உலக சாதனை படைத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!
உலக சாதனை படைத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!
தமிழிலும், பிற இந்திய மொழிகளிலும் 39 ஆண்டுகளில் 36 ஆயிரம் பாடல்கள் பாடி, உலக சாதனை படைத்துள்ளார், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழ்நாட்டில் பிறந்தவர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கொணோட்டாம்பேட்டை என்ற கிராமத்தில் 1946-ம் ஆண்டு ஜுன் மாதம் 4-ந்தேதி பிறந்தார். தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் உள்ள இந்த சிற்றூர், முன்பு ஆந்திராவில் இருந்தது. இப்போது தமிழ்நாட்டில் இருக்கிறது.

பாலசுப்பிரமணியத்தின் தந்தை பெயர் எஸ்.பி.சாம்பமூர்த்தி. இவர் இசைக் கலைஞர். ஹரிகதாகாலட்சேபம் செய்வதில் புகழ் பெற்றவர். தாயார் பெயர் சகுந்தலம்மா.

பாலுவின் இளமைப்பருவம் திருப்பதியை அடுத்த நகரி, நெல்லூர், காளஹஸ்தி ஆகிய ஊர்களில் கழிந்தது. காளஹஸ்தி பள்ளியில் படித்து எஸ்.எஸ்.எல்.சி. தேறினார். பின்னர் திருப்பதி ஆர்ட்ஸ் கல்லூரியில் 'பி.யு.சி' படித்தார்.

பள்ளியில் படிக்கும்போதே, பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பல பாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றார்.

தெலுங்கு சங்கம் ஒன்று நடத்திய பாட்டுப்போட்டிகளில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் முதல் பரிசு பெற்றார். மூன்றாவது ஆண்டும் முதலாவதாக வந்தால், அவருக்கு பெரிய வெள்ளிக்கோப்பை வழங்க வேண்டி இருக்கும். அதைத் தவிர்ப்பதற்காக, அந்த சங்கத்தின் நிர்வாகிகள் அந்த ஆண்டு பாலுவுக்கு இரண்டாம் பரிசு என்று அறிவித்தனர்.

அந்த பாட்டுப் போட்டிக்கு தலைமை தாங்கியவர் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி. 'இன்று இரண்டாவது பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் இளைஞர், முதல் பரிசு பெற்றவரை விட சிறப்பாகப் பாடினார். நியாயமாக, முதல் பரிசு அவருக்குத்தான் சேரவேண்டும்' என்று அறிவித்தார்.

வேறு வழியின்றி, சங்க நிர்வாகிகள் முதல் பரிசையும், வெள்ளிக் கோப்பையையும் பாலுவுக்கு வழங்கினர்.

மகன் என்ஜினீயராக வேண்டும் என்பது, பாலுவின் தந்தை விருப்பம். அதன்படி, சென்னையில் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர பாலு முயற்சி செய்தார். ஆனால் இடம் கிடைக்கவில்லை. எனவே, 'ஏ.எம்.ஐ.ஈ' என்ற தொழில் கல்வி பயின்றார்.

பாலு ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடியபோது, அதைக்கேட்ட தெலுங்கு இசை அமைப்பாளர் எஸ்.பி.கோதண்டபாணி, 'உன் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. உன்னை சினிமாவில் சேர்த்து விடுகிறேன்' என்று கூறினார்.

பல பட அதிபர்களிடமும், இசை அமைப்பாளர்களிடமும் அழைத்துச் சென்றார். ஆனால் அவர் முயற்சி அப்போது வெற்றி பெறவில்லை.

1966-ல், கோதண்டபாணியின் இசை அமைப்பில், 'ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரயதா ராமண்ணா' என்ற தெலுங்குப்படம் தயாராயிற்று. அதில் பாடுவதற்கு, பாலசுப்பிரமணியத்துக்கு வாய்ப்பளித்தார். அவர் பின்னணி பாடிய முதல் படம் இதுதான்.

திரைப்படத்துக்குப் பின்னணியில் எப்படிப் பாடவேண்டும் என்ற நுணுக்கங்களையும் கோதண்டபாணி போதித்தார். அதுமுதல், பாலுவுக்கு கோதண்டபாணிதான் மானசீக குருவானார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"