என் மலர்

    சினிமா

    வெண்ணிற ஆடை மூர்த்தி மனம் கவர்ந்த நட்சத்திரங்கள்
    X

    வெண்ணிற ஆடை மூர்த்தி மனம் கவர்ந்த நட்சத்திரங்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சினிமாவில் நடிக்க வரும் முன்னரே மூர்த்திக்கு நடிகர் நாகேஷ் பழக்கமாகியிருந்தார், மூர்த்தி. அப்போது சட்டக் கல்லூரி மாணவர். சென்னை சட்டக் கல்லூரியில் படித்தவர்.
    சினிமாவில் நடிக்க வரும் முன்னரே மூர்த்திக்கு நடிகர் நாகேஷ் பழக்கமாகியிருந்தார், மூர்த்தி. அப்போது சட்டக் கல்லூரி மாணவர். சென்னை சட்டக் கல்லூரியில் படித்தவர். தி.நகரில் உள்ள `கிளப் அவுசில்' அறை எடுத்து தங்கினார்.

    இந்த கிளப் அவுசில் கேரம்போர்டு விளையாட நடிகர்கள் நாகேஷ், ஸ்ரீகாந்த், கவிஞர் வாலி ஆகியோர் வருவதுண்டு. அப்போது இவர்களுடன் ஏற்பட்ட நட்பு, இன்றும் இவர்களை நல்ல நண்பர்களாக வைத்திருக்கிறது.

    அதுபற்றி மூர்த்தி கூறுகிறார்:-

    "நாகேஷ் சார் அப்போது ரெயில்வேயில் பணியாற்றிய வேலையை விட்டுவிட்டு, நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். சினிமா வாய்ப்பை எதிர்பார்த்து இருந்த நேரத்தில் கிளப் அவுசுக்கு வருவார். அவரும், ஸ்ரீகாந்தும், வாலியும் கேரம் போர்டில் ரொம்பவும் ஆர்வம் காட்டுவார்கள். மாலைப் பொழுது முழுக்க இவர்களுடன்தான் போகும்.

    சாதாரணமாக ஆரம்பித்த எங்கள் நட்பை, கேரம் போர்டு நெருக்கமாக்கியது. நாகேஷ் சார் அப்போதே என்னை உரிமையுடன் `வாடா போடா' என்பார். இரவு லேட்டானால் கிளப் அவுசில் உள்ள எனது அறையில் தங்கிச் செல்வார்.

    சில வருடங்கள் சந்திக்கவில்லை. நானும் சட்டம் முடித்து சினிமாவுக்கு வந்தேன். மறுபடி நாங்கள் சந்தித்தது முக்தா சீனிவாசனின் `தேன்மழை' படத்தில். இந்தப் படத்தில் நாகேஷ் சார் நடித்தார். நானும் இருந்தேன்.

    முதல் நாள் படப்பிடிப்பில் நாகேஷ் சாருக்கு என்னை அறிமுகம் செய்து வைக்க விரும்பிய டைரக்டர் முக்தா சீனிவாசன், என்னை அழைத்துக்கொண்டு நாகேஷ் சாரிடம் சென்றார். நாகேஷ் சாரை நெருங்கியதும், "மூர்த்தி! நாகேஷ் சாரை தெரியுமா? இவர்தான்'' என்று சரளமாக பேசியவர், நாகேஷிடம், "நாகேஷ்! இவர்தான் மூர்த்தி. நம்ம படத்தில் நடிக்கிறார்'' என்றார்.

    பார்த்த மாத்திரத்தில் என்னை நாகேஷ் தெரிந்து கொண்டார். பிறகு டைரக்டரிடம் "ஓய்! எனக்கு மூர்த்தியை அறிமுகப்படுத்துகிறீராக்கும்?'' என்று சொல்லிச் சிரித்தவர், எங்கள் `கிளப் அவுஸ்' கால நட்பு பற்றி விலாவாரியாக சொன்னார். டைரக்டர் மட்டுமல்ல, செட்டில் இருந்தவர்களும் ஆச்சரியப்பட்டார்கள்.

