என் மலர்

    சினிமா

    கோவி.மணிசேகரன் சினிமாவில் தோல்வி - சின்னத்திரையில் வெற்றி
    X

    கோவி.மணிசேகரன் சினிமாவில் தோல்வி - சின்னத்திரையில் வெற்றி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சினிமாவில் தோல்வியைச் சந்தித்த கோவி.மணிசேகரன், டெலிவிஷனுக்கு தொடர்கள் எழுதி வெற்றி பெற்றார்.
    சினிமாவில் தோல்வியைச் சந்தித்த கோவி.மணிசேகரன், டெலிவிஷனுக்கு தொடர்கள் எழுதி வெற்றி பெற்றார்.

    "மனோரஞ்சிதம்'' திரைப்படம் வெளிவராமல் போனதால் மணிசேகரன் மனம் வருந்தினார் என்றாலும், சினிமா மோகம் அவரை
    விடவில்லை.

    கீதையை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய "யாகசாலை'' என்ற நாவலை சொந்தமாக படமாக்க எண்ணினார். 1,200 பக்கங்கள் கொண்ட பெரிய நாவல் இது.

    "இலக்கிய உலகில் பேரும் புகழுமாக இருக்கிறீர்கள். சினிமா நமக்குத் தேவையா?'' என்று மனைவி சொன்னதை அவர் கேட்கவில்லை.

    வேகமாக வசனங்களை எழுதி முடித்தார்.

    இவருடைய நாவல்களில் மனதைப் பறிகொடுத்து, இவருக்கு நண்பரானவர் ஜெமினிகணேசன். அவருக்கு படத்தில் ஒரு முக்கிய வேடம் கொடுக்கத் தீர்மானித்தார்.

    இதன்பின் நடந்தது பற்றி மணிசேகரன் கூறியதாவது:-

    "யாகசாலை நாவலைப் படித்துப் பாராட்டியவர், எம்.ஜி.ஆர். நான் அந்த நாவலைப் படமாக்கப்போகிறேன் என்பதை அறிந்து `இது புரட்சிகரமான நாவல். படமாக வந்தால், நாவலின் ஜீவன் கெட்டுப்போகும். படமாக்கும் முயற்சியைக் கைவிடுங்கள் என்று கூறினார்.

    நான் கேட்கவில்லை. அதாவது, என் விதி, அவர் அறிவுரையைக் கேட்க மறுத்து விட்டது!

    படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்தன.

    இந்தப் படத்தின் கதாநாயகி, நல்ல குடும்பத்தில் பிறந்து, விதி வசத்தால் கற்பை இழக்க, பிறகு அதுவே தொழிலாய் போய்விட, கடைசியில் நோய்வாய்படுகிறாள்.

    இந்தக் காலக்கட்டத்தில் "சிவப்பு ரோஜாக்கள்'' படத்தில் அறிமுகமாகியிருந்த வடிவுக்கரசிக்கு, கதாநாயகி வேடம் கொடுத்தேன்.

    படத்தில் இரு கதாநாயகர்கள். ஒருவர், கீதையில் வரும் கண்ணன் பாத்திரத்துக்கு ஒப்பானவர். அந்தக் கண்ணன் தேர் ஓட்டினான். இந்த கண்ணன் குதிரை ஓட்டுபவன். இந்தப் பாத்திரத்துக்கு பொருத்தமான நடிகர் அமையவில்லை. பலபேரை பார்த்தும் திருப்தி ஏற்படவில்லை.

    இன்று திரை உலகிலும், அரசியலிலும் விஸ்வரூபம் எடுத்துள்ள விஜயகாந்த், அப்போதுதான் திரைப்பட உலகுக்கு வந்திருந்தார். அவரை என்னுடைய `கண்ணன்' கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்த நேரத்தில், விதி விளையாடியது.

    என் கையில் போதிய பணம் இல்லை. படப்பிடிப்புக்கு செல்ல, மேலும் ரூ.30 ஆயிரம் தேவைப்பட்டது. அப்போது ஒரு புதுமுக நடிகர் என்னிடம் வந்தார். நல்ல கதாபாத்திரம் கொடுத்தால் ரூ.30 ஆயிரம் `பைனான்ஸ்' செய்வதாகக் கூறினார். இதனால் நான் விஜயகாந்தை இழக்க நேரிட்டது. அன்று நான் அவரை பயன்படுத்தி இருந்தால், ஒரு சரித்திரத்தின் முதல் அத்தியாயத்தைப் பார்த்தவனாக இருந்திருப்பேன். விதியின் சதியால், அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டாமல் போயிற்று.

    படப்பிடிப்பு தொடங்கியது. முதலில் வெளிப்புறக் காட்சிகளை எடுக்கத் தீர்மானித்தேன். மதராந்தகத்தின் அருகேயுள்ள கோட்டைக்காடு கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது. ஒய்.ஜி.மகேந்திரன், கே.நட்ராஜ், டி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் நடித்தனர்.

    மேற்கொண்டு, ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டபோது, மீண்டும் பணமுடை ஏற்பட்டது. அப்போது, இப்ராகிம் என்ற தயாரிப்பாளர் என்னை நாடி வந்தார். என்னுடைய "அகிலா'' என்ற நாவல், நடிகை சுஜாதாவுக்கு மிகவும் பிடித்தமானதாகும். அவர் சொல்லி, அக்கதையை என்னுடைய இயக்கத்தில் படமாக்க விரும்பி, இப்ராகிம் வந்திருந்தார்.

    வெளிப்படங்களுக்கு வசனம் எழுதி, டைரக்ட் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தேன். அதை அவரிடம் தெரிவித்து, "வேண்டுமானால் கதையை வாங்கிக் கொண்டு, நீங்களே தயாரியுங்கள். கூடுதலோ, குறைவோ, ஒரு தொகையை தவணை முறையில் கொடுக்காமல் மொத்தமாக கொடுத்துவிடவேண்டும்'' என்று தெரிவித்தேன்.

    அதன்படி அவர்கள் ஒரே `செக்' கொடுத்தார்கள். அந்தத் தொகை, "யாகசாலை'' படத்தை தொடர்ந்து உருவாக்க உதவியது.

    யாகசாலை தயாராகிக் கொண்டிருந்தபோதே, "அகிலா'' கதை "மீண்டும் பல்லவி'' என்ற பெயரில் படமாக வெளிவந்தது. `கதை: கோவி.மணிசேகரன்' என்று டைட்டிலில் போட்டார்கள்.

    "யாகசாலை'' 95 சதவீதம் முடிந்து விட்டது. ஜெமினிகணேசன் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் பாக்கி. இந்த நிலையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவருடைய சம்மதத்தைப் பெற்று அந்தப் பாத்திரத்தில் பூரணம் விஸ்வநாதனை நடிக்க வைத்தேன். அவரும் நன்றாக நடித்தார்.

    படம் ரிலீஸ் தேதியை நெருங்கியபோது, ஒரு கடன்காரர் வந்து மென்னியைப் பிடித்தார். படத்தை, "அவுட்ரைட்'' முறையில் நான் விற்று விட்டதால், படம் வெளியான பின்னர் பணம் வராது என்று அவர் நினைத்து விட்டார் போலும்!

    வீடு கட்டுவதற்காக வாங்கியிருந்த நிலத்தை விற்று, கடனை அடைத்தேன்.

    "யாகசாலை'' ரிலீஸ் ஆகியது. நான்கே நாளில் ரிசல்ட் தெரிந்து விட்டது. படம் "அவுட்!'' சென்னை எமரால்டு தியேட்டரில் மட்டும் நான்கு வாரம் ஓடியது.

    அன்றே சினிமாவுக்கு தலைமுழுகத் தீர்மானித்தேன். ஒரு சனிக்கிழமையன்று, எண்ணை வாங்கி வரச்செய்து, தலைமுழுகினேன்!

    என்னிடம் புகழ்வாய்ந்த - உறுதியான பேனா இருந்ததால், என் வாழ்க்கை தப்பியது. இல்லையென்றால், `நடுத்தெரு நாராயணன்' ஆகியிருப்பேன். நான் வணங்கும் சக்தி என்னைக் காப்பாற்றினாள்.

    தொடர்ந்து இலக்கியப்பணிகளில் ஈடுபட்டேன்.

    சென்னை தொலைக்காட்சிக்கு, புதுமுகங்களை வைத்து நான் தயாரித்த "ஊஞ்சல் ஊர்வலம்'' என்ற தொடர், பெரிய வெற்றி பெற்றது.

    அதன் பிறகு திரிசூலி, அக்னிப் பரீட்சை முதலான தொடர்களும் வெற்றி பெற்றன.

    பெரிய திரையில் வெற்றி பெறாமல் போன நான், சின்னத்திரையில் வெற்றி கண்டேன்.

    சினிமாவில் இருந்து விடுபட்டு இலக்கியத்தில் கவனம் செலுத்தியதால், 3,571 பாடல்கள் கொண்ட "கோவி.ராமாயண''த்தை என்னால் எழுத முடிந்தது.

    நான் விதி பற்றி பல முறை குறிப்பிட்டேன். நமக்கு நல்ல வாய்ப்பு வரும்போது, விதி குறுக்கிட்டு கெடுத்து விடும். உதாரணத்துக்கு ஒன்று சொல்வேன்.

    இந்நாளைய இணையற்ற நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 1973-ல் சினிமா உலகில் நுழைய முயற்சி செய்து கொண்டிருந்த சிவாஜிராவ். நான் பாலசந்தரிடம் பயிற்சி பெற்றுவிட்டு, சினிமா தயாரிக்கலாம் என்று இருந்த நேரம்.

    ரஜினியுடன் நடிப்பு பயின்ற கோபால் என்ற நண்பர், ரஜினிக்கு வாய்ப்பு கேட்டு வந்தார். படம் தொடங்கும்போது நிச்சயம் அவர் இடம் பெறுவார் என்று கூறினேன்.

    ரஜினி என் வீட்டுக்கு வருவார். சிகரெட் வித்தைகளை பிள்ளைகளிடம் காட்டி மகிழ்விப்பார்.

    இதற்கிடையே ரஜினி, "அபூர்வராகங்கள்'' படத்தில் அறிமுகம் ஆகிவிட்டார். ஏராளமான படங்களுக்கு ஒப்பந்தம் ஆனார்.

    "தென்னங்கீற்று'' படம் ஆரம்பம் ஆனதும், ரஜினியிடம் பேசினேன். "குரு! இருபது நாட்களுக்கு என்னை விட்டு விடுங்கள். அப்புறம் ஒரு வாரம் பெங்களூர் வந்து உங்கள் மனதைக் குளிரச் செய்கிறேன்'' என்றார்.

    ஆனால், படத் தயாரிப்பாளரோ இதற்கு சம்மதிக்கவில்லை. ஏற்கனவே, மற்ற நடிகர் - நடிகைகளிடம் பெற்ற `கால்ஷீட்'படி உடனே படத்தைத் தொடங்க வேண்டும் என்றார். இதனால் என் படத்தில் ரஜினி இடம் பெறவில்லை. இதை விதி என்று சொல்லாமல், வேறு எப்படி சொல்வது?

    சினிமா உலகில் நுழைந்து விடவேண்டும் என்ற ஆசை கொண்ட இளைஞர்களும், இளம் நங்கையர்களும் ஏராளம். அவர்களுக்கு ஒன்று

    சொல்வேன்:`சினிமா என்பது பல ரசவாத வித்தைக் தெரிந்த ஒரு அழகான மாயமோகினி. அந்த மோகினியிடம் சென்றால், மீள்வது அரிது. அந்த மோகினியின் வித்தையில் பாதியேனும் தெரிந்தவர்கள் தப்பித்து திரும்பி வரலாம்; அல்லது மோகினியை அடிமைப்படுத்தி, அவளைக் காதலிக்கச் செய்யலாம். அந்த வித்தை தெரியாதவர்கள் நுழைந்து விட்டால், அந்த மோகினி நம் ரத்தத்தை உறிஞ்சி, சக்கையாகத்தான்

    துப்புவாள்!''இவ்வாறு கோவி.மணிசேகரன் கூறினார்.

    மணிசேகரன் - சரசுவதி தம்பதிகளுக்கு அம்பிகாபதி, மாமல்லன், செல்வக்கண்ணன் என்ற மூன்று மகன்கள். பீலிவளை, அம்மங்கை, ஸ்ரீ, சமயபுரி, வானதி என்று ஐந்து மகள்கள்.

    மூத்த மகன் அம்பிகாபதி, இளம் வயதில் காலமாகிவிட்டார். மற்ற 7 பேரும் படித்து, பட்டம் பெற்றவர்கள். எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
    Next Story
    ×