விஜயகாந்த் நடித்த 'தர்மா' 90 நாட்களில் எடுக்க வேண்டிய 'கிளைமாக்ஸ்' 3 நாட்களில் எடுத்து முடித்து சாதனை
விஜயகாந்த் நடித்த 'தர்மா' 90 நாட்களில் எடுக்க வேண்டிய 'கிளைமாக்ஸ்' 3 நாட்களில் எடுத்து முடித்து சாதனை
விஜயகாந்த் நடித்த 'தர்மா' படத்தை கேயார் டைரக்ட் செய்தார். இந்தியில் 90 நாட்களில் எடுக்கப்பட்ட உச்சகட்ட ('கிளைமாக்ஸ்') காட்சியை தமிழில் மூன்றே நாட்களில் எடுத்து முடித்தார்.

டைரக்டராகப் பணியாற்றியபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, அவர் கூறியதாவது:-

'அலெக்சாண்டர் படத்தைத் தொடர்ந்து, பாண்டியராஜனை வைத்து 'கவலைப்படாதே சகோதரா' என்ற படம் இயக்கினேன். அதனை அடுத்து 'கும்பகோணம் கோபாலு' இயக்கினேன். இது 26 நாட்களில் எடுக்கப்பட்ட படம்.

ஏவி.எம். ஸ்டூடியோவில் 'கும்பகோணம் கோபாலு' படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது அங்கு விஜயகாந்த் வந்தார். 'ராவுத்தர் சிரமத்தில் இருக்கிறார். அவருக்கு நீங்கள் உதவ வேண்டும். ஒரு படம் இயக்கித் தரவேண்டும்' என்றார்.

நான் 'சரி' என்று ஒப்புக்கொண்டேன்.

ஒரு காலத்தில் எனக்கு 'ஆக்ஷன்' படம் எடுக்க வருமா என்று சந்தேகப்பட்ட விஜயகாந்த், இப்போது ஆக்ஷன் படம் இயக்க அழைத்தது, எனக்குக் கிடைத்த வெற்றி. அவர் வந்தது பிப்ரவரி 2-ந்தேதி. ஒரே வாரத்தில் பிப்ரவரி 9-ந்தேதி படப்பிடிப்பை தொடங்கி விட்டோம். அது 'ஜித்தி' என்ற இந்திப்படத்தின் கதை. அதுதான் நான் இயக்கிய 'தர்மா.'

இந்தப் படத்தை இயக்க ஒப்புக்கொள்ளும்போது என் கையில் மூன்று படங்கள் இருந்தன. `தர்மா'வைச் சேர்த்து நான்கு படங்கள். 'தர்மா' முடிவதற்குள் 'ஜான்சி.' இப்படி ஒரு கட்டத்தில் என் கையில் 5 படங்கள் இருந்தன. என் சூழலை விஜயகாந்திடம் எடுத்துச் சொன்னேன். அதை அனுசரித்துக் கால்ஷீட் கொடுப்பதாக அவர் உறுதி கூறிய பிறகுதான், படத்தை இயக்க சம்மதித்தேன். அதனால்தான் விரைவாகவே படத்தை ஆரம்பித்தேன்.

சன்னிதியோல் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற `ஜித்தி' படத்தின் கதை உரிமையை ராவுத்தர் வாங்கி வைத்திருந்தார். அதை அப்படியே எடுப்பது என்று முடிவு செய்திருந்தார்கள்.

இந்திப்படம் பெரிய பட்ஜெட் படம். அதன் கிளைமாக்ஸ் - ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே 90 நாட்கள் எடுத்தார்களாம்! அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு மட்டுமே 2 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்ட படம் `ஜித்தி.'

நான் சிந்தித்தேன். `ராவுத்தரே சிரமத்தில் இருக்கிறார். அதிலிருந்து மீள்வதற்குப் படம் எடுக்கிறார். இந்திப்படமோ பிரமாண்டமான படம். கிளைமாக்ஸ் காட்சிதான் படத்தின் பெரிய பலம். அதற்காக இந்தியில் உள்ளதுபோல் குண்டு வெடிப்பது, கார்கள் வெடித்துச் சிதறுவது போன்றவற்றை எடுக்கப்போனால் 90 நாட்களாகும். 2 கோடி செலவாகும். அப்படியே எடுக்கலாம். ஆனால் பட அதிபர் கரை சேரமுடியாது. நிச்சயமாக இழப்புதான் ஏற்படும். கஷ்டத்தைப் போக்க படம் எடுக்க வந்தவரை நாமும் கஷ்டத்திலும் - நஷ்டத்திலும் தள்ளிவிடக்கூடாது' என்று முடிவு செய்தேன்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை, பிரமாண்டமாகவும், அதே சமயத்தில் குறைந்த செலவிலும் எடுப்பது பற்றி சிந்தித்தேன். ஒரு முடிவு கிடைத்தது.

90 நாட்களில் எடுக்கப்பட வேண்டிய கிளைமாக்ஸ் காட்சியை 3 நாட்களில் எடுத்து முடித்தேன். நான் செய்தது இதுதான்: இந்தியில் `ஜித்தி' படத்தில் இடம் பெற்ற கிளைமாக்ஸ் காட்சி ரீலை வாங்கி, அதில் ஹீரோ சன்னிதியோல் சம்பந்தப்பட்டவற்றை நீக்கிவிட்டு அதற்குரிய இடத்தில், விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை 3 நாட்களில் எடுத்து இணைத்தேன்.

ஒரிஜினலாக இந்திப்படத்துக்கு எடுக்கப்பட்ட பிரமாண்டமான குண்டு வெடிப்பு, கார் எரிவது போன்ற காட்சிகளை அப்படியே தமிழில் பயன்படுத்திக்கொண்டோம்.

இந்த தொழில் நுட்பம் எல்லோராலும் பாராட்டப்பட்டது. வெளியே இது தெரியாது. இசை அமைத்த இளையராஜா கூட 'இவ்வளவு செலவு செய்து எடுத்திருக்கிறீர்களே' என்று ஆச்சரியப்பட்டார். அவரால்கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த அளவுக்கு காட்சிகளை தத்ரூபமாக எடுத்து பொருத்தமாக இணைத்தேன். இந்த ரகசியத்தை இப்போதுதான் சொல்கிறேன். ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், படம் இயக்குபவருக்கு தயாரிப்பாளரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை எடுத்துக் காட்டத்தான்.

ஒரு படத்தில் தயாரிப்பாளர் பணத்தை முதலீடு செய்கிறார். இயக்குனர் திறமையை முதலீடு செய்கிறார். அவரது மூலதனம், இவரது `மூளை'தனம் இரண்டும் இணையவேண்டும். தயாரிப்பாளரின் மூலதனத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று இயக்குனரின் மூளை சிந்தித்து செயல்பட வேண்டும்.

எந்த நோக்கத்திற்கு படம் எடுக்கப்பட்டதோ அது நிறைவேறியது. `தர்மா' பெரிய வெற்றி பெற்றது. பட அதிபர் ராவுத்தர் வசூல் மழையில் நனைந்தார். அவரை இக்கட்டான சூழலில் இருந்து மீட்ட ஆத்ம திருப்தி எனக்கு ஏற்பட்டது.

இந்திப்படம் போலவே கிளைமாக்ஸ்காட்சியை எடுக்க வேண்டும் என்று நான் முடிவு செய்திருந்தால், பட அதிபருக்கு நிச்சயம் நஷ்டம்தான் ஏற்பட்டிருக்கும்.

'தர்மா' படத்தைப் பார்த்த ரஜினிகூட, வெகுவாகப் பாராட்டினார்.

1998-ல் ஆரம்பித்து 2001-ல் வெளியான படம் - என் வாழ்க்கையில் எந்த கணிப்புக்கும் அடங்காத படம் 'காதல் ரோஜாவே.'

நடிகை ஷீலாவின் மகன் விஷ்ணுவை நாயகனாக்கி அமெரிக்காவில் இருந்த பூஜா குமாரை நாயகியாக்கி இளையராஜா அவர்களின் இசையில் உருவாக்கிய படம்.

சரியான நேரத்தில் எடுத்து முடித்து விட்டாலும் தயாரிப்பாளர் தரப்பில் பிரச்சினை இருந்ததால், தாமதமானது. வெளியீட்டுத் தேதி தள்ளிக்கொண்டே போய் ஒரு நாள் வெளியானது. பெரிதாக ஓடவில்லை.

அதே காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட இன்னொரு படம் 'ஜான்சி.' விஜயசாந்தி, ராம்கி நடிப்பில், இளையராஜா இசையில் என் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

ஒரு பாடல் காட்சி உள்பட 12 நாள் படப்பிடிப்பு நடந்தது. தயாரிப்பாளருக்கும் படத்தை தொடர விருப்பமில்லை. அவருக்கு என்ன பிரச்சினையோ? விஜயசாந்தியும் அரசியலில் இறங்கிவிட்டார். படம் நின்றுபோய் விட்டது.

என் சினிமா வாழ்க்கையில், நின்று போன ஒரே படம் 'ஜான்சி'தான்.'
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
மேலும் சினி வரலாறு