சின்னத்திரையில் லதா
சின்னத்திரையில் லதா
சினிமாவில் மறுபிரவேசம் செய்த லதாவுக்கு, சின்னத்திரை வாய்ப்பும் தேடி வந்தது. டைரக்டர் கே.சங்கர் இயக்கிய "ராமாயணம்'' தொடரில் நடித்து, சின்னத்திரையிலும் தனது நடிப்பைத் தொடங்கினார்.

சின்னத்திரை அனுபவங்கள் குறித்து லதா கூறியதாவது:-

"சினிமாவில் இரண்டாவது இன்னிங்சிலும் பிசியாகவே இருந்தேன். டைரக்டர்கள் பி.வாசு, மணிவண்ணன், கஸ்தூரிராஜா, ராம.நாராயணன் போன்றோர் படங்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருந்தேன்.

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் - சிவாஜியை பல படங்களில் இயக்கிய டைரக்டர் கே.சங்கரிடம் இருந்து எனக்கு போன் வந்தது. "ராமாயணம்'' என்ற பெயரில் ஒரு புராணத் தொடர் எடுக்க இருப்பதாகவும், அதில் ராதாரவி ராவணனாக நடிப்பதாகவும் சொன்னவர், நான் ராவணனின் மனைவி மண்டோதரியாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

'பிரபல டைரக்டர் என் மீது நம்பிக்கை வைத்து கேட்கிறார். எனவே மறுக்கக்கூடாது' என்று, அந்தத் தொடரில் நடித்தேன். 1997-ல் இந்த தொடர் சன் டிவியில் ஒளிபரப்பானது.

தொடர்ந்து பாலாஜி டெலிபிலிம்சுக்காக "பவித்ர பந்தம்'' என்ற தெலுங்கு சீரியலிலும் நடிக்கலானேன்.

"கிழக்கே போகும் ரெயில்'' படத்தில் நடிகை ராதிகா அறிமுகமாகியிருந்தார். அடுத்து "அன்னப்பறவை'' என்ற படத்தில் நானும் ராதிகாவும் நடித்தோம். அந்தப் படத்தில் ராதிகாவின் இளம் வயது அம்மா நான். இந்தப் படத்தில் நடிக்கும்போதே, ராதிகா எனக்கு நல்ல தோழியானார். அதோடு நடிகை ஸ்ரீபிரியா இவருக்கு நெருக்கமான தோழி. என் தம்பி ராஜ்குமார் ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொண்டபிறகு, ராதிகா இன்னும் எனக்கு நெருக்கமானார்.

இந்த நட்பின் அடிப்படையில், ராதிகா சின்னத்திரைக்கு வந்த நேரத்தில் "இதி கத காது'' என்ற மெகா தொடரில் என்னை நடிக்கும்படி கேட்டார். உயிர்த் தோழிகளாக இருக்கும் இருவர் காலச் சூழலில் ஜென்ம எதிரிகள் போல் மோதிக்கொள்ளும் கதை. தெலுங்கில் இந்த "மெகா'' சீரியலுக்கு மகா வரவேற்பு.

ராதிகாவுக்கு தமிழில் திருப்புமுனையாக அமைந்தது 'சித்தி' தொடர். இந்த தொடரில் 250 எபிசோடு வரை நான் கிடையாது. கதைப்படி ஒரு பெற்றோர் 250 எபிசோடு தாண்டி அறிமுகமாகிறார்கள். அதில் 'அம்மா' கேரக்டரில் ஏற்கனவே ரசிகர்களிடம் பிரபலமான ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர் சி.ஜே.பாஸ்கர் அபிப்ராயப்பட்டிருக்கிறார். இதை என்னிடம் சொன்ன ராதிகா, "நீங்களே நடித்தால் சிறப்பாக இருக்கும்'' என்றார். ஒப்புக்கொண்டு நடித்தேன்.

