திரை உலகுக்கு இளையராஜாவை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலம்
திரை உலகுக்கு இளையராஜாவை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலம்
பாடல் ஆசிரியர், கதை-வசனகர்த்தா, டைரக்டர், தயாரிப்பாளர் என்று பல முகம் கொண்ட பஞ்சு அருணாசலம், "அன்னக்கிளி'' மூலம் இளையராஜாவை பட உலகுக்கு அறிமுகம் செய்தார்.

காரைக்குடியை அடுத்த சிறுகூடல்பட்டி கிராமம்தான் இவரது சொந்த ஊர். கவிஞர் கண்ணதாசனின் சொந்த அண்ணன் மகன்தான் பஞ்சு அருணாசலம்.

பஞ்சு அருணாசலத்தின் தந்தைதான் மூத்தவர். அடுத்தவர் ஏ.எல்.சீனிவாசன். அவருக்கு அடுத்தவர் கண்ணதாசன்.

பஞ்சு அருணாசலம் சிறுவனாக இருக்கும்போதே கண்ணதாசன் பாட்டு எழுத சினிமாவுக்கு வந்துவிட்டார். இன்னொரு சித்தப்பா ஏ.எல்.சீனிவாசனோ பட அதிபராக இருந்தார். அதோடு சென்னையில் பிரபலமான பரணி ஸ்டூடியோவை (நடிகை பானுமதியின் சொந்த ஸ்டூடியோ) குத்தகைக்கு எடுத்து நிர்வாகம் செய்து வந்தார்.

ஏ.எல்.சீனிவாசன் அளவுக்கு கண்ணதாசன் பிரபலமாகாத நேரம் அது.
பள்ளிக்கூடத்தில் தனிமை விரும்பியாக இருந்த பஞ்சு அருணாசலத்துக்கு சினிமாவில் முதலில் பிடித்தது பாடல்கள்தான்.

அத்துடன் கதைகள் படிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளி முடிந்ததும் நேராக இவர் செல்வது நூல் நிலையத்துக்கு. அங்கே சரத்சந்திரர், காண்டேகர், புதுமைப்பித்தன் போன்ற பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களை விரும்பிப் படிப்பார்.

"பியூசி'' வரை படித்து முடித்து, மேற்கொண்டு படிக்க வசதியில்லாமல், நின்று போன படிப்போடும் மனசு நிறைய கதை எழுதும் ஆசையோடும், வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சென்னைக்கு பயணப்பட்டார், பஞ்சு அருணாசலம். சென்னையில் நேராக சித்தப்பா ஏ.எல்.சீனிவாசன் வீட்டுக்குச்சென்று அவரை சந்தித்தார்.

இவரை மேற்கொண்டு படிக்கும்படி சொன்னார், ஏ.எல்.எஸ். இவரோ ஏதாவது பத்திரிகை ஆபீசில் சேர்ந்து கதை எழுத விரும்பினார்.

"நீயெல்லாம் என்னடா கதை எழுதப்போகிறாய்!'' என்று சிரித்தார் ஏ.எல்.எஸ். "நான் நன்றாகக் கதை எழுதுவேன் சித்தப்பா'' என்று கூறினார், பஞ்சு அருணாசலம். "சரி சரி. நூறு பேர் வேலை செய்கிற நம் ஸ்டூடியோவில் நீயும் வேலை பார்'' என்றார், ஏ.எல்.எஸ்.

மறுநாளே, ஏ.எல்.எஸ். குத்தகைக்கு எடுத்திருந்த பரணி ஸ்டூடியோவில் வேலையில் சேர்ந்தார், பஞ்சு அருணாசலம். அவரது, திரை உலக வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடப்பட்டது அங்கேதான்.

ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த வருகிறவர்களிடம், வாடகை பற்றி பேசி முடிவு எடுக்கும் வேலை, அவருடையது.

வேலை முடிந்ததும், வீட்டுக்குப் போவதில்லை. ஸ்டூடியோவில் நடக்கும் படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பார்.

`பாடல் எப்படி பதிவாகிறது' என்பதை கூர்ந்து கவனிப்பார். சினிமா என்ற கனவுத் தொழிற்சாலை, அவருக்குப் பிடிபட ஆரம்பித்தது. 2ஷி மணி நேரம் திரையில் ஓடும் ஒரு படத்தைத் தயாரிக்க ஒரு வருடம் கூட ஆகும் என்கிற உண்மை அவரை பிரமிப்பில் ஆழ்த்தியது.

டைரக்டர் ஏ.பீம்சிங் புகழ் ஏணியில் ஏறத்தொடங்கியிருந்த காலக்கட்டம் அது. ஏ.எல்.எஸ். தயாரித்த "செந்தாமரை'' என்ற படத்தை அவர் டைரக்ட் செய்து கொண்டிருந்தார். சிவாஜியுடன் லலிதா - பத்மினி நடித்த படம்.
பீம்சிங்கிடம் உதவி டைரக்டராக சேர விரும்பிய பஞ்சு அருணாசலம், தன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தார்.

"செந்தாமரை படம் முடியட்டும். அதன் பிறகு கட்டாயம் சேர்த்துக் கொள்கிறேன்'' என்றார், பீம்சிங்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
மேலும் சினி வரலாறு