    தமிழ் சினிமாவில் அதுவரை `டான்ஸ்' ஆடத் தெரிந்த நகைச்சுவை நடிகர் என்றால் சந்திரபாபு என்ற நிலைமை இருந்தது. நாகேஷ் நடிக்க வந்த பிறகு, அந்த நிலைமை மாறிற்று. நடனத்திலும் அற்புதமான கோணங்களை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்தார். அப்போது புகழேணியின் உச்சியில் இருந்த அண்ணன் எம்.ஜி.ஆர்., அண்ணன் சிவாஜி இருவரின் படங்களிலும் இவர்தான் காமெடி என்கிற அளவுக்கு சினிமாவில் மிகப் பெரிய இடம் பிடித்தார்.

    அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு 3 கால்ஷீட் கூட கொடுத்தார். ஒரு கால்ஷீட் என்பது 8 மணி நேரம்.

    3 கால்ஷீட் என்னும்போது ஒரு நாள் முழுக்க ஓய்வேயில்லாமல் நடித்துக் கொடுக்க வேண்டும். அதாவது, தூங்கப் போகும் நேரத்தில் கூட ஏதாவது ஒரு செட்டில் நடித்துக் கொண்டிருப்பார். அந்த மாதிரி உழைத்து யாரையும் நான் பார்த்ததில்லை. ஷாட் இடைவேளையில் கிடைக்கிற அரை மணி, ஒரு மணி `கேப்'பில் தூங்கினால்தான் உண்டு. அப்படியும்கூட இவரை பார்க்கும் இயக்குனர்கள், `சார்! ஒரு மணி நேரம் வந்துட்டு போனீங்கன்னா உங்க போர்ஷனை முடிச்சிடுவேன்' என்று கேட்டுக் கொண்டிருப்பார்கள். நடிப்பில் தனி மேனரிசத்தைக் கையாண்டு ரசிகர்களை சிரிக்க வைத்ததற்குப் பின்னணியில் இவரது கடுமையான உழைப்பு உண்டு.

    நடிகர் தேங்காய் சீனிவாசன் நகைச்சுவையில் புது ஸ்டைல் மூலம் தன்னை நிலை நிறுத்தியவர். என் மீது ரொம்பவே பிரியம் கொண்டவர். ஒருமுறை என் ஆரோக்கியம் வேண்டி கீழ் திருப்பதியில் இருந்து ஏழுமலையான் கோவிலுக்கு நடந்தே சென்று வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறார். இதுபற்றி தெரிய வந்தபோது, நெகிழ்ந்து போனேன். கூப்பிட்டு உரிமையுடன் கண்டித்தபோது, என் கண்டிப்பை கண்டுகொள்ளவே இல்லை. அவருக்கே உரிய சிரிப்புடன் நகர்ந்து போய்விட்டார்.

    சினிமாவில் நான் உருவாக்கிய ஸ்டைலை, தேங்காய் சீனிவாசனும் பின்னாளில் செய்தார். ஆனால் அதை அவருக்கே உரிய ஸ்டைலில் செய்தபோது ரசிகர்கள் பெரிய அளவில் ரசித்தார்கள்.

    நடிகர் வி.கே.ஆர். சாரை (வி.கே.ராமசாமி) நடிப்புக்கு மட்டுமின்றி அவரது தலைசிறந்த பண்புக்காகவும் நேசித்திருக்கிறேன். தன்னைவிட சிறு வயதுக்காரர்களைக் கூட `வாங்க' என்று மரியாதையுடன் அழைப்பது அவருக்கே உரிய பண்பு.

