மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி- ஸ்ரீதேவி போட்டி போட்டு நடித்த 'ஜானி'
'முள்ளும் மலரும்' படத்துக்குப் பிறகு மகேந்திரன் டைரக்ஷனில் ரஜினிகாந்த் நடித்த படம் 'ஜானி.'இதில் அவருக்கு இரட்டை வேடம். அவரும், ஸ்ரீதேவியும் சிறப்பாக நடித்தனர்.

ரஜினிகாந்த் பல படங்களில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் என்றாலும், 'ஜானி'யில் மாறுபட்ட இரட்டை வேடம். ஒருவர் கதாநாயகன். மற்றொருவர் மகா கஞ்சனான முடிவெட்டும் தொழிலாளி.

இந்தப் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்தார். அதில் அவர் பாடகியாக வருவார். அதனால் பல இனிய பாடல்கள் இடம் பெற்றிருந்தன. (இசை: இளையராஜா.)

ரஜினியும், ஸ்ரீதேவியும் போட்டி போட்டு சிறப்பாக நடித்தனர். 1980 ஆகஸ்டு 15-ந்தேதி வெளிவந்த 'ஜானி' வெற்றிப்படமாக அமைந்தது. இதன் பிறகு மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் கை கொடுக்கும் கை. பிரபல டைரக்டர் புட்டண்ணா கன்னடத்தில் 'கதா சங்கமம்' என்ற படத்தைத் தயாரித்தார். ஒரே படத்தில் மூன்று கதைகள் இடம் பெற்றன.

மூன்றாவது கதை 'முனித்தாய்' என்பதாகும். கதாநாயகி பார்வை இல்லாதவள். கதாநாயகன் அவளை விரும்பி மணக்கிறான். பார்வை இல்லாத பெண்ணை, வில்லன் கற்பழித்து விடுகிறான்... இப்படிப்போகிறது கதை.

இந்தக் கதையை படமாக்க 'ஸ்ரீராகவேந்திராஸ்' பட நிறுவனம் முன்வந்தது. கன்னடப் படத்தைப் பார்த்த மகேந்திரன், 'இந்தக் கதையில் இரண்டு முக்கியமான மாறுதல்களை செய்ய வேண்டும். பார்வை இல்லாத கதாநாயகி குளிப்பதை ஒருவன் ஒளிந்திருந்து பார்க்கிறான். அதை நீக்கிவிட வேண்டும். கதாநாயகி கற்பழிக்கப்படுகிறாள் என்பதையும் மாற்ற வேண்டும். ரஜினிகாந்த் இப்போது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். படத்தில் அவர் மனைவியாக நடிப்பவர் கற்பழிக்கப்படுவதை ரசிகர்கள் விரும்பமாட்டார்கள். இந்த மாறுதல்களை செய்ய நீங்கள் ஒப்புக்கொண்டால், நான் டைரக்ட் செய்கிறேன்' என்றார்.

இதற்கு ரஜினிகாந்தும், பட அதிபரும் ஒப்புக்கொண்டனர். ஆனால் கடைசி நேரத்தில், 'ஒரிஜினல் கதைப்படியே, கதாநாயகி கற்பழிக்கப்படுவதுபோல் காட்சியை எடுக்கவேண்டும்' என்று பட அதிபர் வற்புறுத்தினார். ரஜினிகாந்தின் விருப்பமும் இதுதான் என்று ஒரு வெடிகுண்டை தூக்கிப்போட்டார்.

மகேந்திரன் வேறு வழியின்றி, பட அதிபர் சொன்னபடி படத்தை முடித்துக்கொடுக்க சம்மதித்தார். 'இந்தப்படம் பெரிய தோல்வி அடையும். அந்த தோல்வியில் இருந்து நான் மீள்வதற்கு ரொம்ப காலம் ஆகும்' என்று பட அதிபரிடம் மனம் நொந்து கூறினார். பின்னர் ரஜினிகாந்திடம் மகேந்திரன் தனியாகப் பேசிக்கொண்டிருந்தபோது, 'கன்னடப்படத்தில் உள்ளபடியே முடிவை வைக்கும்படி பட அதிபரிடம் கூறினீர்களா?' என்று கேட்டார்.

'நான் அப்படிச் சொல்லவில்லையே!' என்றார், ரஜினிகாந்த். பட அதிபர், தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள, ரஜினிகாந்த் பெயரைப் பயன்படுத்தி இருக்கிறார் என்பதை மகேந்திரன் தெரிந்து கொண்டார். 'கை கொடுக்கும் கை' 1984 ஜுன் 14-ந்தேதி வெளிவந்தது. மகேந்திரன் சொன்னதுபோலவே அப்படம் தோல்வி அடைந்தது.

தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் நிதி உதவியில் 'சாசனம்' என்ற படம், மகேந்திரனின் கதை, வசனம், டைரக்ஷனில் உருவாகியிருக்கிறது. செட்டிநாட்டு கலாசாரத்தை பிரதிபலிக்கும் படம் இது. அரவிந்த்சாமி, கவுதமி, ரஞ்சிதா, `தலைவாசல்' விஜய் ஆகியோர் நடித்து உள்ளனர். 1997-ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு 1998-ம் ஆண்டு இறுதியில் முடிவடைந்தது.

ஆனால் இன்னும் படம் வெளியாகவில்லை. இதுபற்றி மகேந்திரன் கூறியதாவது:-

'நல்ல சினிமாவிற்கு என்னை அர்ப்பணிப்பதே என்றைக்கும் எனது சாசனமாக இருக்கும். இந்த வகையில், என்னை நான் அர்ப்பணித்துக் கொண்டு உருவாக்கியுள்ள படம்தான் 'சாசனம்.'

தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் சில விதிமுறைகளால் இப்படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது. எனினும் விரைவில் இப்படத்தை வெளியிட முயற்சி நடக்கிறது.

இந்தப் படத்திற்கு தேசிய விருது நிச்சயம் கிடைக்கும். இதில் நடித்திருக்கும் அரவிந்த்சாமிக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ரஞ்சிதாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் நிச்சயம் கிடைக்கும்.'

இவ்வாறு மகேந்திரன் கூறினார்.

'தங்கப்பதக்கம்' திரைப்படத்தின் தொடர்ச்சியாக மகேந்திரன் மற்றொரு கதையை எழுதினார். அதுதான் `குட்பை, மிஸ்டர் சவுத்ரி.'

ஓய்வு பெற்ற பின்பு எஸ்.பி.சவுத்ரி தனது பேரனை எப்படி ஆளாக்குகிறார், தன்னை விட மிகச்சிறந்த போலீஸ் அதிகாரியாக அவனை எப்படி உருவாக்குகிறார் என்பதுதான் கதை. இறுதியில் பேரன் அடையும் மகத்தான பெருமையை பார்த்த நிலையில் எஸ்.பி.சவுத்ரி எப்படி கம்பீரமாக உயிர் துறக்கிறார் என்பதுதான் உச்சகட்டம்.

இந்தக் கதையை திரைப்படமாக சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. பின்னர் கைவிடப்பட்டது.

`1996' என்ற குறும்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் மகேந்திரன். 30 நிமிடங்கள் ஓடும் இந்த படம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு செல்கிறது.

தனது திரைப்பட அனுபவம் பற்றி மகேந்திரன் கூறியதாவது:-

நான் திட்டமிட்டு திரைப்படத் துறைக்கு வரவில்லை என்றாலும்கூட எனக்கு கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்கிற கனவு. அந்தக் கனவிலிருந்துதான் என் படங்கள் உருவாயின.

இன்றைக்கு சினிமாவைத் தேடி வருகிற இளைஞர்களின் கனவு, அப்படிப்பட்ட கனவா என்கிற கேள்வியை எனக்குள் எழுப்பிப் பார்த்துக் கொள்கிறேன்.'

மேற்கண்டவாறு கூறிய மகேந்திரன், திரை உலகில் தன்னைக் கவர்ந்த கலைஞர்கள் சிலர் பற்றி கூறியதாவது:-

சிவாஜிகணேசன்: உலக அதிசயங்களில் ஒன்றல்ல அவர்; எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட உலக அற்புதம். தமிழ் சினிமா தன் நெஞ்சை நிமிர்த்திக்கொள்ள அவதரித்த அற்புதக் கலைஞர். அந்த நடிப்புலக மாமேதை, நான் எழுதிய வசனத்தை பேசினார். என் போன்றவனுக்குத்தான் எத்தனை பாக்கியம், பெருமை!

சத்யஜித்ரே: தனது உன்னதமான திரைப்படங்கள் மூலம், உலக சினிமா வரலாற்றில் இந்தியாவுக்கு மிக உயர்ந்த அரியாசனத்தைத் தேடித்தந்தவர்.

டைரக்டர் ஸ்ரீதர்: இன்றைய இயக்குனர்கள் அனைவருக்கும் மிகச்சிறந்த முன்னோடி. ஏராளமான புதுமைகளை தனது ஒவ்வொரு படத்திலும் அரங்கேற்றியவர்.

கே.பாலசந்தர்: தமிழ் சினிமாவில் இவர் சாதித்த சாதனைகள் அத்தனையும், அனைவருக்கும் பாடப்புத்தக்கள். ராசியான மோதிரக் கை கொண்ட இவரின் கண்பட்ட அத்தனை கலைஞர்களும் இன்று தமிழ் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாரதிராஜா: பிற்காலத் தமிழ் சினிமாவில் புதிய களம் கண்டு மாபெரும் வெற்றி வாகை சூடிய ராஜா. அவர் தன் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய நதியை ஓடவைத்திட அந்த நதியில்தான் இன்று வரை எத்தனையோ டைரக்டர்கள் படகோட்டி வருகிறார்கள். தமிழ் சினிமாவை, மண் வாசனையோடு தலைநிமிர வைத்தவர் பாரதிராஜாதான்.'

மேற்கண்டவாறு மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மகேந்திரனின் மனைவி பெயர் ஜாஸ்மின். இவர்களது மகன் ஜான். விஜய் நடித்த 'சச்சின்' படத்தை இயக்கியவர் இவர்தான். டிம்பிள், அனுரீட்டா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

'மெட்டி', 'நண்டு', 'எனக்கு நானே எழுதிக்கொண்டது' முதலான புத்தகங்களை மகேந்திரன் எழுதி உள்ளார். 'உதிரிப்பூக்கள்' திரைக்கதை- வசனம், புத்தகமாக வெளிவந்துள்ளது.