MudaliyarMatrimony_300x100px.gif
காதலிக்க நேரமில்லை நகைச்சுவை வேடத்தில் ஜொலித்தார் சச்சு
காதலிக்க நேரமில்லை நகைச்சுவை வேடத்தில் ஜொலித்தார் சச்சு
காதலிக்க நேரமில்லை படத்தில் நகைச்சுவை வேடம் ஏற்று நடித்த சச்சு, பெரும் புகழ் பெற்றார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். வீரத்திருமகன் படத்தில் கதாநாயகியாக நடித்த சச்சு, "அன்னை'', "அன்னை இல்லம்'' முதலான படங்களில் இளம் கதாநாயகியாக நடித்தார்.

"அன்னை இல்லம்'' படத்தில் இவர் முத்துராமனுக்கு ஜோடி. 1964-ம் ஆண்டு "சித்ராலயா'' தயாரிப்பில் "காதலிக்க நேரமில்லை'' படம் வெளியானது. படத்தை ஸ்ரீதர் டைரக்ட் செய்தார். இந்த படத்தில் நாகேசுக்கு ஜோடியாக, நகைச்சுவை வேடத்தில் சச்சு நடித்தார். படத்தில் பாலையாவின் மகன் நாகேஷ். சினிமா இயக்குனர் கனவை சுமந்து திரியும் அவர், பெரிய சினிமா ஸ்டாராக்குவதாக சொல்லி சச்சுவை மயக்குவார். நாகேஷ் - சச்சு நகைச்சுவை நடிப்பு பெரும் வெற்றி பெற்றது.

கதாநாயகியாக இருந்து நகைச்சுவை நடிகையானது பற்றி சச்சு கூறியதாவது:-

"வாணிஸ்ரீ போன்ற சிலர், காமெடி வேடத்தில் நடித்து, பிறகு கதாநாயகியாக மாறினார்கள். நான் கதாநாயகியாக இருந்து நகைச்சுவை வேடத்திற்கு வந்தேன். அந்தக் காலகட்டத்தில், பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி போன்றோர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு ஏற்றபடி, கதைகள் அமைக்கப்பட்டன.

"காதலிக்க நேரமில்லை'' படத்தில், நகைச்சுவை வேடத்தில் நடிக்க என்னை அழைத்தபோது, முதலில் முடியாது'' என்றுதான் கூறினேன். "இது நகைச்சுவைப்படம். இதில், காமெடி நடிகை என்று தனியாக இல்லை. 3 ஜோடிகள் வருகிறார்கள். அதில் ஒரு கேரக்டரில் நீ நடித்தால், மிகவும் புகழ் பெறலாம்'' என்று ஸ்ரீதர் கூறினார். எனவே, இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு நடித்தேன். என் நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.''

இவ்வாறு சச்சு கூறினார்.

தொடர்ந்து,ஊட்டி வரை உறவு, சிவந்த மண், உரிமைக்குரல், பொம்மலாட்டம், "மோட்டார் சுந்தரம் பிள்ளை, கலாட்டா கல்யாணம்"பூவா தலையா'' உள்பட பல படங்களில் சச்சு நடித்தார். அதில் பூவா தலையா படத்தில் கேரக்டர் ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். "மாட்டுக்கார வேலன்'' படத்தில், பெண் "சி.ஐ.டி''யாக நடித்தார்.

படத்தின் இறுதிக்கட்டத்தில், எம்.ஜி.ஆரை வில்லன் கோஷ்டியினர் தாக்கப்போகும்போது, சச்சு துப்பாக்கியால் சுட்டு, எம்.ஜி.ஆரைக் காப்பாற்றுவார். இதை பார்த்த செஞ்சி பகுதி நரிக்குறவர்கள், நேராக சச்சு வீட்டுக்கு சென்று, எங்கள் அண்ணனை (எம்.ஜி.ஆரை) காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நன்றி என்று கூறி, பல பரிசுகளை கொடுத்துச் சென்றார்கள்!

1970-ம் ஆண்டு, "நீரோட்டம்'' என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து தேவியர் இருவர், மெழுகு பொம்மைகள், தோப்பில் தென்னை மரம், சக்கரம் சுழல்கிறது, முதியோர் இல்லம் உள்பட பல மேடை நாடகங்களில் நடித்தார்.

தினேஷ் - கணேஷ், மேல்மாடி காலி, காஸ்ட்லி மாப்பிள்ளை, "மாண்புமிகு மாமியார், "இப்படிக்கு தென்றல் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். இளைய தலைமுறையினருடன்டாடா பிர்லா, வாய்மையே வெல்லும், பெரிய அண்ணா, உனக்காக எல்லாம் உனக்காக என தொடர்ந்து நடித்து வருகிறார். 1959-ம் ஆண்டு நேரு ஆட்சி காலத்தில், மத்திய அரசு எடுத்த குழந்தைகளுக்கான குறும் படத்தில் நடித்து உள்ளார்.

தமிழக அரசின் "கலைமாமணி'' விருது, என்.எஸ்.கே. விருது, எம்.ஜி.ஆர். விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். இதுகுறித்து சச்சு கூறியதாவது:-

"என்னை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. எனக்கு நடிக்கத் தெரியவில்லை என்று கூறினால் கூட பரவாயில்லை. நகைச்சுவை வேடத்தில் நடிப்பவர்கள் பிற கேரக்டர்களில் நடித்தால் ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள் என்று பலர் கூறியதுதான் எனக்கு வருத்தத்தை அளித்தது. எல்லா திறமைகளும் இருந்தும், அதை சரியாக பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

இவ்வளவுக்கும் நான் ஒரு தமிழ்ப்பெண். "பூவா தலையா'' படத்தில் நல்ல கேரக்டரில் நடித்தேன். அதனால்தான் அதன் தெலுங்கு, மலையாள படங்களிலும் நானே நடித்தேன். இயக்குனர் திறமையானவர்களாக இருந்தால், எப்படிப்பட்ட நடிக-நடிகைகளும் நன்கு நடிப்பார்கள். நான் கதாநாயகியாக மட்டும் நடித்து இருந்தால் 3 ஆண்டு காலம்தான் இந்த துறையில் இருந்திருக்க முடியும். நகைச்சுவைக்கு மாறியதால் இன்றுவரை, திரை உலகில் என்னால் இருக்க முடிகிறது. அந்தக் காலத்தில், நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் அதிகம். நான் நேரடியாக சினிமா என்ற ஸ்கூலுக்குள் நுழைந்தேன்.

தமிழில் நல்ல கேரக்டர்களில் நடிக்க ஆசை இருந்ததால், இந்திப்படத்தில் நடிக்க வந்த வாய்ப்புகளை வேண்டாம் என்று ஒதுக்கினேன். 55 ஆண்டுகளாக நான் சினிமாத்துறையில் இருக்க, ரசிகர்கள்தான் காரணம். குடும்பப் பொறுப்பு காரணமாக நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. எங்களுக்கு அடிப்படை வசதி இருந்தது. ஆனாலும், குடும்பத்துக்கு என் வருவாய் தேவைப்பட்டது. என் சகோதர - சகோதரிகள் என்னுடன் இணக்கமாக இருக்கிறார்கள்.

இதுபோல் வேறு குடும்பத்தில் காண்பது அரிது. நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். `திருமணம் செய்து கொள்ள முடியவில்லையே' என்ற வருத்தம் முன்பு இருந்தது. ஆனால் இப்போது அந்த வருத்தம் இல்லை. பொதுமக்கள் என்னை குமாரி சச்சு'' என்று அழைப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு சச்சு கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif