AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif
ஆளவந்தான் படத்துக்கு சண்டைக்காட்சிகள் அமைக்க வெளிநாட்டு நிபுணர்
ஆளவந்தான் படத்துக்கு சண்டைக்காட்சிகள் அமைக்க வெளிநாட்டு நிபுணர்


"ஆளவந்தான்'' படத்துக்கு பிரமாண்டமான சண்டைக் காட்சிகளை அமைக்க, உலகப்புகழ் பெற்ற ஸ்டண்ட் நிபுணர் வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்பட்டார்.

"ஆளவந்தான்'' பட தயாரிப்பு பற்றி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தொடர்ந்து கூறியதாவது:-

"ஆளவந்தான்'' படத்தின் கதை -வசனத்தை கமல் சார் எழுதினார். அண்ணன்-தம்பி என்று இரட்டை வேடங்களில் நடித்தார். அதில் ஒரு கேரக்டர் மன நோயாளி. கதையின் போக்கு எனக்குப் பிடிபடாததால் அவரிடம் கேட்க எண்ணினேன். ஆனாலும் தயங்கினேன். ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் கமல் நடிக்கிறார்.

அவர் நடிக்கும் படம் பெரிய வெற்றி பெறவேண்டும் என்றுதானே அவரும் எண்ணுவார். அந்த எண்ணத்தில் கதை தொடர்பான என் சந்தேகத்தை கேட்டுக்கொள்ளவில்லை. இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகள் புதுமையாகவும், மிரட்டலாகவும் இருக்க வேண்டும் என்று கமல் விரும்பினார்.

அதற்காக, உலக அளவில் அறியப்பட்ட கிராண்ட்பேஜ் என்ற ஆஸ்திரேலிய ஸ்டண்ட் மாஸ்டரை `புக்' செய்யலாம் என்று கருதினார். கிராண்ட் பேஜ் பணியாற்றிய "இட் இஸ் ஏ மேட் மேட் வேர்ல்டு'' என்ற ஆலிவுட் படம், சண்டைக் காட்சிகளுக்காக அகில உலகப் புகழ் பெற்றது.

இதனால் அவரையே தேடிப்போய் பெரிய சம்பளத்தில் `புக்' செய்தேன். அவருடன் 4 ஸ்டண்ட் கலைஞர்களும் வந்தார்கள். அவர்களுக்கும் கணிசமான சம்பளம். சண்டைக் காட்சிகளை கிராண்ட்பேஜ் காஷ்மீரில் எடுத்தார்.

அண்ணன் கமலை தம்பி கமல் விரட்டிச் செல்வது போன்ற காட்சிகள் அங்கு எடுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து டெல்லியில் சண்டைக் காட்சிகளை 15 நாள் எடுத்தார். 39 கார்கள் அணிவகுக்க நடந்த இந்த படப்பிடிப்பில், தினமும் ரூ.5 லட்சம் செலவானது. 3 கேமராக்கள் வைத்து படம் பிடித்தார்.

இந்த 15 நாள் சண்டைக்காட்சி எடுத்து முடித்த பிறகுதான், ஒரு தவறு புலப்பட்டது. காட்சிப்படி கமல் வெள்ளை சட்டை அணிந்து இருக்க வேண்டும். ஆனால், கறுப்பு சட்டையுடன் காட்சிகள் எடுத்து விட்டார்கள். உதவி டைரக்டர்கள் இதை கவனித்திருக்க வேண்டும். ஆனால் யாரும் கவனிக்கவில்லை.

`சட்டை' மாறியதால் மறுபடியும் அக்காட்சியை எடுக்கவேண்டும் என்பதை என்னிடம் சொல்ல எல்லோரும் தயங்கினார்கள். ஆயினும் பிறகு தெரிந்து, அக்காட்சியை மீண்டும் 15 நாட்கள் படமாக்கினேன்.

படத்தின் முக்கியமான சண்டைக்காட்சியை காஷ்மீரில் பாகிஸ்தான் பார்டரில் எடுக்க விரும்பினார், கமல். ஆனால் அதற்கு அரசாங்கத்தின் அனுமதி கிடைப்பது கஷ்டம் என்றார்.

நான் வைகோவிடம் இதுபற்றி சொன்னபோது, அவர் காஷ்மீர் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவிடம் பேசி, படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கிக் கொடுத்து விட்டார். அதோடு காஷ்மீர் மாநில அரசின் அனுமதியுடன் ஒரிஜினல் "ஏகே.47'' துப்பாக்கிகள், ஹெலிகாப்டர்கள் வரை தயார் செய்யப்பட்டு கமலுக்காக காத்திருந்தபோது, பாதுகாப்பு கருதி, கமல் வரமுடியாமல் போயிற்று. கடைசியில் டூப் போட்டு, லாங்ஷாட் காட்சிகளை மட்டும் எடுத்தோம்.

