AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif
'ஏவி.எம்'மின் 'ராஜா சின்ன ரோஜா' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்!- 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!
'ஏவி.எம்'மின் 'ராஜா சின்ன ரோஜா' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்!- 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!
இந்தியாவிலேயே முதன் முறையாக, யானை, முயல், குரங்கு முதலான கார்ட்டூன் படங்களுடன் ('அனிமேஷன்') ரஜினிகாந்த் நடித்தார்.

'ஏவி.எம்' தயாரித்த 'ராஜா சின்ன ரோஜா' என்ற படத்துக்காக, மிகுந்த பொருட்செலவில் இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

இந்தப்படம் 1989-ல் தயாரிக்கப்பட்டதாகும். கதை-வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுதினார். எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.

பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுத, சந்திரபோஸ் இசை அமைத்தார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கவுதமி நடித்தார். மற்றும் ராகவி, ஷாலினி, கோவை சரளா, எஸ்.எஸ்.சந்திரன், சின்னிஜெயந்த் ஆகியோர் நடித்தனர்.

இந்தப் படத்தில் ரஜினி, கவுதமி மற்றும் 5 குழந்தைகள் இடம்பெறும் பாடல் காட்சி ஒன்று வருகிறது. அந்த பாடல் காட்சியில், இந்த 7 பேருடன் யானை, முயல், குரங்கு முதலான மிருகங்கள் (கார்ட்டூன்களாக) ஆடிப்பாடுவது போல் படமாக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு முன் கார்ட்டூன் சினிமா படங்கள் உருவாகியிருந்தபோதிலும், மனிதர்களுடன் கார்ட்டூன்கள் சேர்ந்து நடிப்பது இந்தியாவிலேயே இதுவே முதல் தடவை.

இப்படி கார்ட்டூன் காட்சிகள் அமைப்பதில், மும்பையைச் சேர்ந்த ராம்மோகன் பெரிய நிபுணர். அவர் ரொம்ப `பிசி'யாக இருந்த காலக்கட்டம் அது.

எனவே, பட அதிபர் ஏவி.எம்.சரவணன், முத்துராமனை அழைத்து, 'படத்துக்கு இந்த அனிமேஷன் காட்சி முக்கியம். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அதை சிறப்பாக எடுக்க வேண்டும். `அனிமேஷன்' நிபுணர் ராம்மோகன் ரொம்ப பிசியாக இருப்பதாக அறிந்தேன். நீங்கள் உடனடியாக மும்பை சென்று, அவருடைய சம்மதத்தைப் பெற்று வாருங்கள்' என்றார்.

எனவே, படத்துக்கு பூஜை போடப்பட்ட அன்றே விமானம் மூலமாக முத்துராமன் மும்பை சென்றார். ராம்மோகனை சந்தித்து, விஷயத்தைச் சொன்னார்.

'இந்த மாதிரியான `அனிமேஷன்' பாடல் காட்சி எடுக்க, நான் 80 ஆயிரம் படங்களை வரையவேண்டும். அதற்கு ரொம்ப அவகாசம் வேண்டும். இப்போது எனக்குள்ள வேலையில், இந்த பொறுப்பை ஏற்பது இயலாத காரியம்' என்று ராம்மோகன் கூறினார்.

ஆனால், முத்துராமன் விடவில்லை. 'ஏவி.எம். எதையும் திட்டமிட்டு படமாக்கும் நிறுவனம். இந்த பாடல் காட்சியை முதலாவதாக படமாக்கி, உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். உடனடியாக நீங்கள் படம் வரைய ஆரம்பித்துவிடலாம். அதன்பின் 6 மாதம் கழித்துத்தான் படம் ரிலீஸ் ஆகும். உங்கள் வேலையை செய்து முடிக்க, போதுமான அவகாசம் கிடைக்கும்' என்றார்.

அதன் பேரில், கார்ட்டூன்கள் வரைய ராம்மோகன் சம்மதித்தார். 'இந்தக் காட்சியை படமாக்கியது எப்படி?' என்று முத்துராமனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

'இந்த பாடல் காட்சியில் ரஜினி, கவுதமி ஆகியோருடன் 5 குழந்தைகள் பங்கு கொண்டார்கள்.

அவர்களுடன் யானை, முயல், குரங்கு முதலான மிருகங்கள் ஓடியாடுவது வெறும் கற்பனைதான். அக்காட்சியில் யானை எங்கிருந்து வரும், முயல் எப்படி ஓடி வரும் என்பதையெல்லாம் உதவியாளர்கள் விளக்கி, நடித்துக் காட்டினார்கள்.

அந்த மிருகங்கள் அந்தந்த இடங்களில் இருப்பதாக ரஜினியும், மற்றவர்களும் கற்பனை செய்துகொண்டு நடித்தார்கள்.

இதை நாங்கள் படமாக்கி மும்பை அனுப்பினோம். அதற்கு ஏற்றபடி, ராம்மோகன் கார்ட்டூன்கள் வரைந்தார். அவற்றையெல்லாம் அந்தந்த இடத்தில் பொருத்தமாக இணைத்து பாடல் காட்சியை உருவாக்கினோம்.

சிரமமும், பணச்செலவும் அதிகமாக இருந்தபோதிலும், அந்தக் காட்சி அழகாக அமைந்தது. குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்தது.

`குழந்தைகளை பெற்றோர்கள் பொறுப்போடு வளர்க்க வேண்டும். வேலைக்காரர்களிடம் விட்டுவிடக்கூடாது' என்ற கருத்தை இந்தப்படம் வலியுறுத்தியது. இதற்கு அந்தப் பாடல் காட்சி உதவியது.

இந்தக் காட்சியின் மூலம், தமிழ்நாட்டுக் குழந்தைகளின் மனதை ரஜினி வெகுவாகக் கவர்ந்தார்.

எங்கு போனாலும், 'ரஜினி அங்கிள், ரஜினி அங்கிள்' என்று குழந்தைகள் கூடிவிடுவார்கள்.

ஒருநாள் மூணாறில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ரஜினியும், படப்பிடிப்புக்குழுவினரும் திரும்பிக் கொண்டிருந்தோம்.

ஒரு இடத்தில் ரோட்டில் சுமார் நூறு குழந்தைகள் கூடி நின்றார்கள். அனைவரும் பள்ளிக்கூட சீருடை அணிந்திருந்தார்கள்.

`ரஜினி அங்கிள் இந்த வழியாக வருவதாகக் கேள்விப்பட்டோம். அவரைப் பார்த்துவிட்டுப் போக, பள்ளிக்கூடத்திலிருந்து நேராக இங்கே வந்திருக்கிறோம்' என்றார்கள்.

அவர்களுடன் ரஜினி அன்புடன் பழகினார். ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். 'நன்றாகப் படிக்க வேண்டும்' என்று முத்தம் கொடுத்து வாழ்த்தினார்.'

இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் கூறினார்.

20-7-1989 அன்று வெளிவந்த 'ராஜா சின்ன ரோஜா' 7 தியேட்டர்களில் நூறு நாட்கள் ஓடியது. அதன்பின் பகல்காட்சியாக தொடர்ந்து ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.

இந்தப்படம், தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, அங்கும் வெற்றிகரமாக ஓடியது.

கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரித்த படம் 'சிவா.' இதில் ரஜினிகாந்த், சோபனா நடித்தனர்.

வசனத்தை கண்ணன் எழுத, அமீர்ஜான் இயக்கினார். இசை: இளையராஜா.

5-5-1989-ல் வெளிவந்த இப்படம் 75 நாள் ஓடியது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif