என் மலர்

    சினிமா

    நாடகத்துக்காக பாட்டு எழுதி, இசை அமைத்தார் இளையராஜா
    X

    நாடகத்துக்காக பாட்டு எழுதி, இசை அமைத்தார் இளையராஜா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நாடகம் நடத்திய காலத்திலேயே, பாட்டு எழுதவும், இசை அமைக்கவும் ஆற்றல் பெற்றிருந்தார், இளையராஜா.

    நாடகம் நடத்திய காலத்திலேயே, பாட்டு எழுதவும், இசை அமைக்கவும் ஆற்றல் பெற்றிருந்தார், இளையராஜா.

    நாடக அனுபவங்கள் பற்றி அவர் தொடர்ந்து கூறியதாவது:-

    "நாடகத்தின் ஒரு காட்சிக்காக எனது டி-ஷர்ட்டை வாங்கி பாரதிராஜா போட்டுக்கொண்டு, நாடகத்திலும் நடித்துவிட்டு வந்தார். அதுமுதலே எனக்குள் 'நான் போட்டிருப்பது பாரதிராஜாவின் ஷர்ட் என்று யாராவது நினைத்துக்கொண்டு விட்டால் என்னாவது?' என்ற கேள்வி எழுந்தபடி இருந்தது.

    இப்படி நினைத்த நான் அடுத்த கணமே யாரும் எதிர்பாராத விதமாய் ஒரு காரியம் செய்தேன். நாடகத்தில் ஒரு சீனில் சம்பந்தமே இல்லாமல் நான் போய் நின்றேன்.

    என்னைப் பார்த்ததும் பாரதிராஜா திகைத்துப் போனார். 'இவன் எதற்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல்...' என்ற கேள்வி அவர் கண்களில் தெரிந்தது. அவர் பேசத்தொடங்குவதற்குள், "செருப்புக்கு பாலீஷ் போடு'' என்று சொன்னேன்.

    "இதெல்லாம் செருப்பா?'' என்று நக்கலாக கேட்டார் பாரதிராஜா.

     "ஏய் அதைவிடு! உனக்கென்ன கூலி? அதைச் சொல்'' என்றேன்.

    செருப்புக்கு பாலீஷ் போடுவது போல் நடித்துக்கொண்டிருந்த பாரதிராஜா, "நாலணா கொடு'' என்றார். குரலில் இளக்காரம் தெரிந்தது.நானும் விடவில்லை. "இந்தா எட்டணா'' என்று பாக்கெட்டில் அடுத்த நாள் டிபன் சாப்பிட வைத்திருந்த எட்டணாவை தூக்கிப்போட்டேன். அதோடு இன்னொரு வெடிகுண்டையும் போட்டேன். "இந்தக் காலத்துல யார் டி-ஷர்ட் போடுறதுன்னே ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு. கண்ட பசங்கள்லாம் போட ஆரம்பிச்சிட்டாங்க'' என்று நான் பேசிக்கொண்டே புறப்பட, பாரதிராஜா முறைத்த முறைப்பு இருக்கிறதே, அப்பப்பா!

    அடுத்த நாள் காலையில் அதே டி-ஷர்ட்டுடன் அல்லி நகர வீதியில் உலவினேன். கூடவே பாஸ்கர் மட்டுமல்ல, பாரதிராஜாவும் என்னுடன் வந்தார், முந்தின நாள் நாடகத்தில் நான் செய்த குறும்பை முற்றிலும் மறந்தவராய். பழனி செட்டிபட்டி சவுடாம்பிகை கோவிலில் நாடகம் போடும் வாய்ப்பு பாரதிராஜாவுக்கு கிடைத்தது. அதே நாடகத்தை அல்லி நகரத்திலும் போட முடிவு செய்தார்.

    நாடகத்தில் நடிக்க மதுரை நடிகைகள் யாரும் கிடைக்கவில்லை. தேனியில் ஒரு நடிகை இருந்தார். அவரை போய்ப் பார்த்து பேசி ஒப்பந்தம் செய்தார். நாடகத்துக்கு ஒரு நாள் முன்பே நாடகக் குழுவினர் அனைவரும் பழனி செட்டிபட்டி போய்விட்டோம். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்தை எங்களுக்காக ஒதுக்கிக் கொடுத்தார்கள். ஒத்திகை, சாப்பாடு, தங்கல் எல்லாம் அங்கேதான். இங்கே தான், தேனியில் இருந்து நடிக்க வந்த நடிகைக்கும் பாஸ்கருக்கும் நட்பாகி விட்டது.

