VanniarMatrimony_300x100px_2.gif
4 மொழிகளில் வெளியான 'துலாபாரம்' படத்தில் வாழ்ந்து காட்டிய சாரதா 'ஊர்வசி' விருது பெற்றார்
4 மொழிகளில் வெளியான 'துலாபாரம்' படத்தில் வாழ்ந்து காட்டிய சாரதா 'ஊர்வசி' விருது பெற்றார்
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய 4 மொழிகளில் தயாரிக்கப்பட்ட 'துலாபாரம்' படத்தில் சாரதா நடித்தார். சிறந்த நடிகைக்கான 'ஊர்வசி' தேசிய விருதை முதன் முதலில் பெற்றார்.

1964-ம் ஆண்டு 'அருணகிரிநாதர்' படத்தில் பாடகர் டி.எம்.சவுந்திரராஜனின் மனைவியாக சாரதா நடித்தார்.

பெண் பித்தராக இருந்து, முருக பக்தராக மாறும் அருணகிரிநாதரை பற்றிய இந்தப் படத்தில், மிகவும் அற்புதமாக சாரதா நடித்து இருந்தார்.

இந்தக் காலக்கட்டத்தில், `குத்ஜாகோ' என்ற பெயரில் ஒரு மலையாளப்படம் தயாராகிக் கொண்டிருந்தது. இந்தப் படத்திற்கு இளம் கதாநாயகியை தேடினார்கள். சத்யன், பிரேம்நசீர் ஆகியோர் நடித்த அந்தப் படத்தில் நடிக்க,பரணி ஸ்டூடியோ சவுண்ட் என்ஜீனியர் கண்ணன் உதவியால் சாரதாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. படம் வெற்றிப்படமாக அமைந்ததால் தொடர்ச்சியாக பல மலையாளப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

1965-ம் ஆண்டு திரையுலகில் `இனப்புறாவுகள்' (ஜோடிப்புறா) என்ற படத்தில் சாரதா நடித்தார்.

இந்த சமயத்தில், சாரதாவின் முழுத் திறமையையும் வெளிப்படுத்தக்கூடிய வகையில் 'துலாபாரம்' படம் மலையாளத்தில் தயாராகியது. சாரதா கதாநாயகியாகவும், பிரேம் நசீர் கதாநாயகனாகவும் நடித்தனர். பிரபல ஒளிப்பதிவாளர் வின்சென்ட் (கல்யாணப் பரிசு படத்தின் ஒளிப்பதிவாளர்) அந்தப் படத்தை டைரக்ட் செய்தார்.

பார்ப்பவர்களின் நெஞ்சைப் பிழிந்து, கண்களில் கண்ணீரை வரச்செய்யும் படம் இது. அவ்வளவு சோகமான கதை.

பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த கதாநாயகி, ஏழை மில் தொழிலாளியை திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது. மூன்று குழந்தைகளுக்குத் தாயாகிறாள். அவள் கணவன், வேலையை இழக்க நேரிடுகிறது.

அவன் போராட்டத்தில் இறங்குகிறான். வறுமை வாட்டுகிறது. அவள் குழந்தைகளுடன் போராடுகிறாள். அளவு கடந்த வறுமையினால், தான் பெற்ற குழந்தைளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள தீர்மானிக்கிறாள்.

இதில் குழந்தைகள் இறந்து விடுகின்றன. கதாநாயகி மட்டும் காப்பாற்றப்பட்டு, குற்றவாளியாக கூண்டில் நிறுத்தப்படுகிறாள். கோர்ட்டில் தன் கண்ணீர் கதையை கூறுகிறாள்.

நாட்டின் உண்மை நிலையை பிரதிபலிக்கும் வகையில் படம் அமைந்தது. நெஞ்சை உருக்கும் பல நிகழ்ச்சிகளை கொண்ட 'துலாபாரம்', மக்கள் மனதில் மறக்க முடியாத இடத்தைப் பிடித்து, வெற்றிப்படமாகியது.

இந்த படத்தில் நடித்த சாரதாவிற்கு, அகில இநëதிய ரீதியில் சிறந்த நடிகைக்கான 'ஊர்வசி' விருது கிடைத்தது. ஊர்வசி விருது கொடுக்க ஆரம்பித்த பிறகு, முதன் முதலில் அந்த விருதை பெற்றவர் சாரதா என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 1969-ம் ஆண்டில், தமிழில் 'துலாபாரம்' வின்சென்ட் டைரக்ஷனில் வெளிவந்தது. இதிலும் சாரதாதான் கதாநாயகி. அவருடன் இணைந்து நடித்தவர் ஏவி.எம்.ராஜன்.

மலையாளப்படம் போலவே, தமிழ்ப்படமும் வெற்றி பெற்றது.

துலாபாரத்தை, தெலுங்கில் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் 'மனுசுலு பாராலி' (மனிதர்கள் மாறவேண்டும்) என்ற பெயரில் தயாரித்தார். இதில் சாரதாவுடன் நடிகர் சோபன்பாபு நடித்தார். படத்தை மதுசூதனராவ் டைரக்ட் செய்தார்.

இந்தி 'துலாபாரம்' படத்திலும் சாரதாதான் கதாநாயகியாக நடித்தார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய 4 மொழிகளிலும் துலாபாரம் வெற்றி பெற்றது. சாரதா, அகில இந்தியப் புகழ் பெற்றார்.

'துலாபாரம்' பற்றி சாரதா கூறியதாவது:-

'என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் 'துலாபாரம்.' அந்த படம் மூலம் என் வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்பட்டது. தெலுங்கு 'துலாபாரம்' படத்தில் நடித்த பிறகு, அந்த மொழிப் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்பு கிடைத்தது.

நான் என்னுடைய 22-வது வயதில் அந்த கேரக்டரில் நடித்தேன். அன்றைய காலக்கட்டத்தில் கிளாமராக நடிக்கும் நடிகைகளுக்குத்தான் மார்க்கெட் இருந்து வந்தது. அந்தச் சமயத்தில்தான், 3 குழந்தைகளுக்கு தாயாக நடித்தேன். அதில் வறுமை, ஏழ்மை ஆகியவற்றை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை நன்றாக உணர்ந்து நடித்தேன்.

படத்தின் டைரக்டர் வின்சென்ட் மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவர். அவர் என்னிடம், 'நீங்கள் 3 குழந்தைகளுக்குத் தாயாக - வறுமையால் சாப்பாடு கூட இல்லாமல் கஷ்டப்படும் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும். அதற்கு தகுந்த மாதிரி உடை அணியுங்கள்' என்று கூறிவிட்டுச் சென்று விட்டார். அவர் சொன்னதை புரிந்து கொண்டு, உடை அணிந்து, உணர்ச்சிபூர்வமாக நடித்தேன். என் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள்.

நான் எத்தனையோ படங்களில் நடித்து இருக்கிறேன். அவற்றில், நான் என்றுமே மறக்க முடியாத படம் - இன்றல்ல, என்றுமே 'துலாபாரம்'தான்.'

இவ்வாறு சாரதா கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif