AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif
கமலஹாசன் நடித்த 'ஆளவந்தான்' உருவான கதை
கமலஹாசன் நடித்த 'ஆளவந்தான்' உருவான கதை
கமலஹாசன் நடித்த "ஆளவந்தான்" படத்தை பிரமாண்டமாக கலைப்புலி தாணு தயாரித்தார்.

இந்தப் படத்துக்கு முன்னதாக, தேசிய விருது பெறவேண்டும் என்ற நோக்கத்துடன், "முகம்" என்ற படத்தை உருவாக்கினார். அதுபற்றி தாணு கூறியதாவது:-

"பாலு மகேந்திரா இயக்கத்தில் நான் தயாரித்த "வண்ணவண்ண பூக்கள்" படத்துக்கு தேசிய விருது கிடைத்தபோதிலும், எனக்கு மகிழ்ச்சி இல்லை. அதாவது, சிறந்த படைப்புக்கு விருது கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சி இல்லை.

நான் இப்படிச் சொல்ல காரணம் இருக்கிறது. அந்த வருடத்தில் ரஜினி நடித்த தளபதி படமும், கமல் நடித்த குணா படமும் வெளியாகி இருந்தன. நண்பன் மீதான பாசம், தாய் மீது ஏக்கம் என்று ரஜினியின் நடிப்பில் புதிய பரிமாணத்தில் மணிரத்னம் "தளபதி"யை உருவாக்கியிருந்தார். காதலில் அதிகப்படியான அன்பு எந்த மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, கமல் "குணா"வாக படைத்திருந்தார். இந்த 2 காவியங்களோடு என் படத்தை ஒப்பிட முடியவில்லை. அதனால் அடுத்த தடவை தேசிய விருது வாங்கும்போது முழு திருப்தியுடன் அதை பெற்றுக்கொள்கிற மாதிரி ஒரு படம் அமையவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து கொண்டிருந்தது.

இப்படி என் நினைவுப் பெட்டகத்தில் பதியம் போட்டு வைத்திருந்த இந்த ஆசைக்கு, நம்பிக்கை வடிவில் வந்தார், டைரக்டர் ஞானராஜசேகரன். அவர் ஒரு அரசு அதிகாரி என்றாலும், கலை தாகமும் கொண்டவர். படத்தின் சென்சார் சமயத்தில், சென்சார் அதிகாரிகளுடன் அவர் விவாதம் பண்ணுவதே தனி அழகு. தனது கருத்தை அந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நியாயப்படுத்துவார். அவர் "மோகமுள்" படத்தை இயக்கிய பிறகு தனக்கு ஒரு படம் தயாரித்துத் தரும்படி கேட்டிருந்தார். நான் சம்மதம் சொல்ல, "30 லட்ச ரூபாயில் பண்ணுகிற மாதிரி ஒருகதை இருக்கிறது; பண்ணலாம்" என்றார்.

அதோடு, "படத்துக்கு, இளையராஜா இசை. பி.சி.ஸ்ரீராம் கேமரா" என்றார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. அவர் சொன்ன இருவருமே அவரவர் துறையில் ஜாம்பவான்கள். அதிகபட்ச சம்பளம் வாங்குபவர்களும்கூட. டைரக்டர் சொன்ன பட்ஜெட்டை, இவர்கள் சம்பளமே சர்வசாதாரணமாகத் தாண்டிவிடும். எனவே, அவர் சொன்னதை நம்பமுடியவில்லை.

நான் நம்பவில்லை என்பதை புரிந்து கொண்ட ஞானராஜசேகரன் என்னிடம், "தாணு சார்! ஒரு நல்ல படைப்பின் இலக்கு தேசிய விருது என்றிருக்கும்போது, இவர்கள் இருவருமே பணத்தை எதிர்பார்க்கமாட்டார்கள். எனவே, நான் சொன்ன 30 லட்சம் பட்ஜெட்டிலேயே படம் முடிந்துவிடும்" என்றார்.

இப்படி எடுக்கப்பட்ட படம்தான் நாசர் நடித்த "முகம்" படம். பட்ஜெட் 30 லட்சம் என்றாலும் விளம்பரம், பிரிண்ட் போட்ட வகையில் 60 லட்சம் ஆனது. விருதைக் குறிவைத்து எடுத்ததால், வர்த்தக ரீதியிலான வெற்றி கிடைக்கவில்லை. இந்த நேரத்தில், "சன் டிவி" என் படத்தை வாங்கி, நஷ்டத்தை பாதியாக குறைத்தார்கள்.

"முகம்" படத்தை, தேசியவிருதுக்காகத் தயாரித்தோம். ஆனால் விருது கிடைக்காததில், எனக்கு சற்று ஏமாற்றம்தான்."

இவ்வாறு தாணு கூறினார்.

கமல் நடிக்க, தாணு தயாரித்த பிரமாண்டமான படம் "ஆளவந்தான்."

அது தயாரிக்கப்பட்ட பின்னணி குறித்து தாணு கூறியதாவது:-

"நடிப்பில் எப்போதுமே என்னைக் கவர்ந்தவர் கமல்தான். 12 வருடங்களுக்கு முன்பு "தினத்தந்தி"யில் 'இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்' என்ற பகுதியை வெளியிட்டு வந்தார்கள். அதில் எனது பேட்டியும் இடம் பெற்றது.

அந்த பேட்டியில், பிடித்த கடவுள் கருமாரியம்மன், 'பிடித்த மனிதர்' என்ற இடத்தில் ரஜினிகாந்த், 'பிடித்த நண்பர்' என்ற இடத்தில் விஜயகாந்த், 'பிடித்த நடிகர்' என்ற இடத்தில் கமலஹாசன் என்று குறிப்பிட்டிருக்கிறேன். இப்படி நடிப்பால் என்னை வசீகரித்துக் கொண்ட கமல் சாரை வைத்து அதுவரை படம் பண்ணும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை.

ஏதாவது சினிமா விழாக்களில் நானும் அவரும் சந்திக்கும்போது பரஸ்பரம் வணக்கம் சொல்லிக்கொள்வோம்.

பிரதாப்போத்தன் இயக்கி கமல், பிரபு நடித்த 'வெற்றி விழா' படத்துக்கான பின்னணி இசை சேர்ப்பு நடக்கும் நேரம். இளையராஜாவை பார்த்துவிட்டு ரெக்கார்டிங் தியேட்டரில் இருந்து தனது அண்ணன் சந்திரஹாசனுடன் வெளியே வந்து கொண்டிருந்தார், கமல். என்னைப் பார்த்தவர் உற்சாகமாகி, தனது அண்ணனிடம், "அண்ணே! இவர் கலைப்புலி! விளம்பரப்புலி! படத்துக்கு விளம்பரம் பண்றதுலே நிகரற்றவர்" என்றார்.

அவரின் இந்தப் பாராட்டு என்னை கூச்சப்படுத்தியது. நான் சங்கோஜமாக சந்திரஹாசனிடம், "அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சார்" என்றேன்.

அடுத்து, பிலிம்சேம்பர் நிர்வாகி டி.வி.எஸ். ராஜுவுக்கு 'பீஷ்ம விருது' கிடைத்ததற்காக சவேரா ஓட்டலில் பாராட்டு விழா நடந்தது. அந்த விழாவுக்காக நான் அரங்கினுள் நுழையும் நேரத்தில், விழா நாயகரை வாழ்த்திவிட்டு என் எதிரில் கமல் வந்தார். என்னைப் பார்த்தவர், "என்ன தாணு சார்! 'இந்தியன்' படம் உங்களுக்கு கிடைச்சிருக்கணும். 'மிஸ்' பண்ணிட்டீங்க. 'இந்தியன்' தாத்தா கெட்டப்பை பிரமாதமா பப்ளிசிட்டி பண்ணியிருப்பீங்க" என்றார்.

"எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கலை சார்" என்றேன்.

"நீங்க கேட்டதில்லையே" என்றவர், 'சரி நாம பேசுவோம். நாளை காலை 10 மணிக்கு என் ஆபீசுக்கு வந்துடுங்க' என்று சொல்லிவிட்டு புறப்பட்டுப் போனார். மறுநாள் காலை 10 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் சாரின் அலுவலகத்தில் இருந்தேன். அந்த நேரத்தில் ஆபீசுக்கு கமல் சார் போன் செய்தார். நான் வந்திருக்கிறேன் என்பதை போனில் உறுதி செய்து கொண்டவர், "இருக்கச் சொல்லுங்க. டிராபிக்ஜாம்ல மாட்டிக்கிட்டதால், நான் வர இன்னும் அரை மணி நேரம் ஆகும்" என்று கூறினார்.

