AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif
'ஆளவந்தான்' அளித்த ஏமாற்றம்
'ஆளவந்தான்' அளித்த ஏமாற்றம்
பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்ட "ஆளவந்தான்" படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

இதுபற்றி பட அதிபர் 'கலைப்புலி' தாணு கூறியதாவது:-

"ஆளவந்தான் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக வந்த மனீஷா கொய்ராலாவுக்கு படத்தில் அதிக வேலை இல்லை. ஆனால் அவரால் தேவையில்லாத ஒரு பிரச்சினைதான் ஏற்பட்டது. அடையாறு பார்க் ஓட்டலில் உள்ள பாரில் அவர் தகராறு செய்ததாக தகவல் வர, அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்தோம்.

டெல்லியில் படப்பிடிப்பு நடக்கும்போது கமல் சார் கண்ணாடியை உடைத்து நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. இந்தக் காட்சியில் கமல் சார் கை உடைவது போலவும், அதற்கு அவர் கட்டுப்போட்டு நடிப்பது போலவும் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்து நடந்த 2 நாள் படப்பிடிப்பின்போதும் கமல் கையில் கட்டுப்போட மறந்து விட்டார்கள். உதவி இயக்குனர்களும் கமலிடம் நினைவுபடுத்த தவறிவிட்டார்கள். இதனால் அந்தக் காட்சி மறுபடியும் 2 நாட்கள் படமாக்கப்பட்டது.

இந்தப் படத்தில் நடிக்கும்போதுதான் சரிகா கமலஹாசன் விபத்துக்குள்ளானார். மும்பையில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் நடந்தபோது கமல் சாரும் உடன் இருந்தார். அந்த சூழ்நிலையிலும் ஆளவந்தான் படத்துக்கான "பிளாஷ்பேக்" காட்சியை அவர் தயார் செய்து பேக்ஸில் அனுப்பி வைத்தார்.

பிளாஷ்பேக்கை படித்துப்பார்த்த டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணா என்னிடம், "படத்தின் அந்த பிளாஷ்பேக் காட்சி வருவது மொத்தம் 10 நிமிடம்தான். ஆனால் கமல் சார் 25 நிமிடத்துக்கு கொடுத்திருக்கிறார். கதையின் வேகமான போக்கை நீண்ட இந்த பிளாஷ்பேக் குறைக்க வாய்ப்புண்டு" என்று சொன்னார்.

இதுபற்றி கமல் சாரிடம் கேட்டபோது, "கதை என்னுடையதுதானே. அதன் வீரியம் எனக்குத்தான் தெரியும். நான் கொடுத்த பிளாஷ்பேக் காட்சி அப்படியே வருவதுதான் சரியாக இருக்கும்" என்று சொல்லி விட்டார்.

இந்த தகவல் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு சொல்லப்பட்டதும், அவர் 25 நிமிட பிளாஷ்பேக் காட்சியையும் எடுத்தார். ஆனால் முழுப்படமும் தயாரான பிறகு, அந்த பிளாஷ்பேக் காட்சி நீளமாக இருப்பதை கருத்தில் கொண்டு 15 நிமிட காட்சிகள் வெட்டப்பட்டன. 10 நிமிட பிளாஷ்பேக் காட்சியே இடம் பெற்றது. படத்தின் கம்ப்ïட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளை கவரும் நோக்கில் தயார் செய்யப்பட்டன. படத்தில் 9 நிமிடம் வருகிற மாதிரி வைக்க முடிவு செய்தோம். ஆனால் படத்தில் 47 நிமிடம் வரை அந்தக் காட்சிகள் இடம் பிடித்தன. அதிகம் என்பதால், ரசிகர்கள் அந்தக் காட்சிக்கு அன்னியமாகிப் போனார்கள்.

கமல் சார், தனது படம் ஆலிவுட் படங்களுக்கு நிகராக வரவேண்டும் என்று விரும்புவார். அதனால் பட்ஜெட்டுக்கு மேல் செலவு உயருவது தவிர்க்க முடியாதது. அவர் சொந்தமாகத் தயாரித்த "ஹேராம்" கூட, இப்படி அதிக செலவில் உருவானதுதான்.

"ஆளவந்தான்" தயாரிக்கப்படுவதற்கு முன், "படத்துக்கு ரூ.7 கோடி செலவு ஆகும். எதற்கும் கூடுதலாக ரூ.2 கோடி வைத்துக்கொள்ளுங்கள். என் சம்பளம் இதில் அடங்காது" என்று கமல் சொன்னார். ஆனால் படம் வளரத் தொடங்கி 40 சதவீதம் வளரும்போதே ரூ.13 கோடியே 85 லட்சத்தை தாண்டிவிட்டது.

இந்த தகவலை நான் எழுத்து மூலம் கமல் அண்ணன் சந்திரஹாசனிடம் கொடுத்தேன். அவர், "தம்பியிடம் (கமல்) சொல்லி செலவை குறைக்க ஏற்பாடு செய்கிறேன்" என்றார். ஆனாலும் செலவு குறையவில்லை.

படத்தயாரிப்பு நாள் நீண்டதும் அதிக செலவுக்கு ஒரு காரணம். 2 வருடம் வரை படம் தயாரிப்பில் இருந்தது.

"ஆளவந்தான்" பிரமாண்டமாகத் தயாராகிறது என்ற தகவல் பட உலகில் பரவியதால், பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

படத்தின் இந்திப்பதிப்பை ரூ.10 கோடிக்கு வாங்கிக்கொள்ள "வெஜ் இன்டியா" நிறுவனத்தைச் சேர்ந்த ஜ×மானே முன்வந்தார். பிறகு இன்னொரு நிறுவனம் ரூ.12 கோடிக்கு கேட்டார்கள்.

ஆனால், ஏ.எம்.ரத்னம் தயாரித்த ஷங்கர் இயக்கிய 'நாயக்' என்ற படம் ரூ.23 கோடிக்கு விற்கப்பட்டிருப்பதாகவும், எனவே 15 கோடி அளவுக்காவது இந்தி ஆளவந்தான் போகும் என்றும் கமல் சொன்னார்.

படம் முடிந்த பிறகு மும்பையில் உள்ள ஒரு தயாரிப்பாளருக்கு இந்தி ஆளவந்தான் ("அபய்") படத்தை போட்டுக்காட்ட, அவரோ, "படம் சரியில்லை" என்று கூறியதோடு, தன் சினிமா வட்டாரத்திலும் இந்த தகவலை பரப்பிவிட்டார்.

இதனால் ஆளவந்தானின் இந்திப் பதிப்பில் எனக்கு கடைசியில் வந்து சேர்ந்தது வெறும் ரூ.2 கோடிதான். ஆனால் இந்திப்பதிப்புக்கு ஆன செலவு ரூ.12 கோடி.

இந்தி "ஆளவந்தான்" ஒரு வாரமே ஓடியது.

"ஆளவந்தான்" ரீலீசுக்கு முந்தினநாள் தேவி தியேட்டரில் விசேஷ காட்சி நடந்தது. சினிமா உலக பிரபலங்கள், வினியோகஸ்தர்கள் வரை படம் பார்த்ததால், ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஏற்கனவே பேசியிருந்த தொகையில் சராசரியாக ரூ.25 லட்சம் இழப்பு ஏற்பட்டது. இந்த வகையில் ரூ.3 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இந்தப் படத்தில் எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை அறிந்ததும் ரஜினி சார் என்னை அழைத்து 3 மணி நேரம் பேசினார். மிகுந்த மன வருத்தத்துடன் "தாணு சார்! உங்களுக்கு நான் என்ன செய்யணும்? சொல்லுங்க" என்று கேட்டார்.

நான் அவரிடம், "இவ்வளவு தூரம் என்னை அழைத்து ஆறுதலாய் கேட்டீர்களே! இந்த அன்பு ஒன்றே போதும்" என்று கூறிவிட்டு வந்தேன்.

கமல் ஒரு மகா கலைஞன். ஆலிவுட் அளவுக்கு ஒரு தமிழன் நடிக்க முடியும், படம் எடுக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய உலக நாயகன்.

"ஆளவந்தான்", பல சிறப்புகளைப் பெற்ற பிரமாண்டமான படம். அப்படியிருந்தும் ஏன் அது சரியாக ஓடவில்லை என்பதை, அதன் தயாரிப்பாளர் என்ற முறையில் விளக்க வேண்டியது என் கடமை ஆனதே தவிர, ஒரு படத்தின் வெற்றி -தோல்வி என்பது ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது என்பது நான் அறிந்த உண்மை.

கமல் இப்போது "தசாவதாரம்" படத்தில் நடித்து வருகிறார். உலகில் எந்த ஒரு நடிகரும், இப்படி பத்து வேடங்களில், இவ்வளவு சிறப்பாக நடித்ததில்லை என்று நிரூபிப்பார் என்பது நிச்சயம். வர்த்தக ரீதியிலும் இப்படம் மகத்தான வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அதற்கான வாழ்த்துக்களை, முன்கூட்டியே அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு தாணு கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif

மேலும் சினி வரலாறு