MudaliyarMatrimony_300x100px.gif
டைரக்டர், தயாரிப்பாளர், தியேட்டர் அதிபர், விநியோகஸ்தர் 4 துறைகளில் சாதனை படைத்த 'கேயார்'எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெற்றார்
டைரக்டர், தயாரிப்பாளர், தியேட்டர் அதிபர், விநியோகஸ்தர் 4 துறைகளில் சாதனை படைத்த 'கேயார்'எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெற்றார்
சினிமா வாசனையே இல்லாத குடும்பத்தில் பிறந்து, திரைப்படத் தொழிலை முறையாகப் பயின்று, திரைப்படத் தயாரிப்பின் ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்தவர் 'கேயார்.'

கேயாரின் இயற்பெயர் கோதண்டராமையா. அதன் சுருக்கம்தான் 'கேயார்.' பெற்றோர்: சீனிவாசலு - சுப்பம்மாள். கேயாருக்கு 2 சகோதரர்கள்; 2 சகோதரிகள்.

1-1-1953-ல் பிறந்த இவர் படித்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். வடசென்னையில் உள்ள தியாகராய கல்லூரியில் படித்து 'பி.ஏ' பட்டம் பெற்றார்.

சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாத குடும்பத்தில் பிறந்தாலும், இவர் நாட்டம் சினிமா மீது சென்றது.

1972-ல், தமிழக அரசு சென்னை அடையாறில் நடத்தி வந்த திரைப்படக் கல்லூரியில் சேர முடிவு செய்து மனு அனுப்பினார். டைரக்ஷன் துறையில் பயிற்சி பெறவேண்டும் என்பது இவரது நோக்கம்.

பிரபல டைரக்டர் இரட்டையர்கள் கிருஷ்ணன் - பஞ்சுவில் ஒருவரான பஞ்சு இவரிடம் 'நேர்காணல்' நடத்தினார். 'சினிமா உலகைச் சேர்ந்த பிரபலமானவர்களோ, அரசியல் பிரமுகர்களோ உங்களுக்கு பரிந்துரை செய்தால், டைரக்ஷன் பிரிவில் உங்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது' என்றார், பஞ்சு.

யாருடைய சிபாரிசையும் விரும்பாத கேயார், டைரக்ஷன் பிரிவுக்கு பதிலாக சினிமா தொழில் நுட்பம் பற்றிய பிரிவில் சேர்ந்தார்.

இதன் பிறகு நடந்தது பற்றி கேயார் கூறியதாவது:-

'1972 முதல் 1975 வரை 3 வருடம் சினிமா தொழில் நுட்பம் பயின்று 'டி.எப்.டி' பட்டம் பெற்றேன்.

அப்போதுதான், சென்னை தொலைக்காட்சி தொடங்கப்பட்டிருந்தது. 6 மாத காலம் தற்காலிகமாக பணியாற்றினேன். பின்னர், பணியை நிரந்தரம் ஆக்க நேர்முக பேட்டி நடத்தினார்கள். கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சரியாக பதில் அளித்தேன். அப்படி இருந்தும் என்னை தேர்வு செய்யவில்லை. தற்காலிகப் பணியில் இருந்தபோது, எனக்கும், ஒரு அதிகாரிக்கும் ஏற்பட்ட பிரச்சினைதான் இதற்குக் காரணம் என்பதை அறிந்தேன்.

அநீதி நடந்தால் அதை நான் சகித்துக் கொள்ளமாட்டேன். மேலதிகாரியின் அறைக்குச் சென்றேன். 'கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில் சொல்லியும் என்னை ஏன் தேர்வு செய்யவில்லை? மற்றவர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்தீர்கள்? எல்லோருடைய மார்க்கு பட்டியலையும் எனக்குத் தரவேண்டும்' என்று கூறினேன். 'இதை நீங்கள் செய்யத் தவறினால், நான் கோர்ட்டுக்குப் போவேன்' என்று எச்சரித்து விட்டு அங்கிருந்து வெளியேறினேன்.

உடனே அந்த அதிகாரி, வரவேற்பாளருக்கு போன் செய்து என்னை மேலே அழைத்தார். 'இதை பிரச்சினை ஆக்க வேண்டாம். இன்னும் 3 நாட்களுக்குள் உங்களுக்கு நியமன உத்தரவு அனுப்பப்படும்' என்றார்.

அதேபோல், நியமன உத்தரவு வந்தது. தொடர்ந்து சென்னை தொலைக்காட்சியில் வேலை பார்த்தேன்.

இதற்கிடையே எனக்குத் திருமணம் நடந்தது. தொலைக்காட்சி வேலையை ராஜினாமா செய்துவிட்டு, என் மனைவி பெயரால் இந்திரா திரையரங்கை, கே.கே.நகரில் 1978 தீபாவளியன்று தொடங்கினேன்.

தியேட்டர் நடத்தி அனுபவம் பெற்றபின், திரைப்பட விநியோகஸ்தர் ஆக விரும்பினேன். திரைப்படக் கல்லூரியில் என்னுடன் படித்த நண்பர்கள், 'கேரளாவில் படத்தொழில் நன்றாக இருக்கிறது. மலையாளத்தில் நீங்களே ஒரு படம் தயாரித்து டைரக்ட் செய்யுங்கள்' என்றார்கள். படத்தொழிலில் தீவிரமாக ஈடுபடுவதற்கு முன், இப்படி ஒரு படம் எடுத்து அனுபவம் பெறுவது நல்லது என்று தோன்றியது.

1979-ம் ஆண்டில், 'சிசிரத்தில் ஓர் வசந்தம்' என்ற மலையாளப்படத்தை நானே தயாரித்தேன். கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளையும் நான் ஏற்றேன். தற்போது தமிழில் முன்னணி கதாநாயகனாக விளங்கும் பிருதிவிராஜின் தந்தை சுகுமாரன்தான், அந்தப் படத்தின் கதாநாயகன். நடிகை சுபா கதாநாயகி.

4ஷி லட்சம் ரூபாய் செலவில் படம் தயாரித்து முடித்து, முதல் பிரதி ரெடி ஆயிற்று.

படம் நன்றாக அமைந்திருந்த போதிலும், விநியோகத்துறையில் அனுபவம் இல்லாத காரணத்தால், படத்தை விற்க முடியாமல் சிரமப்பட நேர்ந்தது. பிறகு ஒரு வழியாக சுகுணா பிலிம்ஸ் உதவியுடன் படத்தை ரிலீஸ் செய்தேன். சுமாராக ஓடியது.

படத்தயாரிப்பாளராக வெற்றி பெறவேண்டுமானால், முதலில் விநியோகத்துறையில் நல்ல அனுபவம் பெறவேண்டும் என்று தீர்மானித்தேன். இத்துறையில் ஏற்கனவே அனுபவம் பெற்றிருந்த 'கமலா மூவிஸ்' பாண்டுரங்கன் அவர்களுடன் சேர்ந்து, ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருந்த சில படங்களை வாங்கினேன். இதில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது.

1981 முதல் மூன்று ஆண்டுகள் புதுப்படங்களை வாங்கி விநியோகித்தேன். அதில் எனக்கு பெரிய அடி. 1ஷி கோடி ரூபாய் நஷ்டம்!

ஆயினும் நான் மனம் தளரவில்லை. 1983-ல் ரஜினிகாந்த் நடிக்க, 'தாய்வீடு' என்ற படத்தை தேவர் பிலிம்ஸ் தயாரித்தது. சென்னை, செங்கல்பட்டு, வடஆற்காடு, தென்ஆற்காடு மாவட்டங்களுக்கான உரிமையை ரூ.12 லட்சத்துக்கு வாங்கினேன்.

நான் அதிக விலை கொடுத்து வாங்கியதை, மூத்த விநியோகஸ்தர்கள் விரும்பவில்லை. 'விலையை ஏற்றி மார்க்கெட்டை கெடுக்காதீர்கள்' என்றார்கள். 'புதியவர்களுக்கு தேவர் பிலிம்ஸ் படம் கிடைப்பது அரிது. எனவேதான், அதிக விலை கொடுத்தேன். இனி இப்படி நடக்காது' என்று நான் அவர்களுக்கு உறுதியளித்தேன்.

'தாய்வீடு' நன்றாக ஓடி, என் கடன் சுமையை குறைத்தது.

அந்தக் காலக்கட்டத்தில், பஞ்சு அருணாசலம் நிறைய படங்களைத் தயாரித்து வந்தார். அவர் எனக்கு நல்ல நண்பர்.

1984-ல் ரஜினிகாந்த் நடித்த 'தம்பிக்கு எந்த ஊரு', சிவாஜிகணேசன் நடித்த 'வாழ்க்கை' ஆகிய இரண்டு படங்களை அவர் தயாரித்தார். அந்தப் படங்களின் விநியோக உரிமையை நான் பெற்றேன்.

இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெற்றன.

இந்த சமயத்தில் என் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif