என் மலர்

    சினிமா

    16 படங்களுக்கு வசனம் எழுதினார், வாலி: டைரக்ட் செய்த படம் வடை மாலை
    X

    16 படங்களுக்கு வசனம் எழுதினார், வாலி: டைரக்ட் செய்த படம் "வடை மாலை''

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    10 ஆயிரம் பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, 16 படங்களுக்கு வசனம் எழுதினார்.
    10 ஆயிரம் பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, 16 படங்களுக்கு வசனம் எழுதினார்.

    அந்த படங்களின் விவரம் வருமாறு:-

    1. கலியுகக் கண்ணன்

    2. ஒரு கொடியில் இரு மலர்கள்

    3. முத்தான முத்தல்லவோ

    4. சிட்டுக்குருவி

    5. பெண்ணை சொல்லிக் குற்றமில்லை

    6. கடவுள் அமைத்த மேடை

    7. சாட்டையில்லாத பம்பரங்கள்

    8. வடை மாலை

    9. ஒரே ஒரு கிராமத்திலே

    10. மகுடி

    11. பெண்கள் வீட்டின் கண்கள்

    12. அவள் ஒரு அதிசயம்

    13. அதிர்ஷ்டம் அழைக்கிறது

    14. பெண்ணின் வாழ்க்கை

    15. என் தமிழ் என் மக்கள்

    16. புரட்சி வீரன் புலித்தேவன்.

    இவற்றில் "வடைமாலை'', வாலியும், ஒளிப்பதிவாளர் மாருதிராவும் இணைந்து டைரக்ட் செய்த படமாகும். ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்த இப்படம், 1982 மார்ச் மாதம் 12-ந்தேதி வெளிவந்தது.

    வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், "சிறந்த படம்'' என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. தமிழக அரசின் 1 லட்ச ரூபாய் விருதையும் பெற்றது.

    "என் தமிழ், என் மக்கள்'' என்ற படம், சிவாஜிகணேசன் நடித்து, சிவாஜி பிலிம்ஸ் தயாரித்ததாகும்.

    "புதுக்கவிஞர்கள் வருகை பற்றி உங்கள் கருத்து என்ன?'' என்று கேட்டதற்கு, வாலி கூறியதாவது:-

    "என்னுடைய சினிமாத் துறையில், பிற கவிஞர்களின் வருகை பற்றியோ அல்லது அவர்களின் ஆற்றல் பற்றியோ எந்த நாளும் நான் விமர்சித்ததில்லை. உண்மையைச் சொல்லப்போனால், அன்றைய கண்ணதாசனிலிருந்து இன்றைய காளிதாசன் வரை என்னிடம் அன்பு பாராட்டாத கவிஞரே கிடையாது.

    காரணம், இன்னொரு கவிஞன் வந்து என் இடத்தைப் பிடித்துக்கொண்டு விடுவான் என்கின்ற அற்ப சிந்தனையெல்லாம் என் மனதில் அரும்பியதில்லை. எவருடைய வளர்ச்சியைக் கண்டும் எனக்கு எள்ளளவும் காழ்ப்புணர்ச்சி இல்லை. எல்லோருக்கும் இறைவன் தன் திருவுள்ளப்படி படியளக்கிறான். நான் யார் குறுக்கே புகுந்து கூடாதென்று சொல்ல? அப்படிப்பட்ட கோமாளி அல்ல நான்.

    அதனால், தன்னுடைய ஆரம்ப காலத்திலேயே என்னுடைய அன்புத்தம்பி வைரமுத்து, ஒரு பேட்டியில் கீழ்க்கண்டவாறு சொன்னார்: "கண்ணதாசனுக்கும் நான் பாட்டெழுதுவது பற்றி கவலையில்லை; வாலிக்கும் என் வருகையில் வருத்தமில்லை'' என்று.

    இன்னும் சொல்லப்போனால், நான் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்ட பொழுது, "இது தமிழுக்குக் கிடைத்த பெருமை'' என்று என்னை வாழ்த்திக் கடிதம் எழுதிய முதல் நபரே, தம்பி வைரமுத்துதான்.

    ஏவி.எம்.சரவணனோடு சேர்ந்து எனக்காக ஒரு பாராட்டு விழா நடத்தியதும் அவரே.

    இப்படியெல்லாம் அனைவரது அன்பையும் ஒரு சேரப் பெற்றிருக்கும் நான், இன்றைய சினிமாப் பாடல்களைப் பற்றி அன்றைய சினிமாப் பாடல்களோடு ஒப்பிட்டு, ஏதேனும் கருத்துச் சொல்லப்போனால், என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும் உள்ளங்கள் வருத்தப்படுமோ என்று அஞ்சி மவுனம் காத்து வந்திருக்கின்றேன்.

    இவ்வாறு வாலி கூறினார்.

    "பாட்டு எழுதி அதற்கு மெட்டமைப்பது நல்லதா? அல்லது மெட்டு போட்டு விட்டு, அதற்கு பாட்டு எழுதுவது நல்லதா?'' என்ற கேள்விக்கு பதில் அளித்து வாலி கூறியதாவது:-

    "என்னைப் பொறுத்தவரையில், இரண்டுமே சரியான வழிகள்தாம். போர்த்திக்கொண்டு படுத்தால் என்ன? படுத்துக்கொண்டு போர்த்தினால் என்ன?

    மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையிலும் சரி, இசைஞானி இளையராஜா இசையிலும் சரி, நான் எத்துணையோ பொருட்செறிவு மிகுந்த பாடல்களை அவர்கள் கொடுத்த மெட்டுக்கு எழுதியிருக்கிறேன்.

    உதாரணமாக இரண்டைச் சொல்கிறேன்:

    விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் மெட்டுக்கு நான் எழுதிய பாட்டுதான் "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் வரும் "உலகம் ஒரு பெண்ணாகி'' என்ற பாடல்.

    இளையராஜாவின் மெட்டுக்கு நான் எழுதிய பாட்டுதான் "தாய் மூகாம்பிகை'' படத்தில் வரும் "ஜனனீ... ஜனனீ...'' என்ற பாட்டு.

    இந்த இரண்டு பாட்டுகளும் தரமாக இல்லையா என்ன? தமிழ் சிதிலப்பட்டிருக்கிறதா, என்ன?

    ஒரு மெட்டுக்கான சிறந்த பாட்டை எழுதுவது எப்பொழுதும் சாத்தியமான காரியம்தான். ஆனால் அதற்குரிய கால அவகாசம், இன்றைய அவசர சினிமாவில் கிடைப்பதில்லை. இதுதான் உண்மையான நிலை.

    சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் இசையமைப்பாளர் என் வீட்டிற்கு வந்தார். அவர் இசையமைக்க இருக்கும் ஒரு படத்திற்கு பாட்டெழுத நான் ஒப்பந்தமாகியிருந்தேன். ஒரு மரியாதை நிமித்தம், என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வந்தார் அந்த இசையமைப்பாளர்.

    அவர் தந்தையை நான் பல்லாண்டுகளுக்கு முன்பே நன்கறிந்து பழகியவன். அதையும் எனக்கு நினைவுபடுத்தி, தன்னை அவருடைய மகன் என்று தெரிவித்துக் கொண்டார், அந்த இளம் வயது இசையமைப்பாளர்.

    "என்ன தம்பி! டியுன் கொண்டு வந்திருக்கியா?'' என்று நான் அன்போடு வினவினேன்.

    "இல்லை சார்! எனக்கு டியுன் போட்டு உங்ககிட்டக் கொடுக்க ரொம்ப நாழி ஆகாது. இருந்தாலும், எனக்கு என் டியுனைவிட, உங்க வார்த்தைகள்தான் முக்கியம். நீங்க எழுதிக் கொடுங்க... நான் நாலஞ்சு விதமா டியுன் போட்டு, உங்ககிட்ட காட்டுகிறேன்...'' என்றார் அந்த இளைஞர்.

    உடனே நான் சொன்னேன்: "தம்பி! இது ஒரு சிச்சுவேஷன் சாங் இல்லை. பசங்க ஜாலியாப் பாடுற பாட்டு. இதுக்கு ரிதம்தான் முக்கியம். அதனாலே நீ டியுன் போட்டு, அதற்கு நான் பாடல் எழுதினால்தான் நல்லாயிருக்கும். டியுனைப் போட்டு நாளைக்கு அனுப்பு. நான் பாட்டு எழுதி வைக்கிறேன். இருந்தாலும், `பாட்டெழுதி அதுக்கு டியுன் போடணும். வார்த்தைதான் முக்கியம்' அப்படின்னு நீ சொன்னதுக்கு என்னுடைய பாராட்டுகள்'' என்று சொல்லி, அந்த இசையமைப்பாளரை வாழ்த்தி அனுப்பினேன்.

    பிறகு, அந்த இளம் வயது இசையமைப்பாளரிடமிருந்து மறுநாள் டியுன் வந்தது... நான் பாட்டெழுதிக் கொடுத்து அனுப்பினேன்.

    பாட்டு பயங்கரமாக பாப்புலர் ஆனது.

    அந்த இளம் வயது இசையமைப்பாளர்தான், என் நண்பர் சேகரின் மைந்தன், ஏ.ஆர்.ரகுமான்.

    அப்போது நான் எழுதிக் கொடுத்ததுதான் "ஜென்டில்மேன்'' படத்தில் வருகிற "சிக்குபுக்கு ரயிலு'' பாடல்.''

    இவ்வாறு வாலி கூறினார்.



    Next Story
    ×