அந்த காட்சிக்கான `குளோசப்' சீன்களை சென்னையில் செட் போட்டு எடுத்தோம். காஷ்மீர் பனிமலை செட்டை பிரசாத் ஸ்டூடியோவின் மூன்று ப்ளோர்களை வாடகைக்கு எடுத்து `ஏசி' செய்து, செட் போட ஏற்பாடு செய்தேன் ஏவி.எம்.மிலும் ஒரு ப்ளோரை வாடகைக்கு எடுத்து `ஏசி' பண்ணி, காட்சிகளை எடுத்தேன்.

ஆர்ட் டைரக்டர் சமீர் சந்தா, ஒரிஜினல் காஷ்மீர் பனிமலையை பிரசாத் செட்டுக்குள் கொண்டு வந்திருந்ததை பாராட்டாதவர்கள் இல்லை. இந்த செட்டை அமைக்க, இங்குள்ள 100 கார்பெண்டர்களுடன், மும்பையில் இருந்து 120 கார்பெண்டர்களையும் வரவழைத்தேன்.

செட் வேலைகள் 8 மாதங்கள் நடந்தன. 8 மாதத்தில் 54 செட்கள் போட்டு முடித்தார்கள். இப்படி 54 செட் போட்டு காட்சிகளை படம் பிடித்தது தமிழ் சினிமா வரலாற்றில் அதுதான் முதன் முறை. இந்த பிரமாண்ட, பிரமிக்க வைக்கும் செட்டை உருவாக்கி கொடுத்த ஆர்ட் டைரக்டர் சமீர் சந்தாவின் உண்மையான உழைப்பு என்னைக் கவர்ந்தது.

அவரை பாராட்டிய நேரத்தில், அவர் தனக்கு டைரக்ஷனில் ஆர்வம் இருப்பதை தெரிவித்தார். கல்கத்தாவில் வங்காளப்படம் ஒன்றை இயக்கும் தருணத்தை எதிர்பார்த்திருப்பதாக அவர் சொன்னபோது, சம்பளம் தவிர, கூடுதலாக 15 லட்சம் பணத்தை கொடுத்து அவர் டைரக்டராக வருமாறு வாழ்த்தினேன்.

டெல்லியில் உள்ள என்.எஸ்.ஜி. கேம்ப்பில் அதுவரை படப்பிடிப்பு நடத்தவில்லை. ராணுவத்தின் நேரடி கண்காணிப்பில் உள்ள இடம் அது. அங்கே சண்டைக்காட்சி படப்பிடிப்பு நடந்தால் சிறப்பாக இருக்கும் என்று கமல் வலியுறுத்தினார்.

ஆனால், கிராண்ட்பேஜ் போன்ற வெள்ளைக்காரர்களும் படக்குழுவில் இருந்தனர். வெள்ளைக்காரர்களை அங்கே அனுமதிக்க சட்டத்தில் இடமே இல்லை என்பது தெரிந்தது.

நான் போனில் வைகோவிடம் இதுபற்றி பேசினேன். அவர் ராணுவ மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ், உள்துறை மந்திரி அத்வானி இருவரிடமும் கேட்டுக்கொண்டதன் பேரில், சிறப்பு அனுமதி கிடைத்தது. மொத்தம் 120 பேர் கலந்து கொள்ள, படப்பிடிப்பு தடையின்றி நடந்தது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் `ரிச்'சாக வரவிரும்பியதால், ரத்தம் சிந்துகிற மாதிரியான காட்சிகளுக்கு அமெரிக்காவில் இருந்து அசல் ரத்தம் போன்ற பொருள் கொண்டு வரப்பட்டது.

லாஸ்ஏஞ்சல்சில் இருந்து 6 துப்பாக்கிகள் வரவழைக்கப்பட்டன. கனடாவில் இருந்து கத்தி வந்தது! "ஜம்ப்பிங்'' காட்சியில் விசேஷமாக பயன்படுத்த, கமல் விருப்பப்படி "ஏர் ராம்ப்'' என்ற மிஷின் வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்டது. அதை படப்பிடிப்புக்கு பயன்படுத்தி முடித்ததும், அவருக்கே கொடுத்து விட்டேன்.

ஆளவந்தான் படத்துக்காக "எடிட் கட்ப்ரோ'' என்ற படத்தொகுப்பு சாதனம் கனடாவில் இருந்து வரவழைக்கப்பட்டது. ஒரு காட்சியில் நடித்து முடித்ததும் உடனே அதை இந்த மிஷின் மூலம் `எடிட்' செய்து பார்த்து விடலாம். படம் முடிந்ததும் இந்த விசேஷ எடிட்டிங் கருவியையும் கமல் சாருக்கே கொடுத்துவிட்டேன்.