    ஒருமுறை அவருடன் மைசூரில் படப்பிடிப்புக்கு போயிருந்தபோது பழைய கால கதைகளை சுவாரசியத்துடன் அவர் சொன்ன அழகு, இப்போதும் கண்ணுக்குள் நிற்கிறது. என்போன்ற நகைச்சுவை நடிகர்களில் பலரும் கதைக்குள் நுழைகிறபோதுதான் காமெடி வரும். இவரோ சாதாரணமாய் பேசிக்கொண்டிருக்கும்போதுகூட காமெடி இவரிடம் இருந்து அருவியாய் கொட்டும்.

    இன்றைக்கு `ஆச்சி' என்ற அடைமொழியுடன் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் `ஆச்சி' மனோரமாவுடன் சில படங்கள் சேர்ந்து நடித்திருக்கிறேன். செட்டில் நடிக்கும்போது இவரது நடிப்பைப் பார்த்தாலே புதியவர்களும் நடிப்பு கற்றுக்கொள்ளலாம்.

    ஒரு சீனில் தனது நடிப்பு பிடிக்கவில்லையானால் திரும்பவும் அந்த காட்சியில் நடித்துக் கொடுப்பார். சில காட்சிகளில் இயக்குனரே திருப்தி ஏற்பட்டு, "போதும்'' என்று சொன்னாலும் உடன்படமாட்டார். "எனக்கு ஏதோ ஒண்ணு திருப்தியில்லாமல் தெரிந்தது. என் திருப்திக்கு இன்னொரு `டேக்' எடுத்துடுங்களேன்'' என்று கேட்டு நடித்துக் கொடுப்பார். தொழிலில் இன்றைக்கும் அவருக்கு இருக்கும் இந்த ஈடுபாடுதான் இப்போதும் அவரை ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக்கி இருக்கிறது.

    அதுமாதிரி டிரெஸ்ஸிங் சென்ஸ் அதிகம். மேக்கப்பிலும் தனி கவனம் செலுத்துவார். அகில இந்திய அளவில் சிறந்த நடிகைகளாக, தொழில் பக்தியில் தேர்ந்தவர்களாக ஏழெட்டு நடிகையரை பட்டியல் போட்டால் இந்த பட்டியலில் மனோரமாவுக்கும் நிச்சயம் இடம் உண்டு.

    மனோரமா தவிர என்னுடன் ஜோடி சேர்ந்து காமெடி செய்தவர்களில் காந்திமதி, கோவை சரளா ஆகியோருக்கும் தமிழ் சினிமா நகைச்சுவைப் பட்டியலில் இடம் உண்டு. காந்திமதியின் தனித்துவ உச்சரிப்பு, அவருக்கே உரியது. கோவை சரளாவிடம் சுறுசுறுப்பு அதிகம். கற்றுக் கொள்வதிலும் ஆர்வம் அதிகம்.

    சினிமாவில் நான் வியந்து பார்த்த ஒரு நடிகர் எஸ்.வி.ரங்காராவ் அவர்கள். எந்த கேரக்டரானாலும், அதில் இவர் வெளிப்படுகிற விதம் பிரமிப்பாகவே இருக்கும்.

    நான் நடிக்க வந்த நேரத்தில் ஒரு படத்திலாவது இவருடன் நடித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். `சீர்வரிசை' என்ற படத்தில் அப்படியொரு வாய்ப்பு வந்தது. ஆனாலும் என் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அந்தப் படத்தில் நடித்த நேரத்தில் மரணம் அவரை அழைத்துக்கொண்டுவிட்டது. பிறகு அவர் கேரக்டரில் டி.கே.பகவதி நடித்தார்.

    எஸ்.வி.ரங்காராவ் மாதிரியே கொடுத்த கேரக்டருக்குள் தன்னை மறைத்துக் கொண்டு கேரக்டராகவே மாறிவிடும் இன்னொரு நடிகர் எஸ்.வி.சுப்பையா. பூக்காரி, சமையல்காரன் என 2 படங்களில் சேர்ந்து நடிக்கும்போது, `எப்பேர்ப்பட்ட கலைஞருடன் சேர்ந்து நடிக்கிறோம்' என்ற பிரமிப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×