    தொழில் சார்ந்த நட்புதான். அதற்குக் காரணம், பாடத்தெரிந்த எந்த நடிகையானாலும், தபேலா, மிருதங்கம் வாசிப்பவர்களுடன் நட்பாகி விடுவார்கள். அவர்கள் பாடும்போது பக்க வாத்தியத்தை சரியாக வாசிக்காவிட்டால், அவர்கள் தாளம் தப்பிப்பாடுவது போலாகி விடுமே! இதனால், வாத்தியக்காரர்களோடு சுமூகமாகப் போவது நடிகைகளின் பழக்கம். இப்படியொரு நட்பாகி விட்டது தேனி நடிகைக்கும் "நாடகத்திற்கு எல்லாப் பாடல்களும் நம் சொந்தப் பாடல்களாக இருக்கவேண்டும். சினிமாப் பாடல்களை உபயோகிக்கக்கூடாது'' என்று பாரதிராஜா சொன்னதால், "தாயே சவடம்மா ஒரு கை கொடம்மா! வாழ்க்கை கொடம்மா'' என்ற பாடலை கம்போஸ் செய்தேன். ஏற்கனவே "பூட் பாலிஷ்'' பாட்டும் இருக்கிறது. அதோடு காமெடிக்காக "தெய்வத்தாய்'' படத்தில் வரும் "இந்தப் புன்னகை என்ன விலை?'' என்ற டியூனில் -   

    "இந்த வெங்காயம் என்ன விலை? - அது    
    கடைக்காரன் சொன்ன விலை - இந்த   
     வெண்டைக்காய் என்ன விலை? - அது    
    மண்டையை பொளக்கிற விலை''     என்ற பாடலையும் தயார் செய்திருந்தேன். இது தவிர -    

    "வெண்ணிலவின் காவலிலே    
    கங்கை நதி ஓடும்    
    கங்கை நதி ஓரத்திலே

    கண்ணன் மனம் பாடும்'' என்றொரு பாடலும், பாரதிராஜா சோகமாகப்பாட

    "இரவு முடிந்து விடும்
    இயற்கை விடிந்து விடும்
    கனவும் கலைவதைப்போல் காலம் முடிந்து விட்டால்'' என்ற பாடலும் (கங்கை) அமரன் எழுதி இசையமைத்திருந்தேன்.

    பாடலை கற்றுக்கொள்ளும் நேரத்தில் பாஸ்கருடன் தொடங்கிய தேனி நடிகையின் நட்பு, அந்தப்பெண் நடிக்காத நேரத்தில் தபேலாவின் பக்கத்தில் - அதாவது பாஸ்கரின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்ளும் அளவுக்குப் போய்விட்டது. இதை எல்லாம் ஒத்திகையின்போது பார்க்க நேர்ந்த பாரதிராஜா, 'இதை இப்படியே விட்டு வைக்கக்கூடாது' என்ற எண்ணத்தில் பாஸ்கரை தனியே அழைத்து கண்டித்துப் பார்த்தார். பாஸ்கர் கேட்டால்தானே. மறுநாள் நாடகம். முந்தின நாள் இரவு பள்ளிக்கூடத்தில்தான் தங்கல்.

    காலையில் நானும் பாரதியும் எழுந்த நேரத்தில், பாஸ்கரையும் அந்த நடிகையையும் காணவில்லை. பாஸ்கரும் நடிகையும் பள்ளியையொட்டி இருந்த வயல் வெளியின் வரப்பிலே, வேப்பங்குச்சியால் பல் துலக்கியபடியே பேசிக்கொண்டு வந்தார்கள். பாரதிராஜாவுக்கும் எனக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் பயங்கரச் சிரிப்பு வந்துவிட்டது. அவர்கள் எங்கள் எதிரே வந்துவிட்டார்கள். நடிகையை பாரதிராஜா கோபிக்க முடியாது. 'கம்'மென்றிருந்தார். முகமெல்லாம் சிரிப்பாக எங்களை பாஸ்கர் பார்த்தார். "என்னய்யா, இந்நேரம் வரைக்குமா தூங்கறது? சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு 'பைனல் ரிகர்சலுக்கு' ரெடியாக வேண்டாமா?'' என்று கேட்டார்.

    "ம்...ம்...'' என்றார் பாரதி.

    அந்த நடிகை போனதும், "எமகாதகப் பயடா நீ! சினிமாவில் காதலனும் காதலியும் வர்ற மாதிரி அப்படி என்னடா பேசிக்கிட்டு வந்தீங்க?'' என்று பாரதிராஜா கேட்டார்.

    "அதெல்லாம் வெளியே சொல்ல முடியுமாய்யா? ஏதோ சின்னஞ்சிறுசுங்கன்னா அப்படித்தான் இருக்கும்'' என்று கூறினார், பாஸ்கர்!

    "என்ன காதலா?'' - இது பாரதிராஜா.

    "சீச்சீ'' - பாஸ்கர் பதில்! "இன்னிக்கு நாடகம் முடியற வரைக்கும் நீ அவளோட பேசக்கூடாது'' - தடை உத்தரவு போட்டார், பாரதிராஜா.

    "நான் பேசவில்லை. அந்த நடிகையா என்கிட்ட வந்து பேசினாங்கன்னா?'' என்று பாஸ்கர் திருப்பிக் கேட்க, மூன்று பேருமே விழுந்து விழுந்து சிரித்தோம். தெருமுனையில் அன்றிரவு நாடகம் நடந்தது. முதன் முதலாக ஒரு நாடகத்துக்கு இசையமைத்த அனுபவம், எனக்கு மகிழ்ச்சியானதாகவே இருந்தது. பாடல்களை மக்கள் விரும்பி ரசித்தார்கள்.

    இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? நான் சொந்தமாக போட்ட மெட்டில் உருவான பாடல்களை விட, "இந்த புன்னகை என்ன விலை?'' மெட்டில் அமைந்த "இந்த வெங்காயம் என்ன விலை?'' பாடலுக்குத்தான் அதிக கைதட்டல்!
    Next Story
    ×