ராமராஜன் - நளினி காதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது
1987-ம் ஆண்டில் புகழின் உச்சியில் இருந்தவர் நடிகை நளினி. அப்போது ராமராஜன் உதவி இயக்குனராக இருந்தார். அவர் பணியாற்றிய படங்களில் நளினி நடித்து வந்தார். அப்போது நடிகர் ராமராஜனுக்கும், நளினிக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

திரைப்பட உலகில் நடிகையின் காதலை, நடிகையின் பெற்றோர் எப்பொழுதுமே ஏற்றுக்கொள்வது இல்லை. அதனால் நளினியின் காதலுக்கு அவரது பெற்றோர் தடை போட்டனர். ராமராஜனை நளினி சந்திக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவரை மலையாளப் படங்களில் நடிக்க வைத்தனர். இதற்கிடையே ராமராஜன் இயக்குனராக உயர்ந்து, கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி விட்டார்.

இந்த நிலையில் எதிர்பாராத வகையில் ராமராஜனும், நளினியும் சந்தித்தனர். காதல் தீவிரமடைந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ராமராஜன்- நளினி திருமணம் 1987-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந்தேதி நடந்தது. இந்தக் காதல் திருமணம் பற்றி, ராமராஜன் கூறியதாவது:-

'சீறும் சிங்கங்கள், மனைவி சொல்லே மந்திரம் ஆகிய படங்களில் நளினி நடித்தார். இந்தப் படங்களுக்கு நான் உதவி இயக்குனராக இருந்தேன். அப்போது நளினிக்கும், எனக்கும் காதல் ஏற்பட்டது. இந்த காதல் விஷயம் நளினியின் வீட்டிற்கு தெரியவந்தது. நளினியின் பெற்றோர் இதை விரும்பவில்லை. நளினியை மலையாள படங்களில் நடிக்க வைத்தார்கள். ஆயினும், எங்கள் காதல் தொடர்ந்தது. நான் இயக்கிய 'மண்ணுக்கு ஏத்த பொண்ணு' படத்தில் கவுரவ வேடத்தில் நளினி நடித்தார். மலையாள திரைப்படத்துறைக்கு நளினி போன நேரத்தில், இங்கு 'நம்ம ஊரு நல்ல ஊரு' படம் மூலம் நான் கதாநாயகனாகி விட்டேன்.

'எங்க ஊரு பாட்டுக்காரன்' படப்பிடிப்பு முடிந்தபோது நளினியை சந்திக்க நேர்ந்தது. அப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். நளினி வீட்டில் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு இருந்தது. 1987-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந்தேதி திருமணம் நடந்தது. மிகவும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தினோம்.' இவ்வாறு ராமராஜன் கூறினார்.

ராமராஜன் - நளினி இல்லற வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. நளினிக்கு 1988-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந்தேதி ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. மகன் பெயர் அருண். மகள் பெயர் அருணா. ராமராஜன் - நளினி வாழ்க்கையில் விதி விளையாடியது. இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு, பிரிந்து விடுவது என்று முடிவு எடுத்தனர். கோர்ட்டு மூலம், கடந்த 2001-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந்தேதி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

குழந்தைகள் நளினியிடம் வளர்ந்தன. இருவருக்கும் இப்போது வயது 17. 'பிளஸ்-2' படிக்கிறார்கள். நளினியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது ஏன் என்பது பற்றி ராமராஜன் கூறியதாவது:-

'திருமணத்திற்கு பிறகு எந்த நிலையிலும் மேக்கப் போடக்கூடாது என்று நளினியிடம், திருமணத்திற்கு முன்பே கூறியிருந்தேன். `நடிக்கமாட்டேன்' என்று என்னிடம் அப்போது நளினி உறுதி அளித்தார். 'கஷ்டப்படும் சூழ்நிலை வந்தால் ரிக்ஷா இழுத்தாவது உன்னையும், குழந்தைகளையும் காப்பாற்றுவேன்' என்றும் கூறியிருந்தேன். ஆனால் திடீரென்று 'டெலிவிஷனில் நடிக்கப் போகிறேன்' என்று நளினி என்னிடம் கூறினார். அது எனக்குப் பிடிக்கவில்லை.

ஒரு விஷயத்தை எடுத்தால், என் கொள்கையில் நான் உறுதியோடு இருப்பேன். இதனால் 1995-ல் பிரச்சினை ஏற்பட்டு, 10 மாதம் பிரிந்து வாழ்ந்தோம். அதன் பிறகு 1996-ம் ஆண்டு, தேர்தல் பிரசாரத்தின்போது மீண்டும் நளினியும், நானும் சேர்ந்தோம். அப்போது 'நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அதை அப்படியே கேட்கிறேன்' என்று நளினி கூறியதால், மீண்டும் சேர்ந்து வாழ்ந்தோம்.   ஆனால் பிறகு, மீண்டும் நடிக்கப் போவதாக நளினி கூறினார். இதனால் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவர் கேட்கவில்லை. எனவே, வேறு வழியின்றி சுமூகமாக பிரிந்தோம்.' இவ்வாறு ராமராஜன் கூறினார்.

ராமராஜன் மது அருந்துவது போலவோ, சிகரெட் பிடிப்பது போலவோ எந்தப் படத்திலும் நடித்தது இல்லை. இதுபோன்ற காட்சிகளில் நடிப்பது இல்லை என்பதை கொள்கையாகவே வைத்திருந்தார். இரண்டு கதாநாயகர்கள் உள்ள படத்திலும் நடித்ததில்லை.