இதுமாதிரியான தொழில் நுட்பங்களுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் அமெரிக்காவில் இருந்து `மோஷன் கண்ட்ரோல் கேமிரா'வை இறக்குமதி செய்தேன். 4 வாரங்கள்தான் உபயோகிக்க வேண்டும். ஆனால் கமல் சார் வேண்டுகோளுக்கிணங்க 22 வாரம் தங்க வேண்டியதாயிற்று. இந்திய சினிமா வரலாற்றில் இந்த கேமரா முதன் முதலாக பயன்படுத்தப்பட்டது "ஆளவந்தான்'' படத்தில்தான்.

கதைப்படி அண்ணன்-தம்பியான இரண்டு கமல்களும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளும் காட்சியை எந்தவித தொழில்நுட்ப உத்தியுமின்றி சுலபத்தில் இதில் படம் பிடிக்க முடியும். படத்தின் ஜெயில் காட்சிகளையும் இந்த கேமராவில் படம் பிடித்தோம். படத்தில் ரவீனா தாண்டன், மனீஷா கொய்ராலா என 2 நாயகிகள்.

படத்தில் ரவீனா அளவுக்கு மனீஷாவுக்கு முக்கியத்துவம் இல்லை. நான் பார்த்த மும்பை நட்சத்திரங்களில் ரவீனா வித்தியாசமானவர். படத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்வதற்காக வரச்சொன்னதும், விமானத்தில் சென்னை வந்தார். கமல் அவரிடம் கதை சொல்லி, அவரது கேரக்டர் பற்றியும் விவரித்தார். படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த ரவீனா ரூ.45 லட்சம் சம்பளம் கேட்டார்.

மேற்கொண்டு பேசியதைத் தொடர்ந்து, ரூ.35 லட்சத்துக்கு சம்மதித்தார். ரூ.5 லட்சம் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு புறப்பட்டார். அவருக்கான காட்சிக்காக மறுமுறை சென்னை வந்த நேரத்தில், "தயாரிப்பாளர் எங்கே?'' என்று என்னைப்பற்றி விசாரித்திருக்கிறார்.

அந்த நேரத்தில் கேன்சரில் பாதிக்கப்பட்டிருந்த என் மனைவியை சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச்சென்று இருந்தேன். இந்த தகவல் ரவீனா தாண்டனுக்கு சொல்லப்பட்டதும், கண்கலங்கியிருக்கிறார். "தயாரிப்பாளரின் மனைவிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள்'' என்று சொல்லியிருக்கிறார்.

இந்த தகவல் எனக்கு தெரியவந்தபோது, அவரது மனித நேயமிக்க செயல் என்னை நெகிழ வைத்தது. இப்படிப்பட்ட ஒரு பெண்மணிக்கு, ஏதாவது ஒரு வகையில் உதவவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். அதற்கான வாய்ப்பு, மனைவியின் சிகிச்சையின் பொருட்டு நான் சிங்கப்பூரில் இருந்தபோதே வந்தது.

எனக்கு போன் செய்த ரவீனா, "தாணு சார்! நான் மிகச்சிறப்பாக நடித்த ஒரு இந்திப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப்படத்தில் என் நடிப்புக்காக "சிறந்த நடிகைக்கான தேசிய விருது'' கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். முடிந்தால், தேர்வுக்குழுவில் உள்ளவர்கள், என் நடிப்பையும் கருத்தில் கொள்வதற்கு நீங்கள் எனக்கு உதவ முடியுமா?'' என்று கேட்டார்.

அந்த ஆண்டு தேர்வுக் குழுவின் நடுவர்களில் தயாரிப்பாளர் கேயாரும் இருந்தார். எப்போதுமே கேயார் மீது எனக்கு பற்றும், பாசமும் உண்டு. தமிழ் சினிமா உலகில், சாதாரண மனிதர்களையும் தயாரிப்பாளர்களாக்கியவர் அவர். அதோடு சினிமாவின் ஒவ்வொரு தொழில் நுட்பமும் தெரிந்தவர்.

நான் அவரிடம், ரவீனா தாண்டன் சிறந்த முறையில் நடித்ததாக சொன்ன படம் பற்றி குறிப்பிட்டு, "ரவீனாவின் நடிப்பு உண்மையிலேயே உங்களை கவர்ந்து இருந்தால், அதற்குரிய மரியாதையை செய்யுங்கள்'' என்றேன்.

அந்த ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ரவீனா தாண்டன் வாங்கினார். `விருது' தகவல் உறுதியானதும் எனக்கு போன் செய்து நன்றியை தெரிவித்துக்கொண்டார்.''
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif