தம் இருந்தது. உடனே அவர் கோபமாக "நான் இந்த விஜயாவிற்கு பதில் இன்னொரு விஜயாவை உருவாக்குகிறேன்'' என்று சொல்லி, எனக்குப் பதிலாக புதுமுகத்தைப் போட்டு எடுத்தார். அந்தப் புதுமுகம்தான் கே.ஆர்.விஜயா! அந்தப்படம் "கற்பகம்!''

    ஒரு நல்ல படத்தை இழந்து விட்டோமே என்கிற வருத்தம் இன்னும்கூட எனக்கு இருக்கிறது.

    எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தின் சார்பில், கலைஞர் கதை வசனத்தில் நாங்கள் நடத்தி வந்த "மணி மகுடம்'' நாடகத்தை படமாக எடுத்தோம். இதில் என் கணவர், நான், ஜெயலலிதா, எம்.என்.நம்பியார் எல்லோரும் நடித்திருந்தோம். படம் முடிந்து, பிரத்தியேகக் காட்சி காமதேனு தியேட்டரில் போடப்பட்டது. படத்தைப் பார்க்க அறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர், பேராசிரியர், ம.பொ.சி. அவர்கள் மற்றும் தி.மு.கழகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர்.

    படம் முடிந்தவுடன் பாராட்டு விழா நடைபெற்றது. மேடையில் அமர்ந்திருந்தவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய கருத்தைச் சொல்லி எங்களை வாழ்த்தினார்கள். அண்ணா அவர்கள் பேசும்போது, "இந்தப் படத்தில் விஜயகுமாரி புரட்சிகரமான வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரை வாழ்த்துகிறேன்'' என்று என்னை பாராட்டிப்பேசியது, இன்னும் என் நினைவில் இருக்கிறது.

    இவ்வளவு பெரியவர்களுடைய வாழ்த்துக்களை எல்லாம் பெற்ற இந்தப்படம், ஏன் சரியாக ஓடவில்லை என்பதற்கான காரணத்தை இன்னும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    எஸ்.எஸ்.ஆருடன் அதிகப்படங்களில் நடித்தவள் நான்தான்.

    வடநாட்டில் ராஜ்கபூர் - நர்க்கீஸ் ஜோடி புகழ் பெற்று விளங்கியதுபோல தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் - விஜயகுமாரி ஜோடி புகழ் பெற்றது. யாரும் எதிர்பாராதவிதமாக ராஜ்கபூர் - நர்க்கீஸ் ஜோடி பிரிந்ததுபோல, நானும் எஸ்.எஸ்.ராஜேந்திரனும்

    பிரிந்தோம்.எஸ்.எஸ்.ஆரை பிரிந்த பிறகு, `எப்படியும் வாழலாம்' என்று நினைக்காமல், `இப்படித்தான் வாழவேண்டும்' என்று எனக்குள் ஒரு வட்டம் போட்டுக்கொண்டு அதற்குள் வாழ்ந்து வந்தேன். என்னால் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு எனக்கு சோதனை காலம் ஆரம்பமானது. என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை.

    இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த என் மாமியார் "இதோ, பாரம்மா! நீ சும்மா குழம்பிக்கொண்டு படங்களில் நடிக்காமல் இருக்காதே. மீண்டும் படங்களில் நடிக்கிற வழியைப் பார்'' என்று கூறி, எனக்கு தைரியம் கொடுத்தார்கள்.

    என்னை நம்பி என் குழந்தை, அப்பா, பாட்டி, அக்கா, தங்கை என்று ஒரு கூட்டமே இருந்தது. குழம்பிப்போய் இருந்த எனக்கு ஒரு நல்ல முடிவு கிடைத்தது.

    சினிமா... நான் ஆசைப்பட்ட சினிமா! அந்த சினிமா ஒன்றுதான் என்கூடவே இருந்து எனக்கு உதவப்போகிறது என்பதை உணர்ந்து கொண்டு, நான் மீண்டும் நடிக்க ஆரம்பித்தேன். டைரக்டர் ராமண்ணாவின் படம் "பவானி.'' இதில் நான் நடிக்க சம்மதித்தேன். இந்தப்படத்தில் ஜெய்சங்கர், அசோகன், மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், எல்.விஜயலட்சுமி எல்லோரும் நடித்தோம்.

    அந்த சமயத்தில் நான் திடீரென்று தேனாம்பேட்டை வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது. அப்போது எனக்கு உடனடியாக குடியிருக்க வீடு தேவைப்பட்டது.

    அப்போது தி.நகரில் ஒரு வீடு விலைக்கு வருகிறது என்று கேள்விப்பட்டு விசாரித்ததில் அந்த வீடு வீனஸ் கிருஷ்ணமூர்த்திக்கு சொந்தமானது என்று தெரிந்து கொண்டேன். அவருடைய "கல்யாணப்பரிசு'' படத்தில் நான் நடித்திருந்ததால், எனக்கு அவரை நன்கு தெரியும். ஆதலால் அவரிடம் சென்று என் நிலையை விளக்கி எனக்கு அந்த வீட்டை விலைக்குத் தரும்படி கேட்டேன். அவரும் சம்மதித்தார்.

    பிறகு அவரிடம், "எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்யவேண்டும்'' என்றேன். அதற்கு வீனஸ் கிருஷ்ணமூர்த்தி, "என்ன?'' என்று கேட்டார்.

    "வீட்டின் விலையில் ஒரு பகுதியை இப்போது கொடுத்து விடுகிறேன். மீதியை படங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து விடுகிறேன்'' என்றேன். அதற்கு அவரும் சம்மதித்தார்.

    தேவர் பிலிம்ஸ் சின்னப்பா தேவர் அண்ணன் அவர்களுக்கு, என் அப்பாவை நன்றாகத் தெரியும். கோயமுத்தூரிலேயே நன்கு பழக்கம். அதனால் நான் என் அப்பாவை தேவர் அண்ணனிடம் சென்று, வீடு வாங்குவதற்கான பணத்தை கடனாக கேட்கச் சொன்னேன். தேவர் அண்ணன் அவர்களும் மறுநாளே அவருடைய தம்பி திருமுகத்திடம் பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

    நான் திருமுகத்திடம் சொன்னேன்: "தேவர் அண்ணனிடம் சொல்லுங்கள். எனக்கு நடிக்க படம் கொடுத்து, இந்தப் பணத்தை கழித்துக் கொள்ளச் சொல்லுங்கள்'' என்றேன். அவரும் "சரி'' என்று சொல்லிவிட்டு சென்றார். பிறகுதான் தெரிந்தது. தேவர் அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்களிடம் கேட்காமல் எதையும் செய்யமாட்டார் என்று. எம்.ஜி.ஆர். அவர்கள் சொல்லித்தான் தேவர் அண்ணன் எனக்குப் பணம் கொடுத்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன்.

    அதன் பிறகு அந்தப்பணத்தை தேவர் அண்ணன் அவர்கள் தயாரித்த "விவசாயி'', "தேர்த்திருவிழா'' ஆகிய இரண்டுப் படங்களில் நடித்து நான் சொன்ன மாதிரியே கடனை அடைத்து விட்டேன்.

    அதன் பிறகு என் வீட்டில் என்ன விசேஷம் நடந்தாலும் தேவர் அண்ணனை கூப்பிட்டுத்தான் விளக்கேற்றி வைக்கச் சொல்வேன்.

    சடையப்ப செட்டியார் தயாரித்த "கணவன்'' படத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஜோடியாக நடித்தார்கள். ப.நீலகண்டன் டைரக்ட் செய்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாக நடித்தேன்.

    மல்லியம் புரொடக்ஷஸ் படம் "ஜீவனாம்சம்.'' இதில் ஜெய்சங்கர் ஜோடியாக நடித்தேன். இந்தப்படத்தில்தான் நடிகை லட்சுமி
    அறிமுகமானார்.

    சுபலட்சுமி மூவிஸ் கம்பெனி படம் "டீச்சரம்மா.'' டைரக்டர் புட்டண்ணா. கதை - வசனம் பாலமுருகன். இந்தப் படத்தின் கதை வித்தியாசமானது. தோழிக்காக தன்னுடைய காதலை தியாகம் செய்யும் ஒரு வித்தியாசமான டீச்சர் வேடம் எனக்கு. படம் நன்றாக

    ஓடியது.பிற்காலத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்-அமைச்சராக இருந்தபோது, இந்தப்படம் டெலிவிஷனில் ஒளிபரப்பப்பட்டது. டி.வி.யில் படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர், எனக்கு போன் செய்து என்னை வாழ்த்தினார். "படம் ரொம்ப நல்லா இருக்கு. நீ நன்றாக நடித்திருக்கிறாய். உன்னுடைய நடிப்பு உயர்ந்த இடத்தை அடைந்துள்ளது'' என்று, எப்போதோ நடித்த படத்திற்கு டி.வி.யினால் எனக்கு எம்.ஜி.ஆரின் வாழ்த்து கிடைத்தது.

    "டீச்சரம்மா'' படப்பிடிப்பின்போது டைரக்டர் கே.பாலசந்தர் அவர்கள் அவருடைய படத்தில் நடிக்க என்னைக் கேட்டார்கள். நான் அவரிடம், `வேறு யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர் `ஜெமினிகணேசன், வாணிஸ்ரீ' என்றார். உடனே நான், `டீச்சரம்மா படத்திலும் நானும் வாணிஸ்ரீயும்தான் நடிக்கிறோம். அது உங்களுக்கு சரியாக வருமா?' என்று கேட்டேன்.

    கே.பாலசந்தர் படத்தில் நடிக்க ஒவ்வொருவரும் துடித்துக்கொண்டிருக்கும்போது நான் அசட்டுத்தனமாக இப்படிக் கேட்டு, அந்தப் படத்தை தவறவிட்டு விட்டேன். அந்தப் படம் "தாமரை நெஞ்சம்.'' பாலசந்தர் எனக்குத் தருவதாகச் சொன்ன வேடத்தில் சரோஜாதேவி நடித்து பெரும் புகழ் பெற்றார். அந்தப்படம் அமோக வெற்றி பெற்றது.

    அப்போது, "அடி போடி பைத்தியக்காரி'' என்று என்னைப்பார்த்து நானே பாடவேண்டும் போல் இருந்தது!

    அதன் பிறகு "மகனே நீ வாழ்க'' படத்தில் ஜெய்சங்கருடனும், "எல்லைக்கோடு'' படத்தில் ரவிச்சந்திரனுடனும், "தெய்வ சங்கல்பம்'' படத்தில் ஏவி.எம்.ராஜனுடனும், "கல்லும் கனியாகும்'' பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்திரராஜனுடனும், "அமுதா''வில் ரவிச்சந்திரனுடனும், "மகளுக்காக'' படத்தில் ஏவி.எம்.ராஜனுடனும் இணைந்து நடித்தேன்.

    அடுத்து கே.சங்கர் டைரக்ஷனில் "சுப்ரபாதம்'' என்ற படத்தில் நடித்தேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 108 விஷ்ணுகோவில்களிலும், மற்றும் வடநாட்டில் உள்ள புண்ணிய ஸ்தலங்களில்எல்லாம் நடந்தது.

    ஜி.உமாபதி அவர்கள் எடுத்த படம் "ராஜராஜசோழன்.'' தமிழ்நாட்டின் முதல் சினிமா ஸ்கோப் படம் இது. ஏ.பி.நாகராஜன் டைரக்ட் செய்தார். நான், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கு மனைவியாக நடித்தேன்.

    "பார் மகளே பார்'' படத்தில் அவருக்கு மகளாக நடித்தேன். "அன்பைத்தேடி'' படத்தில் அவருக்கு அக்காவாக நடித்தேன். "குங்குமம்'' படத்தில் அவருக்கு முறைப்பெண்ணாக நடித்தேன். "சவாலே சமாளி'' படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தேன்.

    ஆக குடும்பத்தில் எத்தனை உறவு முறைகள் இருக்குமோ அத்தனை பாத்திரங்களிலும் நடிகர் திலகத்துடன் நான் நடித்திருக்கிறேன். இது வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத பாக்கியம். அதுமட்டுமல்ல. அத்தனை படங்களும் வெற்றிப்படங்கள்! இது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம்.'' - இவ்வாறு விஜயகுமாரி கூறினார்.
    Next Story
    ×