ஏற்காடு இடைத்தேர்தலில் நடத்தை விதிகள் மீறல்: தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. புகார்
ஏற்காடு இடைத்தேர்தலில் நடத்தை விதிகள் மீறல்: தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. புகார்
சென்னை, அக். 10-

சேலம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தி.மு.கழக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆர்.இராஜேந்திரன், தலைமைக் கழக வழக்கறிஞர் இ.பரந்தாமன் ஆகியோருடன் சென்று, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரை சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இன்று (10-10-2013) நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.

அம்மனுவின் விவரம் பின்வருமாறு:-

சேலம் மாவட்டம், 83.ஏற்காடு (எஸ்.டி) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 4-12-2013 அன்று நடைபெற உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்தே தேர்தல் நடத்தை விதிகள் செயலாக்கத்திற்கு வருகின்றன என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆனால், இந்த தேர்தல் நடத்தை விதிகள் அத்தொகுதிக்கு மட்டுமே பொருந்தும் என்று தாங்கள் நேற்று (9-10-2013) அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட சில அதிகாரிகள் தேர்தல் நடத்தை விதிகள் மாவட்டம் முழுமையும் பொருந்தும் என்றும் சொல்லி வருகிறார்கள்.

அந்த அடிப்படையில் சேலம் மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து ஊர்களிலும் தி.மு.கழகத்தின் கொடிக்கம்பங்களை, சேலம் மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, மாவட்ட தி.மு.க. நிர்வாகத்திற்கு தெரிவிக்காமல் அவர்களே அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. கொடிக்கம்பங்களை அவர்கள் அகற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

அதைப்போலவே, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகும், மாநில அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை ஏற்காடு தொகுதி அமைந்துள்ள சேலம் மாவட்டம் முழுவதும் நிறைவேற்றி வருகிறார்கள்.
இதுகுறித்து நான் சேலம் மாவட்ட தி.மு.கழக பொறுப்பாளர் என்ற வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை, எனது மனுவின்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்து வருகிறார்கள்.

மேலும், திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும் - சட்டமன்றத் தி.மு.க. குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகிற 14-10-2013 அன்று சேலம், வலசையூரில், தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் நிலையில், இக்கூட்டத்திற்கான அனுமதி வழங்கிட வேண்டுமென மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு முறையாக தெரிவித்தும், இதுவரை அதற்கு உரிய அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், ஆளும்கட்சியான அ.தி.மு.க. அமைச்சர்கள் தொகுதி முழுவதிலும் நாள்தோறும் வந்து, தேர்தல் பணிகளை
மேற்கொண்டு வருகிறார்கள்.

எனவே, தேர்தல் நடத்தை விதிகள் ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் பொருந்துமா அல்லது சேலம் மாவட்டம் முழுவதற்கும் பொருந்துமா என்பதை முறையாக அறிவித்திட வேண்டுமென்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிடவும் - அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு அனுமதி வழங்குவதைப் போல, தி.மு.கழக தலைவர்களுக்கும் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள உரிய அனுமதி வழங்கிடவும் - மாநில அரசின் சார்பில் எந்தவித மக்கள் நலத்திட்ட உதவிகளும் சேலம் மாவட்டத்தில் எவ்விடத்திலும் வழங்கப்படக் கூடாது என்று உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் சிவலிங்கம் குறிப்பிட்டிருந்தார்.

இப்புகார் மனுவினை பெற்றுக் கொண்டு முழுவதும் படித்த தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் “ஏற்காடு தொகுதியைத் தவிர மாவட்டத்தின் எந்தப் பகுதிகளிலும் தி.மு.க. கொடி கம்பங்களை அகற்றவே கூடாது;

அதைப்போல, தி.மு.க. தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு உரிய அனுமதியை உடனடியாக வழங்கிட வேண்டும்; வருகிற 18-10-2013 அன்று நானே நேரில் சேலத்திற்கு வந்து, உங்களைப் போன்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் நிர்வாகிகள் 5 அல்லது 6 பேரை சந்தித்து, அவர்கள் கருத்தை அறிந்து அதற்குரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பேன்; இந்த இடைத்தேர்தல் நடுநிலையுடன் நடைபெறும்” என்று உறுதி அளித்துள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
மேலும் தலைப்புச்செய்திகள்