என் மலர்

    சினிமா

    ரஜினியுடன் நெருங்கிப் பழகிய நாட்கள்: விஜயகுமார் வெளியிடும் தகவல்கள்
    X

    ரஜினியுடன் நெருங்கிப் பழகிய நாட்கள்: விஜயகுமார் வெளியிடும் தகவல்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விஜயகுமார் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய நேரத்தில், ரஜினி வில்லனாக தனது நடிப்பு அத்தியாயத்தை தொடங்கியிருந்தார்.
    விஜயகுமார் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய நேரத்தில், ரஜினி வில்லனாக தனது நடிப்பு அத்தியாயத்தை தொடங்கியிருந்தார். விஜயகுமார் கதாநாயகனாக நடித்த "மாங்குடி மைனர்'' உள்ளிட்ட சில படங்களில், ரஜினி வில்லனாக நடித்திருக்கிறார்.

    ரஜினி பற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "நான் முதலில் தங்கியிருந்த புதுப்பேட்டை முரளி வீட்டில்தான் பின்னாளில் ரஜினியும் தங்கியிருக்கிறார். பிறகு நான் புரசைவாக்கம் விடுதிக்கு வந்துவிட்டேன்.

    ஒருநாள் படப்பிடிப்பு முடிய நேரமாகி விட்டது. படப்பிடிப்பில் ரஜினியும் இருந்தார். "நான் உங்களை `டிராப்' பண்ணிடறேன்'' என்று சொல்லி எனது காரில் ஏற்றிக்கொண்டேன்.

    புதுப்பேட்டையில் காரை ரஜினி நிறுத்தச்சொன்ன இடம், முன்பு நான் தங்கியிருந்த அதே இடம்! ரஜினியிடம் இதைச் சொன்னபோது அவரும் ஆச்சரியப்பட்டார்.

    1976-ல் டைரக்டர் பீம்சிங் இயக்கிய "உன்னிடம் மயங்குகிறேன்'' படத்தில் என்னுடன் ரஜினியும் நடித்தார். அப்போதெல்லாம் தூங்காமல் படப்பிடிப்பில் நான் கலந்து கொண்டிருந்தேன்.

    காலையில் ஒரு படப்பிடிப்பை முடித்து விட்டு வந்தவன், வாகினியில் இருந்த செட்டுக்கு மதியம்

    2 மணிக்கு வந்தேன். முந்தின இரவு தூங்காததால் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் தூங்க விரும்பி மேக்கப் ரூமுக்கு போனேன்.

    அங்கே ரஜினி இருந்தார். அடுத்த காட்சியில் அவருக்கு நடிக்க வேண்டிய பேண்ட் - ஜிப்பா கொடுத்திருந்தார்கள். ஜிப்பாவை போட ரஜினி முயற்சிக்கிறார்; முடியவில்லை! ரஜினியும் எப்படியாவது அந்த ஜிப்பாவை உடம்புக்குள் நுழைத்துவிட முயன்று கொண்டிருந்தார்.

    இதைப் பார்த்த நான் ரஜினியிடம், "இந்த சின்ன ஜிப்பா, உங்கள் உடம்புக்கு எப்படிப் பொருந்தும்'' என்று கேட்டேன்.

    "காஸ்ட்ïமர்'' இதைத்தான் கொடுத்திட்டுப் போனார்'' என்றார், ரஜினி.

    நான் உடனே காஸ்ட்ïமரை அழைத்து, "இந்த ஜிப்பா இவருக்குப் பொருந்தவில்லை. வேறு ஜிப்பா கொண்டு வந்து கொடுங்கள்'' என்று கேட்டுக் கொண்டேன். உடனடியாக காஸ்ட்ïமர் வேறு ஜிப்பா வாங்கி வந்து கொடுத்தார். அது ரஜினிக்கு பொருத்தமாக இருந்தது. அதை அணிந்து கொண்டு, அன்றைய படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

    அன்றைய படப்பிடிப்பில் ஒரே ஷாட்டில் 4 பக்க வசனம் அவருக்கு கொடுத்திருந்தார்கள். `கடகட'வென அவருக்கே உரிய பாணியில் ஒரே டேக்கில் பேசி, காட்சியை ஓ.கே. பண்ணினார் ரஜினி.''

    இப்படிச் சொன்ன விஜயகுமார், ஆந்திர மாநிலம் நகரியில் "என் கேள்விக்கென்ன பதில்'' படப்பிடிப்பு நடந்தபோது, ஏற்பட்ட பரபரப்பான சம்பவம் ஒன்றையும் குறிப்பிட்டார்.

