'மாஸ்டர்’ ஸ்ரீதர் திடீர் மரணம்: மாரடைப்பால் உயிர் பிரிந்தது
'மாஸ்டர்’ ஸ்ரீதர் திடீர் மரணம்: மாரடைப்பால் உயிர் பிரிந்தது
நடிகர் ‘மாஸ்டர்’ ஸ்ரீதர் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60.

மாஸ்டர் ஸ்ரீதர் ‘குறத்தி மகன்’ படத்தில் ஜெயசித்ரா ஜோடியாக நடித்தார். ‘கர்ணன்’ படத்தில் சிவாஜியுடன் நடித்துள்ளார். ‘கந்தன் கருணை’ படத்தில் முருக கடவுள் வேடத்தில் வந்தார். 150–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான நாடகங்களிலும் நடித்துள்ளார்.

மாஸ்டர் ஸ்ரீதருக்கு நீண்ட நாட்களாக ஆஸ்துமா கோளாறு இருந்தது. அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை 4 மணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சிறிது நேரத்தில் உயிர் பிரிந்தது.

மரணம் அடைந்த மாஸ்டர் ஸ்ரீதருக்கு இந்திரா என்ற மனைவியும், பிரசாந்த், ரக்ஷித் பாலாஜி என்ற மகன்களும் உள்ளனர். மாஸ்டர் ஸ்ரீதர் உடல் கொட்டிவாக்கம் கற்பகாம்பாள் நகரில் உள்ள வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்கு நடக்கிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
மேலும் சினிமா செய்திகள்