இந்த தகவல் எனக்கு சொல்லப்பட்டது.

சொன்னபடி அரை மணி நேரத்தில் அலுவலகம் வந்துவிட்டார். லேட்டாக வந்ததற்கு 'ஸாரி' சொன்னவர், "என்ன கதை இருக்கு?" என்று கேட்டார்.

"நண்பர் ஜி.சேகரன் இருக்கிறார். அவரிடம் உங்களுக்கான கதை இருக்கிறது" என்றேன்.

"அவரை நாளை மாலை வரச்சொல்ல முடியுமா?" என்று கேட்டார்.

மறுநாள் மாலையில் நண்பர் ஜி.சேகரனுடன் நானும் கமல் சாரின் அலுவலகத்தில் இருந்தோம்.

கமல் தயாராக இருந்ததால், கதையை கேட்டார். 1947 ஆகஸ்டு 14-ந்தேதி நடப்பதாக வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய கதையை ஜி.சேகரன் 2 1/2 மணி நேரம் இடைவெளியின்றி சொல்லி முடித்தார்.

கதையை கேட்டவர், "நல்லா இருக்கு. ஆனால் பீரியடு (சரித்திர பின்னணி) கதையாக இருக்கு. நானும் 'மருதநாயகம்'னு ஒரு பீரியடு கதையை எடுத்துக்கிட்டிருக்கிறேன். இந்தக் கதையை படமெடுத்தா தாணு சாருக்கு முட்டிகிட்டியெல்லாம் தேய்ஞ்சு போயிடும். அதனால 'பீரியடு' இல்லாத, ஒரு கதை சொல்லுங்கள்" என்றார்.

இந்த சமயத்தில், அவர் எடுத்துக் கொண்டிருந்த "மகளிர் மட்டும்" படத்தில் 'தமிழவன்' என்ற ஒரு கேரக்டரில் நான் நடித்தால் சரியாக இருக்கும் என்று அபிப்ராயப்பட்டிருக்கிறார். இதுபற்றி அவரது அலுவலகத்தில் உள்ள டி.என்.எஸ். என்னைத் தொடர்பு கொண்டு கேட்டபோது "நடிப்பது பற்றி எந்த ஐடியாவும் எனக்கு இல்லை" என்று கூறிவிட்டேன்.

ஆனால் அவர்கள் விடவில்லை. "உங்க பேச்சு, தமிழார்வம் இதெல்லாம் தெரிஞ்சுதான் தூயதமிழ் பேசற அந்த தமிழவன் கேரக்டரில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கமல் விரும்புகிறார்" என்றார்கள்.

அப்போதும் நான் மறுப்பைத் தெரிவிக்க, கமல் சாரே என்னை சந்தித்து நடிக்கும்படி கூறினார். அவரிடமும் 'நடிப்பதாக இல்லை' என்பதை தெளிவுபடுத்தி விட்டேன்.

இந்த நேரத்தில் வினியோகஸ்தர்கள் சங்கத்துக்கும், ரஜினி சாருக்குமான ஒரு சின்ன பிரச்சினையில் முடிவெடுக்க நடிகர் -நடிகைகள் ராகவேந்திரா மண்டபத்தில் கூடியிருந்தார்கள். அந்த கூட்டத்தில் கமலும் இருந்தார். நான் வினியோகஸ்தர்கள் சார்பில் பேசி, இரு தரப்புக்குமான நிலைமையை சீராக்கினேன்.

பிரச்சினை முடிந்ததால், நட்சத்திரங்கள் முகத்தில் மகிழ்ச்சி படர்ந்த நேரத்தில் கமல் ரஜினியிடம் "ரஜினி! ஒருத்தர்கிட்ட என் படத்தில் நடிக்க ரொம்ப நாளா கால்ஷீட் கேட்டுக்கிட்டே இருக்கிறேன். இன்னும் தராமல் டபாய்ச்சிக்கிட்டே இருக்கிறார்" என்றார்.

கமல் சார் என்னிடம் கால்ஷீட் கேட்டதை மனதில் வைத்து இப்படி சொல்ல, உடனே ரஜினி சார், "யார், யார், யாரு உங்க படத்துக்கு கால்ஷீட் தராதது?" என்று முகத்தில் ஆச்சரியத்தை வெளிப்படுத்த...

"இதோ, தாணு சார்தான்!" என்றார், கமல்.

உடனே என்னைப் பார்த்த ரஜினி, "தாணு சார்! நீங்க கமல் சார் படத்தில் நடிக்கிறீங்க. ஓ.கே?" என்று அதிரடியாகச் சொல்ல, நானும் அதே வேகத்தில் "ஓ.கே. சார்!" என்று சொல்லிவிட்டேன்.

"அப்புறம் என்ன?" என்கிற மாதிரி ரஜினி சார் கமலைப் பார்க்க, நானும் "மகளிர் மட்டும்" படத்தில் அந்த 'தமிழவன்' கேரக்டரில் நடித்தேன். கிளைமாக்ஸ் காட்சியில் என்ன வசனம் பேசினால் சரியாக இருக்கும் என படக்குழு விவாதிக்க, நான் 'சட்'டென்று "வாழ்க நீ எம்மான்" என்று சொன்னதை கமல் சார் உடனே அங்கீகரித்து அதையே என்னை பேசச் சொன்னார்.

"மகளிர் மட்டும்" படம் வெள்ளி விழா கொண்டாடியது. நான் நடித்த ஒரு படம் -ஒரே படம் வெள்ளி விழா கொண்டாடியதில் எனக்கொரு திருப்தி.

இதற்குப்பிறகு, கமல் சார் என்னிடம் ரொம்ப நெருக்கமாகிவிட்டார். அந்த ஆண்டு வந்த அவரது பிறந்த நாளின்போது அவரது தாயார் ராஜலட்சுமி அம்மையார் பெயரில் மருத்துவ முகாம் திறந்தார். நான் அதற்கு 10 ஆயிரத்து 6 ரூபாய் காசோலை வழங்கினேன். இந்த விழாவைத் தொடர்ந்து கமல் சாரே தன்னிடம் சில கதைகள் இருப்பதாக சொன்னார்.

முதலில் "நளதமயந்தி" கதையை சொன்னார். (பின்னாளில் மாதவன் நடிப்பில் இந்தப்படம் வந்தது) "கம்மி பட்ஜெட்டா இருக்கே?" என்றேன். "இந்தக் கதையை ஸ்கிரிப்ட் எழுதி ஏ.எம்.ரத்னம் கிட்டே கொடுத்தேன். அவருக்கு தயாரிக்க 'டைம்' கிடைக்கலை" என்றார்.

அதன் பிறகு, ஒரு ஸ்டண்ட் கலைஞனுக்கும் டாக்டர் பெண்மணி ஒருவருக்குமான சந்திப்பை -காதலை விவரிக்கும் 'பம்மல் கே.சம்பந்தம்' கதையை சொன்னார். எனக்கு கதை பிடித்தது. "தயாரிக்கலாம் சார்" என்றேன்.

படத்துக்கு எனது அலுவலகத்தில் சிம்பிளாக பூஜை போட்டேன். கமல் சாரும் வந்து கலந்து கொண்டார். அதன் பிறகு, 'படத்துக்கு ஸ்டில் எடுக்கணும். துபாயில் தேஜல் பத்தினி என்ற தலைசிறந்த புகைப்பட நிபுணர் இருக்கிறார். அவருக்கு தினசரி சம்பளம் ஒரு லட்சம். அவரை அழைப்போமே" என்றார்.

உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்தேன். துபாயில் இருந்து சிறப்பு வகுப்பில் விமானத்தில் வர ஏற்பாடு செய்தேன். அடையாறு பார்க் ஓட்டலில் 5 நாட்கள் தங்கினார். 4 நாள் 'புகைப்படம்' பிடிக்கும் வேலைகள் நடந்தன.

அதுவரை நான் "பம்மல் கே.சம்பந்தம்" கதையைத்தான் தயாரிக்கப்போகிறோம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அந்தக் கதைக்குப் பதிலாக "ஆளவந்தான்" கதையை படமாக்கும் எண்ணத்தில் இருக்கிறார் என்பதை இதற்குப்பிறகுதான் தெரிந்து கொண்டேன்."

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif