என் மலர்

    சினிமா

    இளையராஜா இசை அமைப்பில் பாலமுரளிகிருஷ்ணா பாடினார்
    X

    இளையராஜா இசை அமைப்பில் பாலமுரளிகிருஷ்ணா பாடினார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிரபல கர்நாடக இசைப்பாடகர் பாலமுரளிகிருஷ்ணா, இளையராஜா இசையில் ஒரு பாட்டு பாடினார். பாடி முடித்ததும் அவர் இளையராஜாவை பாராட்டினார்.
    பிரபல கர்நாடக இசைப்பாடகர் பாலமுரளிகிருஷ்ணா, இளையராஜா இசையில் ஒரு பாட்டு பாடினார். பாடி முடித்ததும் அவர் இளையராஜாவை பாராட்டினார்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    இசை மேதையாக ரசிகர்கள் கொண்டாடும் பாலமுரளிகிருஷ்ணா எனது இசையில் பாடப்போகிற விஷயம் தெரியவந்ததுமே எனக்கு கொஞ்சம் கவலையாகி விட்டது. எல்லாம் நல்லபடியாக நடந்து முடியவேண்டுமே.

    ரிகர்சலுக்கு வந்தார். பயத்தோடு பாடலைச் சொன்னேன். அவர் எழுதிக்கொண்டார்.

    ஸ்வரத்தை பாடலின் வரிகள் மேல் எழுதிப் பாடினார். அதுதான் "சின்னக்கண்ணன் அழைக்கிறான்'' என்ற பாட்டு.

    பாடலைப் பாடியவர், "இதுதான் புதிது. சரணத்தில் உச்சஸ்தாயியில் இரண்டாவது வரிக்கு அமைந்திருக்கும் இசையில் `ஸகரிக மரினி' என்று ஆரோகணபரமான பிரயோகத்தை - அவரோகணத்தில் அமைத்திருக்கிறீர்களே! அதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். சாதாரணமாக கர்நாடக கச்சேரிகளில் கூட வித்வான்கள் இந்த ராகத்தை நீண்ட நேரம் பாடமாட்டார்கள். அதை இவ்வளவு இனிமையான பாடலாக அமைத்து விட்டீர்களே'' என்று மனம் விட்டுப் பாராட்டினார். என் இசைப் பயணத்தில் முக்கியமானதொரு ஊக்குவிப்பாக அமைந்து என்னை உற்சாகப்படுத்திய நிகழ்ச்சி இது.

    ஓரளவு படங்கள் வந்து, ஓய்வில்லாத வேலைகள் தொடர்ந்தன. இருந்தாலும் நானும், பாஸ்கரும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில்தான் இருந்து வந்தோம்.

    ரெக்கார்டிங்குக்கு நான், அமர், பாஸ்கர் மூவரும் டாக்சியில்தான் போவோம்.

    ஒருநாள் வீட்டில் இருந்து மூவரும் டாக்சியில் கிளம்பினோம். மந்தைவெளி வழியாக, நந்தனம் மவுண்ட்ரோடு கிராசிங்கில், சிக்னலுக்காக காத்திருந்தோம். காலை 6-30 மணி இருக்கும். அப்போது பக்கத்தில் ஒரு கார் வந்து நின்றது.

    அதில் முன் சீட்டில் சாண்டோ சின்னப்பதேவர் கையை கார் கதவில் வைத்தபடி உட்கார்ந்திருந்தார். அப்படியே பக்கத்தில் நின்றிருந்த எங்கள் டாக்சியை கவனித்தார். என்னை பின்சீட்டில் பார்த்து ஆச்சரியப்பட்டு, "ஏய் கேவலப்படுத்தாதீங்கப்பா'' என்றார்.

    எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. தொடர்ந்து அவரே பேசினார்.

    "என்னப்பா நீங்க! இவ்வளவு பெரிய பேர் எடுத்திட்டு டாக்சியிலே போறீங்களேப்பா! கேவலப்படுத்தாதீங்க. சீக்கிரமா ஒரு கார் வாங்குங்கப்பா'' என்றார்.

    இதற்குள் சிக்னல் கிடைத்துவிட, "சரிங்க அய்யா'' என்று விடைபெற்றோம்.

    அதற்கும் முதல் வாரம்தான் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் கையால் `கலைமாமணி' விருது வாங்கியிருந்தேன்.

    அங்குதான் தேவர் அவர்களிடம் என்னை பட அதிபர் கலைஞானம் அறிமுகம் செய்து வைத்தார்.

    நான்தான் இளையராஜா என்று அவரால் நம்பமுடியவில்லை. என்னை மேலும் கீழுமாக பார்த்துக் கொண்டே இருந்தார்.

    அப்போது பார்த்து நடிகை கே.ஆர்.விஜயா அங்கு வர, "ஏம்மா, இங்க பார்த்தியா? இவருதான் இளையராஜாவாம்மா'' என்று ஆச்சரியப்படும் பாணியில் அறிமுகப்படுத்தினார்.

    கலைமாமணி விருது விழாவில் நிகழ்ச்சிக்கு அரை மணி நேரம் முன்னதாகவே எம்.ஜி.ஆர். வந்துவிட்டார். எங்களை தனியாக சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்.

    அவரைப் பார்த்ததும் வணக்கம் போடுபவர்களும், மரியாதை செலுத்தும் அதிகாரிகளுமாய் வந்து போய்க்கொண்டிருந்தாலும் எங்களுடன் சர்வசாதாரணமாக பேசிக்கொண்டிருந்தார்.

    பழகுவதில் அவரது எளிமை கண்டு எனக்குள்ளும் அவரிடம் சகஜமாகப் பேசும் ஆர்வம் எழுந்தது. நானும் சாதாரணமாக, "அண்ணே! உங்ககூட ரெயிலில் வந்தது ரொம்ப ரொம்ப மோசம்ணே'' என்றேன்.

    "ம்... என்ன சொல்றே?'' தனது ஆச்சரியத்தை கேள்விக்குறியாக்கினார் எம்.ஜி.ஆர்.

    "ஆமாண்ணே! அன்னைக்கு மதுரை பாண்டியனில் நீங்க மதுரைக்குப் போனப்போ, அதே வண்டியில் நானும் இருந்தேண்ணே.''

    "ஆமாமா? எனக்கும் சொன்னாங்க'' என்று சொன்ன எம்.ஜி.ஆர், "ஆமா அதுல என்ன மோசம்'' என்று திருப்பிக் கேட்டார்.

    "இல்லண்ணே! நீங்க அந்த ரெயிலில் வர்றது வெளியே தெரிஞ்சு, காலையில் ரெயில் சோழவந்தான் விட்டுக் கிளம்பும்போது, ரசிகர்கள், வண்டி கிளம்பவும் செயினைப் பிடித்து இழுத்து நிறுத்தி உங்களைப் பார்க்க ஆர்வத்தோடு அவங்க செய்த கலாட்டா...''

    நான் சொல்லி முடிப்பதற்குள் எம்.ஜி.ஆர். குறுக்கிட்டார். "ம்... ம்... அப்புறமா?'' என்று கேட்டார்.

    "இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒருமுறை செயினைப் பிடித்து இழுத்து வண்டியை நிறுத்துவதும், நீங்கள் கையைக் காட்டியவுடன் விட்டு விடுவதுமாக இருந்தார்கள். இப்படி காலையில் 6 மணியில் இருந்து 7 மணிக்குள் மதுரை வரவேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் அன்றைக்கு காலை 10 மணிக்குத்தானே மதுரைக்கே வந்து சேர்ந்தது.''

    நான் இப்படிச் சொன்னதும், "ஆமா தம்பி... மக்கள் அவ்வளவு ஆர்வமா இருந்தா நாம என்ன செய்யமுடியும்?'' என்று மக்கள் தன் மீது வைத்திருந்த அன்பை சிலாகித்தபடி சொன்னார் எம்.ஜி.ஆர்.

    இதற்குள் விழா தொடங்கி விட்டது. எம்.ஜி.ஆர். கையால் கலைமாமணி விருது வாங்கினேன்.

    தேவர் அன்றைக்கு என்னைப் பார்த்தவர், இப்போது வாகனப் பயணத்தின்போது மறுபடியுமாக என்னைப் பார்க்கிறார். டாக்சியில் நாங்கள் வருவதைப் பார்த்ததும், சொந்தமாய் கார் வாங்கும் எண்ணத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்து விட்டார்.

    அடித்தளம் என்று உறுதியாக சொல்லக் காரணம் உண்டு.

    சொந்தக்கார் விஷயத்தை நான் சாதாரணமாக எடுத்துக்கொண்டு `நேரம் வரும்போது அமைவது அமையும்' என்று இருந்துவிட்டேன்.

    ஆனால் பாஸ்கரும், அமரும் அதை சீரியசாக எடுத்துக்கொண்டார்கள். ஜி.ராமநாதனின் உதவியாளராக இருந்த ராமச்சந்திரனின் தம்பி டி.பி.துரைமணி ரிலையன்சில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் போய் கார் வாங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவிட்டார்கள்.

    அது டி.எம்.டபிள்ï 3335 என்ற அம்பாசிடர் கார்.

    என் ஆர்மோனியம் பெட்டி போல எனது இன்னொரு உடன் பிறப்பு.

    படங்கள் அதிகமானதால் உதவியாளர் தேவைப்பட்டது. பாஸ்கரின் நண்பர் ஒருவர் வந்தார்.

    இத்தனை காலங்களும் எங்கள் குடும்பத்தின் முக்கியமான நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டு வந்த என் இளவயது உயிர்த்தோழன் எம்.சுப்பிரமணியன் அவ்வப்போது என்னைப் பார்த்துப்போக வருவதுண்டு.

    அப்படி வந்த ஒரு நாள் அவரிடம், "ஏம்ப்பா! உனக்கு காலேஜில் என்ன சம்பளம்?'' என்று கேட்டேன். நான் இப்படிக் கேட்பது - சுப்பிரமணியனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். "ஐயாயிரம் ரூபாய் வாங்கறேன். என்னப்பா திடீர்னு இப்ப இந்தக் கேள்வி?'' என்று கேட்டார்.

    "அதை நான் தந்தால் என்னிடம் மானேஜராக வேலை செய்ய முடியுமா?'' என்று கேட்டு விட்டேன்.

    "ஏய்! என்னப்பா இது?''

    "ஆமாப்பா. நாமெல்லாம் ஒண்ணா இருந்தா நல்லாயிருக்கும் இல்லையா?'' என்றேன்.

    அவருக்கு திருமணமாகி குழந்தையும் இருந்தது.

    அவர் ஆவடியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் புரொபசராக இருந்தார். நான் கேட்டதற்காக வேலையை விட்டுவிட்டு உடனே எங்களிடம் வந்துவிட்டார்.

    தமாசுக்காக அவரை, "என்ன மானேஜர் ரெடியா? போகலாமா? அடுத்து என்ன புரோகிராம்?'' என்று நான், அமர், பாஸ்கர் மூவருமே கிண்டல் செய்வோம்.

    அம்மாவும் வெற்றிலைப்பாக்கு போட்ட வாயோடு கன்னத்தில் கை வைத்தபடி எங்களை ஆச்சரியமாய் பார்ப்பார்கள். அதோடு, "அட போங்கப்பா! உங்களை பண்ணைபுரத்துல பார்த்த மாதிரி அப்படியே இருக்கு. இப்படியே கடைசிவரை இருங்கப்பா'' என்பார்கள்.

    Next Story
    ×