என் போர்ஷன் அதிகபட்சம் 30 எபிசோடு வரை வந்திருக்கும். எனக்கு ரொம்ப நல்ல பெயரை வாங்கிக்கொடுத்த கேரக்டராக அது அமைந்தது. தொடர்ந்து பாலாஜி பிலிம்சுக்கு நாலைந்து தொடர்கள் நடித்தேன். இந்த நேரத்தில் ஏவி.எம்.மில் இருந்து "ஈ நாட்டு ராமாயணம் இல்லாலு'' என்ற தெலுங்கு தொடரில் நடிக்க கேட்டார்கள். அது ஒளிபரப்பாகி மிகப் பெரிய "ஹிட்.''

தொடர்ந்து ஹரிராஜனின் தொடர், பாலாஜி டெலிபிலிம்சின் "கேளுங்க கேளுங்க மாமியாரே'' என்று தொடர்ந்தேன். இதில் 'கேளுங்க கேளுங்க மாமியாரே' தொடர், முற்றுப்பெறாமல் பாதியிலேயே நின்று போனது வருத்தம் தந்தது.

ராதிகாவின் "செல்வி'' தொடரில்தான் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனை. நான் தெலுங்கில் பிசியாக இருந்த நேரத்தில் ஒரு நாள் ராதிகாவின் அம்மா எங்கள் வீட்டுக்கு வந்தார். 'செல்வி' என்ற பெயரில் புதிய தொடர் தயாரிப்பதாக சொன்னவர், "இலங்கையில்தான் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இலங்கையில் 'ஓஹோ'வென வாழ்ந்த ஒரு குடும்பம், அங்கே சொத்துக்களை இழந்து தமிழ்நாட்டில் தஞ்சமாகிற கதை. கோடீசுவரப் பெண், நடுத்தர வாழ்க்கைக்கு பழகி, அனுதினமும் பொருளாதாரம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய கேரக்டர் இருக்கிறது. நீ செய்தால் சரியாக இருக்கும் என்பது ராதிகாவின் எதிர்பார்ப்பு'' என்றார்.

இந்த கேரக்டரில் நடிக்க நடிகை ராதிகாவும், டைரக்டர் சுந்தர் கே.விஜயனும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்கள். இந்தத் தொடரில் நான் பேசிய வசனங்கள், "என்ன புள்ள!'' "உன்னைப் பார்த்தா எனக்கு படபடங்குது'', "ரொம்ப டூ மச்'' போன்றவை ரசிகர்களிடையே இப்போதும் பிரபலம்.

இலங்கையில் பங்களாவில் வாழ்ந்து பழக்கப்பட்ட பெண், சென்னையில் புறாக்கூண்டு போன்ற வீட்டில் வாழும்போது என் கேரக்டர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், ரசிகர்களை பாதித்திருக்கிறது. இதற்கு உதாரணமான விஷயமும் நடந்தது.

தி.நகரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு போயிருந்தேன். என்னைப் பார்த்ததும் ஒரு பூக்காரப் பெண்மணி ஓடி வந்தாள். "அம்மா அம்மா! பூ வாங்கிக்கம்மா'' என்று நாலைந்து முழம் பூவை என் கையில் திணித்தாள். "காசு எவ்வளவு அம்மா?'' என்று நான் கேட்டு பணம் கொடுக்க முயன்றபோது, அந்தப் பெண் பணத்தை வாங்க மறுத்து விட்டாள்.

அதோடு, "போம்மா! உன் கிட்ட காசு வாங்கினா தப்பும்மா! தலைவரோட (எம்.ஜி.ஆர்) ஜோடியாக எல்லாம் நடிச்ச நீ, இப்ப எவ்வளவு கஷ்டப்படறேன்னுதான் 'செல்வி' தொடரில் பார்த்தேனே!'' என்று கூறினாள்! அப்போதுதான் செல்வியில் என் கேரக்டர் எந்த அளவுக்கு மக்களிடம் ஊடுருவியிருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

இப்போது கலைஞர் 'டிவி'யில் ஒளிபரப்பாகி வரும் "மஞ்சள் மகிமை'' தொடரிலும் எனக்கு வித்தியாசமான கேரக்டர்.''

இவ்வாறு லதா கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif