300 படங்களில் நடித்து சந்திரசேகர் சாதனை
300 படங்களில் நடித்து சந்திரசேகர் சாதனை
சினிமாவில் எந்தப் பின்னணியும் இல்லாமல் சொந்த முயற்சியால் நடிகரானவர் சந்திரசேகர். ஹீரோ, குணசித்ரம், வில்லன் என்று எந்த கேரக்டரிலும் தன்னை இயல்பாக வெளிப்படுத்திக் கொள்ளும் சந்திரசேகர், சினிமாவில் ஏற்று நடிக்காத கேரக்டர்களே இல்லை. 28 வருடங்களில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தொடர்ந்து நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

சந்திரசேகருக்கு சொந்த ஊர் திண்டுக்கல்லை அடுத்த வாகைக்குளம். திண்டுக்கல்லில் உள்ள டட்லி பள்ளியில்தான் ஆரம்பப்படிப்பு. பள்ளியில் ஆறாவது படிக்கும்போது, மற்ற மாணவர்களிடம் இல்லாத ஒரு திறமை இவரிடம் இருந்தது. அதாவது பாடம் நடத்தும் ஆசிரியர்களின் `மேனரிசம்' என்னவோ, அதை அப்படியே உள்வாங்கி, அந்த ஆசிரியர் பாடம் நடத்தி விட்டுப் போனதும் அதை அப்படியே நடித்துக் காட்டுவார்! இப்படி நடிக்க ஆரம்பித்தவருக்கு, நிறைய சினிமா பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தினமும் வீட்டில் காய்கறி வாங்க கொடுக்கும் காசில் கமிஷன் பார்த்து அதை படம் பார்க்க வைத்துக் கொள்வார்.

25 பைசா தேறினால் ஒரு படத்துக்கான கட்டணம் ஆகிவிடும். சைக்கிள் பாசுக்கு 5 பைசா. 30 பைசாவுக்குள் படம் பார்க்கும் கனவு நிறைவேறி விடும். இதனால் எப்போது கையில் 30 பைசா தேறுகிறதோ, அன்றெல்லாம் வகுப்புக்கு `கட்' அடிக்க ஆரம்பித்தார். படம் பார்த்து முடித்த பிறகு படத்தில் நடித்தவர்கள் பற்றி அறிய ஆசை ஏற்பட்டது. திண்டுக்கல் பஜாரில் ஞாயிறு தோறும் பிளாட்பாரத்தில் புத்தக கடை போடப்பட்டிருக்கும். அந்தக் கடையில் "பேசும் படம்'', "பிலிமாலயா'' முதலிய சினிமா பத்திரிகைகளும் இருக்கும். தேடிப்பிடித்து அதை படிக்கும் சந்திரசேகர், நடிகராகவேண்டும் என்ற கனவை தனக்குள் விதைத்துக் கொண்டது அப்போதுதான்.

கலைஞரின் "பராசக்தி'', "மனோகரா'' வசனங்கள் அவரைக் கவர்ந்தன. அந்த வசனங்கள் அவருக்கு மனப்பாடம். 1965-ல் தி.மு.கழகம் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அப்போது 6-வது படித்துக் கொண்டிருந்த சந்திரசேகர் தன் சக மாணவர்களுடன் கலந்து கொண்டார். 11-வது வகுப்பை முடித்த சந்திரசேகரின் அண்ணன் பாண்டியன் ஓவியக் கல்லூரியில் சேர சென்னை புறப்பட்டார். அண்ணனின் சென்னைப் பிரவேசத்தில் சந்திரசேகர்தான் அதிகம் மகிழ்ந்தார்.

சென்னையில்தான் அவரை கலையால் ஆட்டி வைக்கும் நடிகர் - நடிகைகள் இருக்கிறார்கள். அண்ணனின் சென்னை பிரவேசம் தன்னை எப்படி பரவசப்பட வைத்தது என்பதை சந்திரசேகர் கூறுகிறார்:- "சென்னை வந்த அண்ணன் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து விட்டார். எனக்கு எஸ்.எஸ்.எல்.சி. (அப்போதைய 11-ம் வகுப்பு) முடிந்ததும் சென்னை வந்து நடிப்புக் கல்லூரியில் சேர ஆசை. அண்ணன் ஏற்கனவே சென்னை வந்துவிட்டதால், எனக்கும் வீட்டில் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

அப்பாவிடம் என் ஆசையை சொன்னபோது, "முதலில் டிகிரி (பட்டப்படிப்பு) முடி! அப்புறம் பார்த்துக்கலாம். ஒரு டிகிரி இருந்தால் நிச்சயம் உனக்கு சோறு போடும்'' என்றார் அப்பா. அப்பா சொன்னதை தட்ட முடியவில்லை. அதனால் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் சேர விண்ணப்ப படிவம் வாங்கப்போனேன். அதற்கும் பெரிய கூட்டம். வரிசையில் நின்றேன். கடைசியாக எனக்கு முன்நின்று கொண்டிருந்த 2 பேர் பணம் கட்டிவிட்டால் அடுத்து நான்தான் கட்ட வேண்டும்.

அப்போது மறுபடியும் என் மனத்திரை சினிமா பக்கமாக ஓடியது. கல்லூரியில் சேர்ந்து விட்டால் 3 ஆண்டுகளுக்கு சினிமாவை நினைத்துக்கூட பார்க்க முடியாது. எனவே "படிப்பா, நடிப்பா?'' என எனக்குள் கேட்டுக்கொண்டு தடுமாறி நின்ற நேரத்தில் எனக்கு முன்னதாக நின்றவரும் பணத்தை கட்டிவிட்டார். அடுத்து நான். இப்போது என் சினிமா ஆசை வென்றது. எனக்குப்பின் நின்றவருக்கு வழிவிட்டுவிட்டு, வரிசையை விட்டு வெளியே வந்தேன். விண்ணப்ப படிவத்தை கிழித்துப் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். பீஸ் கட்ட அப்பா கொடுத்த பணத்தை திரும்பக் கொடுத்தேன். கொடுக்கும்போதே அழுகை வந்துவிட்டது. "ஏண்டா என்னாச்சு?'' அப்பா கேட்டார். நான் அப்பாவிடம், "கல்லூரியில் சேர்ந்து 3 வருஷம் படித்த பிறகும் சினிமாவுக்குத்தான் போகப்போகிறேன்.

இப்போதே முயற்சி செய்தால் இந்த மூன்று வருஷம் மிச்சமாகுமே'' என்றேன். அப்பா என்னையே கூர்ந்து பார்த்தார். முகத்தில் கோபம் இல்லை. "சினிமாவுக்குள் இத்தனை தீவிரமா?'' என்கிற மாதிரி பார்வை இருந்தது. "சரிப்பா! இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாய்! முயற்சி செய்து பார்'' என்றார். இது போதாதா? அடுத்த வாரமே சென்னைக்கு புறப்பட்டேன். ஏற்கனவே சினிமா பத்திரிகையில் டைரக்டர்களின் முகவரியை பார்த்து குறித்து வைத்திருந்தேன்.

சென்னையில் நான் நடிக்க வாய்ப்பு கேட்க முடிவு செய்திருந்த முதல் இயக்குனர் கே.பாலசந்தர். சென்னை வாரன் ரோட்டில் இருந்த அலுவலகத்தில் கே.பாலசந்தர் சாரை போய் பார்த்தேன். அரை டிராயருடன் 11-வது வகுப்பு முடித்த பையனுக்கு எப்படி ஹீரோ வாய்ப்பு கொடுக்க மனம் வரும்? என் நடிப்பு ஆர்வத்தை தெரிந்து கொண்டவர், "படிச்சிட்டு தானே இருக்கே! முதல்ல நல்லா படி. படிப்பை முடிச்சிட்டு வந்து என்னைப்பார்'' என்றார். நான் சோர்ந்து போனேன்.

என்றாலும் அடுத்து டைரக்டர் பட்டு, கதாசிரியர் - வசனகர்த்தா பாலமுருகன் ஆகியோரை சந்தித்தேன். அவர்களும் அதே மாதிரி சொல்லிவிட்டார்கள். டைரக்டர்களை இனி பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தேன். அடுத்து என் மனக்கண் முன் தோன்றியவர் கலைஞர். பொதுக்கூட்டங்களில் அவர் பேச்சைக் கேட்டிருக்கிறேன். "பராசக்தி'' வசனம் எனக்கு தலைகீழ் பாடம். கலைஞரை சந்தித்து, வசனம் பேசிக் காட்டுவோம்.

அவர் சொன்னால் டைரக்டர்கள் கேட்கத்தானே செய்வார்கள்'' என்று என் மனசு கணக்குப்போட, கோபாலபுரம் போனேன். கலைஞர் வீட்டு முன் நான் அங்கும் இங்கும் நடைபோட்டுக் கொண்டிருப்பதை பார்த்த ஒருவர் என்னிடம் வந்தார். "யாருப்பா நீ?'' என்று கேட்டார். நான் விவரத்தை சொல்லி, "கலைஞர் மட்டும் நான் வசனம் பேசுவதை கேட்டால் நிச்சயம் என்னை நடிக்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்வார்.

அவரை பார்த்துப் போகவே வந்தேன்'' என்றேன். நான் சொன்னதை கேட்ட அந்த மனிதரோ, "நடிக்க வந்திருக்கிற ஆளைப் பாரேன்! படிக்கிற வயசில என்னடா இதெல்லாம்?'' என்று முதுகில் ஒரு போடு போட்டார் (செல்லமாகத்தான்). இப்போதும் கலைஞரிடம் உதவியாளராக இருக்கும் செயல்மணிதான் அன்று என்னை படிக்கச் சொல்லி துரத்தி விட்டவர்! யார் யாரையோ பார்த்தும் எதுவும் நடக்காத நிலையில், சினிமா பத்திரிகையில் பணிபுரிய வாய்ப்பு வந்தது. அப்போது "திரைவானம்'' என்ற சினிமா பத்திரிகையை நரசிம்மன் என்பவர் நடத்தி வந்தார்.

அப்போது புகழேணியின் உச்சியில் இருந்த எம்.ஜி.ஆர் - சிவாஜி இருவர் பெயரிலும் தனித்தனி சினிமா பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. `திரைவானம்' பொதுவாக எல்லா சினிமா நடிகர்கள் பற்றிய செய்திகளையும் தருவதாக அமைந்திருந்தது. சினிமா பத்திரிகை என்பதால் ஸ்டூடியோவுக்கு போய் நடிகர் - நடிகைகளை சந்தித்து பேட்டி எடுக்கும் வாய்ப்பு அமையும்; அதன் மூலம் நாமும் நடிகராகி விடலாம் என்று எண்ணினேன். சினிமா பத்திரிகை நிருபரை பத்திரிகையாளராக பார்த்தார்களே தவிர, `நாளைய நடிகர்' என்ற கண்ணோட்டத்தில் யாரும் பார்க்கவில்லை! இதற்கிடையே சென்னை யானைக்கவுனியில் உள்ள ஒரு லாரி கம்பெனியில் மானேஜராக சேர்ந்தேன்.

வரும் லாரிகளுக்கு தேவையான சரக்கை ஏற்றி `டிரிப்ஷிட்' போட்டு அனுப்புவது என் வேலை. ஆனால் எப்போதும் சினிமா நினைவிலேயே இருந்ததால், வேலையில் கோட்டை விட்டேன். லாரி புக்கிங் கம்பெனி உரிமையாளருக்கு வியாபாரிகள் போன் செய்தார்கள். "என்ன அண்ணாச்சி! துவரம் பருப்பு லோடு கேட்டால் அரிசி மூட்டைகள் வந்திருக்கு!'' என்றும், "புளி, மிளகாய் லோடுதானே கேட்டேன். துவரம் பருப்பு, பனைவெல்லம் வந்திருக்கு'' என்று புகாருக்கு மேல் புகார்! முதலாளி என்னை அழைத்தார். "முப்பது வருஷத்துக்கு மேல் பிசினசில் கொடிகட்டிப் பறந்த என் செல்வாக்கை ஒரே வாரத்தில் ஆட்டம் காண வைத்த புண்ணியவானே! போயிட்டு வா!'' என்று கூறி, என் சீட்டைக் கிழித்து அனுப்பி வைத்தார். அப்போது, என் உறவினர் பெரிய கருப்பத்தேவர் நாடக கம்பெனியில் நடிகராக இருந்தார்.

நாடகத்தில் இருந்துதான் எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், மனோரமா போன்றோர் சினிமாவுக்கு போனதாக சொன்னார். நாடகத்தில் நடித்தால், சினிமா வாய்ப்பு எளிதில் கிடைக்கும் என்றும் சொன்னார். இது போதாதா! அப்போது பிரபலமாக இருந்த தேவி நாடக சபாவிலும், பிறகு வைரம் நாடக சபாவிலும் சேர்ந்தேன். 1974-ல் தொடங்கி 1976 வரை நான் நடிப்பில் பட்டை தீட்டப்பட்டது இந்த சபாக்களில்தான். ராஜாதேசிங்கு நாடகம் நடந்தபோது, அதில் ஒரு போர் வீரனாக வேடம் கிடைத்தது. நாடகத்தின் அத்தனை கேரக்டர்களின் வசனங்களையும் மனதில் பதித்துக் கொண்டேன். இரண்டே வருடத்தில் நானே ராஜாதேசிங்கு கேரக்டரில் நடிக்கும் அளவுக்கு நடிப்பில் வளர்ந்தேன்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
மேலும் சினி வரலாறு