என் மலர்

    சினிமா

    தன்ராஜ் மாஸ்டரிடம் இசை பயின்ற இளையராஜா
    X

    தன்ராஜ் மாஸ்டரிடம் இசை பயின்ற இளையராஜா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    எல்லா வாத்தியங்களையும் வாசிக்கத் தெரிந்தவரும், பல இசைக் கலைஞர்களை உருவாக்கியவருமான தன்ராஜ் மாஸ்டரிடம் இளையராஜா இசை பயின்றார்.
    எல்லா வாத்தியங்களையும் வாசிக்கத் தெரிந்தவரும், பல இசைக் கலைஞர்களை உருவாக்கியவருமான தன்ராஜ் மாஸ்டரிடம் இளையராஜா இசை பயின்றார்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "திருச்சியில் நான் இசை அமைத்த நாடகமான ஓ.ஏ.கே. தேவரின் "மாசற்ற மனம்'' அரங்கேறிய பின், சென்னைக்குப்

    புறப்பட்டோம்.அப்போது, திருமதி கமலா அவர்களிடம், "கர்நாடக இசை அல்லது வெஸ்டர்ன் (மேற்கத்திய) இசை கற்றுக் கொடுக்க யாராவது இருந்தால் சொல்லுங்கள். நான் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்றேன்.

    "கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்கும் யாரையும் எனக்குத் தெரியாது. மேற்கத்திய இசை கற்றுத்தரும் மாஸ்டர் ஒருவர் இருக்கிறார். அவருடைய மாணவர் ஒருவரை எனக்கு தெரியும். அவரிடம் சொல்லி உங்களை அழைத்துப் போகச் சொல்கிறேன்'' என்றார், கமலா.

    அடுத்த நாள், நடிகர் டி.எஸ்.பாலையா அவர்களின் மூத்த மகன் சாய்பாபா (எம்.எஸ்.வி.யிடம் கிட்டார் வாசிப்பவர்) என் ரூமிற்கு வந்தார். கமலா அவர்கள் சொன்னதன் பேரில் வந்திருப்பதாகச் சொன்னார். இசையில் புகழ் பெற்ற மாஸ்டர் தன்ராஜிடம் அழைத்துப் போவதாகக் கூறினார்.

    அவசரம் அவசரமாக உடை மாற்றிக்கொண்டு அவருடன் புறப்பட்டேன். மைலாப்பூர் சாயிலாட்ஜ் 13-ம் நெம்பர் அறையில், பியானா மற்றும் பல இசைக் கருவிகள், இசை பற்றிய புத்தகங்களுடன் தன்ராஜ் மாஸ்டர் இருந்தார். இரண்டு மூன்று மாணவர்களுக்கு கிட்டாரில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

    சிறிது நேரத்தில், மாணவர்கள் எல்லோரும் சென்ற பிறகு, என்னை மாஸ்டருக்கு அறிமுகம் செய்து வைத்தார், சாய்பாபா.

    "இரண்டு நாள் கழித்து, காலை பத்து மணிக்கு வரச்சொல். பாடத்தை ஆரம்பிக்கலாம். வரும்போது, ஒரு நோட்டுப் புத்தகம், ஊதுபத்தி, தேங்காய், பூ, பழம், வெற்றிலைப்பாக்கு வாங்கிவர வேண்டும்'' என்று சாயிபாபாவிடம் தன்ராஜ் மாஸ்டர் கூறினார்.

    `சரி' என்று கூறிவிட்டு, நானும், சாய்பாபாவும் அங்கிருந்து புறப்பட்டோம்.

    நான் ரூமுக்குச் சென்றதும், பாரதி, பாஸ்கர் இருவரிடமும் நடந்ததைக் கூறி, "இனி இசை கற்பதற்கான பீஸ், நமது பட்ஜெட்டில் சேருகிறது. அதற்கு வேண்டிய நிதி ஒதுக்க வேண்டியது தலைவர்களின் பொறுப்பு'' என்றேன், சிரித்துக்கொண்டே.

    பாடம் தொடங்கும் நாள் வந்தது. நோட்டுப்புத்தகம், பூ, தேங்காய் - பழம், ஊதுபத்தி, கற்பூரம் எல்லாம் வாங்கிக்கொண்டேன். குருதட்சணையாக பணம் வைக்க வேண்டும் என்று சாய்பாபா கூறியிருந்ததால், தட்டில் 25 ரூபாய் வைத்து, மாஸ்டரிடம் கொடுத்தேன்.

    தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டவுடன், "உன் பெயர் என்ன?'' என்று கேட்டார், மாஸ்டர்.

    "ராஜையா'' என்றேன்.

    "அதென்ன ராஜையா! இன்று முதல் உன் பெயர் ராஜா!'' என்றார், தன்ராஜ் மாஸ்டர்.

    பெயர் மாற்றத்தை இவ்வாறு வெகு எளிதாகச் செய்துவிட்டார்.

    பிறகு நோட்டுப் புத்தகத்தை திறந்து, "7'' என்ற எண்ணை, பட்டையடிக்கும் ஒரு பேனாவால் பச்சை மையில் எழுதினார். அதன்பின் ஏழுசுரங்களை எழுதிக் காட்டினார்.

    என் முதல் ஆசானின் கால்களைத் தொட்டு வணங்கினேன். அப்போது, என்னை அறியாது என் சுயமரியாதைக் கொள்கை விலகிவிட்டிருந்தது.

    சரி; மேலே என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தேன். அந்த நேரத்தில் வேறு சில மாணவர்கள் வந்துவிட்டார்கள்.

    மாஸ்டர் என்னைப் பார்த்தார்.

    "இன்றைக்கு என்ன கிழமை?''

    "வியாழன்!''

    சரி; நீ போய்விட்டு, ஞாயிற்றுக்கிழமை வா!'' என்றவர், சற்று யோசித்துவிட்டு, "வேண்டாம். ஞாயிற்றுக்கிழமை ரொம்பக் கூட்டமாக இருக்கும். திங்கட்கிழமை வந்துவிடு!'' என்றார்.

    `அடடா! இன்னும் நமக்கு நேரம் வரவில்லை போலிருக்கிறதே!' என்றபடி திரும்பினேன்.

    அவர் கூறியபடி திங்கட்கிழமை போனேன். `இன்றைக்காவது நிறைய பாடம் எடுப்பார்' என்று எதிர்பார்த்தேன்.

    ஆனால் அன்றைக்கும் அரை மணி நேரம்தான். மீண்டும் அடுத்த வாரம் வருமாறு சொன்னார்.

    "சார்! எனக்கு ஒரு வேலையும் இல்லை. நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். தினமும் வருகிறேனே!'' என்றேன்.

    "ஊகூம். அது ரொம்ப கஷ்டம். தினமும் ஒவ்வொரு வாத்தியத்திற்கும் நிறைய மாணவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு இடையில், உனக்கு மட்டும் தினமும் பாடம் எடுக்க முடியுமா? .... நான் பிறகு யோசித்துச் சொல்கிறேன்!''

    "சார்! நான் எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லவில்லையே!''

    "உன்னால் எவ்வளவு கொடுக்க முடியும்?''

    "மாதம் 25 ரூபாய்?''

    "சரி! சரி!''

    - இவ்வாறு கூறிய மாஸ்டர் பிறகு என்ன நினைத்தாரோ! "சரி நீ வேண்டுமானால் தினமும் வந்து போ! பாடத்திற்காக அல்ல. சும்மா, எனக்கு வேண்டிய வேலைகளைச் செய்யவேண்டும். சம்மதமா?'' என்று கேட்டார்.

    "ஓ! சம்மதம் சார்!'' என்றேன்.

    பொதுவாக, சினிமா உலகில் உள்ள எந்த இசைக் கலைஞரிடமும், "யாரிடம் பாடம் கற்றுக்கொண்டாய்?'' என்று கேட்டால், "தன்ராஜ் மாஸ்டரிடம்!'' என்றுதான் கூறுவார்கள். அவ்வளவு திறமை பெற்றவர். அவர் பெயரைச் சொல்லாதவர்கள் எவரும், எந்த இசை அமைப்பாளர் குழுவிலும் இடம் பெறமுடியாது.

    "மங்கம்மா சபதம்'', "சந்திரலேகா'' முதலான ஜெமினியின் படங்களின் வாத்தியக் குழுவில் முக்கிய இடம் வகித்தவர்.

    தன்ராஜ் மாஸ்டரிடம் வயலின், கிட்டார், பியானோ, ஹார்மோனியம், புல்லாங்குழல், பேஸ் கிட்டார், அக்கார்டின் முதலான வாத்தியங்களை கற்றுக்கொள்ள பல மாணவர்கள் வருவார்கள். எனக்குப்பாடம் இல்லாத நேரத்தில்கூட இவர்கள் பயிற்சி பெறுவதைப் பார்த்து, அந்தந்த வாத்தியங்களின் தனித்தன்மையைத் தெரிந்து கொண்டேன்.

    ஒருநாள், நானும், மாஸ்டரும் மட்டும் இருந்தோம்.

    "நீ ஹார்மோனியம் வாசிப்பேன் என்று சொன்னாய் அல்லவா? எங்கே, இந்த பியானோவில் ஏதாவது வாசி!'' என்று கூறினார், மாஸ்டர்.

    எனக்கு ஒரு நிமிடம் ஷாக். என்றாலும், அவர் இல்லாத நேரங்களில் சில சினிமாப் பாடல்களை பியானோவில் பிராக்டிஸ் செய்து வைத்திருந்தேன். எனவே கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, எம்.எஸ்.வி. அவர்கள் இசை அமைத்திருந்த "என்ன என்ன வார்த்தைகளோ...'' என்ற பாடலை பியானோவில் வாசித்தேன்.

    நான் வாசித்துக்கொண்டிருந்தபோதே சில மாணவர்கள் வந்துவிட்டார்கள். வாயைத் திறந்தபடி, ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தார்கள்.

    அவர்கள் முக பாவத்தை கவனித்த மாஸ்டர், அவர்கள் என் வாசிப்பை ரசிக்கிறார்கள் என்பதை கண்டு கொண்டார். அந்த மாணவர்களோ, என்னை மாஸ்டருக்கு வேண்டியவன் என்றும், அதனால்தான் சினிமாப்பாடல்களை எல்லாம் சொல்லித் தந்திருக்கிறார் என்று நினைத்தார்கள்.

    Next Story
    ×