AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif
சோதனைகளை வென்று 'மை டியர் குட்டிச்சாத்தான்' மகத்தான வெற்றி!
சோதனைகளை வென்று 'மை டியர் குட்டிச்சாத்தான்' மகத்தான வெற்றி!
தமிழில் வெளிவந்த முதல் கனபரிமாண ('3டி') படம் 'மை டியர் குட்டிச்சாத்தான்.' துணிச்சலுடன் அதிக விலை கொடுத்து வாங்கி, பல சோதனைகளை சமாளித்து, ரிலீஸ் செய்தார், 'கேயார்.' அப்படம் மாபெரும் வெற்றி பெற்று, அவர் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது.

'மை டியர் குட்டிச்சாத்தான்' பட அனுபவம் பற்றி 'கேயார்' கூறியதாவது:-

'அப்பச்சனின் நவோதயா நிறுவனம் ஜிஜோ இயக்கத்தில் மலையாளத்தில் தயாரித்த 'குட்டிச்சாத்தான்' படம், கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அது ஒரு '3டி' படம். கண்ணாடி போட்டுக்கொண்டு படம் பார்க்க வேண்டும். அந்த தொழில் நுட்பம் நமக்குப் புதியது. இந்த '3டி' எனப்படும் முப்பரிமாணத் தொழில் நுட்பம் பற்றிய அடிப்படையான விஷயங்கள் எனக்குத் தெரியும்.

நான் திரைப்படக்கல்லூரியில் படித்தது பிலிம் பிராசஸிங் படிப்பு. எனவே, எனக்கு '3டி' பற்றி கூடுதலாகவே அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருந்தது.

'குட்டிச்சாத்தான்' கேரளாவில் வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அதை வாங்கி தமிழில் டப் செய்ய பலர் விரும்பினார்கள். ஆனாலும் அதன் தயாரிப்பாளர் மிகப்பெரிய விலையைச் சொல்லிக்கொண்டு இருந்தார். போட்டி அதிகரிக்கவே அவர் விலையைக் கூட்டிக் கொண்டே இருந்தார். அதை வாங்குவதற்கு இளையராஜா, பாலாஜி, ஜீவி போன்றவர்கள் முயற்சி செய்தார்கள். விலை ஏறிக்கொண்டே போனதால் சற்று தயங்கினார்கள்.

இந்த நிலையில் அதன் தயாரிப்பாளர் அப்பச்சனை அணுகினேன். சந்தித்தபின் அதை வாங்குவதென்று துணிச்சலாக முடிவு செய்தேன். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யும் உரிமையை நான் வாங்கினேன். எவ்வளவு விலை தெரியுமா? ஒரு கோடியே பதினைந்து லட்சம் ரூபாய்! அப்போது, ரஜினி படத்தின் தமிழ்நாட்டு வியாபாரமே நாற்பது முதல் ஐம்பது லட்சம்தான். டப்பிங் பட வியாபாரத்தின் விலை ஒரு லட்சம் தான்.

ரஜினி படத்தைவிட கூடுதலாகக் கொடுத்து ஒரு டப்பிங் படத்தை இவர் வாங்குகிறாரே என்று பலருக்கும் ஆச்சரியம் - அதிர்ச்சி!

முதலில் இந்திரா தியேட்டரை வாங்கிய நான், பிறகு பல தியேட்டர்களை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தேன். அப்படி என் கட்டுப்பாட்டில் இருந்த சத்யம் தியேட்டரில்தான் 'மை டியர் குட்டிச்சாத்தான்' படத்தை வெளியிட்டேன்.

'3டி' பட தொழில் நுட்பம், தியேட்டர்களுக்கும் புதிது. எனவே, திரையிடும் விஷயத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அவ்வளவுதான். பெரிய இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.

இருந்தாலும் தைரியமாகவே இந்த விஷயத்தில் இறங்கினேன். முதலில் சத்யம் தியேட்டர். பிறகு ஈகா. சில நாட்களில் தமிழ்நாடெங்கும் திரையிட்டேன்.

1984 தீபாவளிக்கு இப்படம் வெளியானது. அதே சமயத்தில், 'வைதேகிகாத்திருந் தாள்'படத்தையும் வாங்கி வெளியிட்டேன். இரண்டுமே வெற்றிப் படங்களாக அமைந்தன.

இதற்கு முன், 1982-83-ல் புதுப்படங்களை வாங்கி வெளியிட்டதில் எனக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.1ஷி கோடி! இவ்வளவு நஷ்டப்பட்டாலும் எனக்கு பல அனுபவங்கள் கிடைத்தன. பட விநியோகத்தின் நெளிவு சுழிவுகளைத் தெரிந்து கொண்டேன்.

'மை டியர் குட்டிச்சாத்தான்', எனது வாழ்க்கையில் எனக்குக்கிடைத்த முதல் பெரிய வெற்றி. எனவே மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

இருப்பினும் எதிர்பாராத சோதனைகள் ஏற்பட்டன. படம் வெளியான நான்கு நாட்களில், இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அதனால் நாடெங்கும் கலவரம் மூண்டது. தமிழ்நாட்டிலும் பல தியேட்டர்கள் சேதப்படுத்தப்பட்டன. அது என் பட வெற்றியைப் பாதித்தது. பிறகு சமாளித்து வேகமெடுத்தது.

10-வது நாள் இன்னொரு பிரச்சினை. அப்போது சென்னை எங்கும் `மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் நோய் பரவியது. '3டி' படம் என்பதால் கண்ணாடி போட்டுக்கொண்டுதான் படம் பார்க்க வேண்டும். அப்படி நாங்கள் தியேட்டரில் கொடுத்த கண்ணாடி மூலம்தான் இந்த நோய் வருகிறது என்று சிலர் பிரசாரம் செய்தார்கள்! நான் கவலைப்படவில்லை. எல்லா தியேட்டர்களிலும் கிருமிகள் பரவாமல் தடுக்க கண்ணாடிகளை 'ஸ்டெரிலெஸ்' முறையில் சுத்தம் செய்யும் மெஷின் வாங்கிக் கொடுத்தேன். அதனால் எந்தக் கிருமியும் கண்ணாடி மூலம் பரவ வாய்ப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. குழந்தைகளை தைரியமாக படம் பார்க்க அழைத்து வந்தார்கள்.

மீண்டும் சுறுசுறுப்பான வசூல் தொடங்கியது. முதலில் சென்னைக்கு 3 பிரதிகள் வெளியிட்டோம். மற்ற மாவட்டங்களுக்கு தலா ஒரு பிரதி. அடுத்த வாரமே 60 பிரதிகள் போடுமளவுக்கு அபார வெற்றியடைந்தது. 'எப்படி கண்ணாடி அணிந்து படம் பார்ப்பது?' என்று ரஜினி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், ஜிதேந்திரா ஆகியோர் விளக்கப்படத்தின் `டெமோ'வில் இலவசமாக நடித்துக் கொடுத்தது மறக்க முடியாத அனுபவங்கள்.

குழந்தைகளுக்கான படங்களுக்கு வரிச்சலுகை உண்டு. 'குட்டிச்சாத்தான்' படத்துக்கும் அரசாங்கம் வரிச்சலுகை அளித்திருந்தது.

பெரும்பாலும் வரி விலக்கு பெறும் படங்கள் வெற்றி பெறுவதில்லை. எனவே, ஓடாத படங்களுக்கே அரசு வரி விலக்கு தருவதாக சிலர் தவறாக எண்ணிக் கொள்வதும் உண்டு. இதை சிலர் எனக்கு எதிராகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

அப்போது முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தார். ஒரு சனிக்கிழமையன்று தமிழ்நாடு அரசின் அன்றைய தலைமைச் செயலாளர் எனக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், என் படத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த வரிச்சலுகையை ரத்து செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல; படம் வெளியாகியிருந்த தியேட்டர்களுக்கு எல்லாம் அதிகாரிகள் சென்று, வரி செலுத்த வேண்டுமென்று கெடுபிடி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

எல்லா ஊர்களிலிருந்தும் எனக்கு போன் மேல் போனாக வர ஆரம்பித்தது. படம் ஏற்கனவே ஓடியிருந்த 7 நாட்களுக்கும் டிக்கெட்டுடன் வரி வசூலிக்கவில்லை. ஆனால், அந்த 7 நாட்களுக்கும் வரி கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டார்கள்! இதனால், விநியோகஸ்தர்கள் போனில் என்னுடன் கவலையுடனும், பதற்றத்துடனும் பேசினார்கள்.

ஏற்கனவே கொடுத்த வரிச்சலுகையை திடீரென்று ரத்து செய்ததும், ரசிகர்களிடம் வசூலிக்கப்படாத வரிப்பணத்தை எங்களிடம் கேட்பதும் அரசின் தவறு என்பது எனக்குத் தெளிவாக தெரிந்தது. எனினும், கோர்ட்டுக்கு சென்றால், முடிவு தெரிய கொஞ்சம் நாட்களாகும். அதுவரை படத்தை ஓட்டவும், வரி கட்டவும் என்ன செய்வது?

நான் என்றுமே பிரச்சினைகளைக் கண்டு ஓடுவதில்லை. இழப்புகளால் கலங்குவதில்லை.

எனவே, விநியோகஸ்தர்களிடமும், தியேட்டர் அதிபர்களிடமும் நான் கூறினேன்: 'ஏற்கனவே அறிவித்து விட்டபடி, தொடர்ந்து ரசிகர்களிடம் வரி இல்லாமல் குறைந்த கட்டணத்தையே வசூலியுங்கள். அதிகாரிகள் கேட்கும் வரியை 'செக்' போட்டு கொடுத்து விடுங்கள். அந்தத் தொகைக்கு நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன்' என்றேன்.

விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். குட்டிச்சாத்தான் தொடர்ந்து 'அவுஸ்புல்' காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது. அதிகாரிகளுக்கு வரியை கையிலிருந்து கொடுத்துக் கொண்டிருந்தோம். அதே சமயத்தில் நீதியை நிலைநாட்ட, கோர்ட்டுக்கு செல்ல தீர்மானித்தேன்.'
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif

மேலும் சினி வரலாறு