    "நகரியில் நான், ரஜினி உள்ளிட்ட நடிகர் குழுவினர் நடித்துக்கொண்டிருந்தோம். டைரக்டர் பி.மாதவன் டைரக்ட் செய்தார்.

    திடீரென பொதுமக்கள் கூட்டத்தில் நின்ற சிலர் வேண்டுமென்றே எங்களிடம் தகராறு செய்தார்கள். படப்பிடிப்பு கேமராவை பிடுங்கிக் கொண்டார்கள்.

    நான் அவர்களிடம் பேசிப்பார்த்தேன். அவர்களோ வேறு ஏதோ நோக்கம் வைத்துக் கொண்டு எங்களிடம் தகராறு செய்து

    கொண்டிருந்தார்கள்.இனியும் இங்கே இருந்தால், அடுத்த கட்ட பிரச்சினை உருவாகலாம் என்று நினைத்து, டைரக்டரின் யோசனைப்படி அங்கிருந்து காரில் புறப்பட்டோம். ஒரு பியட் காரில் என்னையும், ரஜினியையும் டைரக்டர் பி.மாதவன் சார் சென்னைக்கு அனுப்பி வைத்தார். கார் புறப்பட்டதும் கூடியிருந்த கும்பலை விலக்கும் பொருட்டு, ஜன்னலுக்கு வெளியே நானும், ரஜினியும் கைகளை நீட்டி `ஓரம்போ ஓரம்போ' என்று சொல்லிக் கொண்டே வந்தோம்.

    `இனி பிரச்சினையில்லை' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட நேரத்தில், `கார்' மக்கர் செய்து ஒரு இடத்தில் நின்று விட்டது. என்ன முயற்சி செய்தும் கார் நகரவில்லை.

    உடனே, அந்த ஊரில் உள்ள பஸ் ஸ்டாண்டுக்கு சென்று, பஸ்சில் ஏறினோம். டாக்சி ஸ்டாண்ட் இருந்த இடத்திற்கு பஸ் வந்தபோது, அங்கே நிறுத்தி இறங்கிக் கொண்டு, டாக்சி பிடித்தோம். அம்பத்தூர் வரை அந்த டாக்சியில் பயணம் செய்தோம்.

    ரஜினியைப் பொறுத்தமட்டில் நடிக்க வந்த புதிதில் எப்படி இருந்தாரோ, அப்படியேதான் இப்போதும் இருக்கிறார். ஆனால் இன்றைக்கு அவருக்கு உள்ள பெயரும், புகழும் வேறு. இப்போதும் நண்பர்களிடம் முன்பு காட்டிய அதே அன்புதான்; அதே பண்புதான். எப்போதாவது சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்கும்போது, அவராகவே பழைய நாட்கள் பற்றி நினைவுபடுத்துவார்.

    ஒரு கட்டத்தில் நான் அவருக்கே அப்பாவாக நடிக்க வேண்டி வந்தது. கமலுக்கும் நான் அப்பாவாக நடித்திருக்கிறேன். இப்போதும் எங்களுக்குள் அதே அன்புதான் நீடிக்கிறது.

    நாட்டாமை படத்தில் நான் நடித்த `நாட்டாமை' கேரக்டர் பற்றி ரஜினி ரொம்பவும் புகழ்ந்து பேசினார். `அமைந்தால் இப்படி கேரக்டர் அமையவேண்டும்' என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்த கேரக்டர் அப்படியே அவருக்குள் ஊடுருவி, நாட்டாமையை தெலுங்கில் `பெத்தராயுடு' என்ற பெயரில் எடுக்கச் செய்து, அதில் நான் நடித்த நாட்டாமை கேரக்டரையும் செய்து அசத்தினார்.

    இந்த கேரக்டர் பற்றி அவர் என்னிடம் சொல்லும்போது, "விஜி! உங்க ஸ்டைல் எனக்கு வரலை. அதனால் நாட்டாமை கேரக்டரில் சுருட்டு பிடிக்கும் மேனரிசத்தை சேர்த்துக் கொண்டேன்.''

    மற்றவர்களின் திறமையை மதிக்கும் பண்பு, அவருக்கு எப்போதுமே உண்டு. என்னுடன் சேர்ந்து நடித்த காலகட்டங்களில் படப்பிடிப்புக்கு அவர் தாமதமாக வந்து நான் பார்த்ததே இல்லை. இப்போதும் இந்த நேரம் தவறாமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

    தொழிலை நேசிக்கத் தெரிந்தவர். அதனால்தான் அவரது தொழிலான சினிமாவும் அவரை சிகரத்தில்  ஏற்றி வைத்திருக்கிறது.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார். 
    Next Story
    ×