நடிகர் ராமராஜன் தேர்தலில் போட்டியிட்டு 'எம்.பி' ஆனார்
நடிகர் ராமராஜன் தேர்தலில் போட்டியிட்டு 'எம்.பி' ஆனார்
1990-ம் ஆண்டு நடிகை குஷ்புவுடன் 'பாட்டுக்கு நான் அடிமை', ராகசுதாவுடன் 'தங்கத்தின் தங்கம்', கவுதமியுடன் 'ஊரு விட்டு ஊரு வந்து', வைதேகியுடன் 'புதுப்பாட்டு' ஆகிய படங்களில் ராமராஜன் நடித்தார்.

'ஊருவிட்டு ஊருவந்து' படத்தில், ராமராஜன் 'டூப்' போடாமல் ஒரு சண்டை காட்சியில் நடித்தார். அப்போது விபத்தில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விபத்து பற்றி நடிகர் ராமராஜன் கூறியதாவது:-

'ஊருவிட்டு ஊருவந்து படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக தாய்லாந்தில் படப்பிடிப்பு நடந்தது. கிளைமாக்சில் கதாநாயகி கவுதமியை கடலில் வில்லன் கடத்தி சென்றுவிடுவார்.

படகில் செல்லும் அவர்களைப் பிடிக்க படகு முனையில் கட்டப்பட்டு, அதன் வேகத்தில் பாரசூட்டில் பறப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. 'டூப்' இல்லாமல் நான் நடித்தேன். கடலில் படகு வேகமாக சென்றது. நான் 300 அடி உயரத்தில் பாரசூட்டில் பறந்தேன். திடீரென்று படகு பழுதாகி நின்றுவிட்டதால், நான் கடலில் விழுந்தேன். அந்த இடத்தில் ஏற்கனவே அதிகம் பேர் செத்து இருக்கிறார்கள். நல்லவேளையாக, காற்றின் வேகத்தால் பாரசூட் கொஞ்சம் தள்ளி விழுந்ததால், நான் நீச்சல் அடித்து தப்பினேன்.
எனக்கு அது மறுபிறப்பு.' இவ்வாறு ராமராஜன் கூறினார்.

1991-ம் ஆண்டு ரூபினியுடன் 'நாடு அதை நாடு', சீதாவுடன் 'அண்ணன் காட்டிய வழி', ஐஸ்வர்யாவுடன் 'மில் தொழிலாளி', 'ஊரெல்லாம் உன்பாட்டு', ரூபினியுடன் 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு', 1992-ம் ஆண்டு கவுதமியுடன் 'பொண்ணுக்கேத்த புருஷன்', ராணியுடன் 'வில்லுப் பாட்டுக்காரன்' ஆகிய படங்களில் நடிகர் ராமராஜன் நடித்தார். 1995-ம் ஆண்டு ராமராஜன், தேரடி பிலிம்ஸ் என்ற படக்கம்பெனியை சொந்தமாக ஆரம்பித்தார்.

 1996-ம் ஆண்டு நடிகர் ராமராஜன் இயக்கத்தில் 'அம்மன் கோவில் வாசலிலே' என்ற படம் வெளிவந்தது. இதில் ராமராஜனுக்கு ஜோடியாக சங்கீதா நடித்தார். தொடர்ந்து தேரடி பிலிம்ஸ் தயாரிப்பில் 'நம்மஊருராஜா' படம் வெளிவந்தது. படத்தை தயாரித்து இயக்கி நடித்தார், ராமராஜன். கதாநாயகி சங்கீதா. 1997-ம் ஆண்டு நடிகர் ராமராஜன் இயக்கி நடித்த 'கோபுரதீபம்', 'விவசாயி மகன்' ஆகிய படங்களும், 1998-ம் ஆண்டு 'அண்ணன்', 'தெம்மாங்கு பாட்டுக்காரன்', 1999-ம் ஆண்டு 'பூமனமே வா' ஆகிய படங்களிலும் ராமராஜன் நடித்தார்.

2001-ம் ஆண்டு அபிதாவுடன் 'சீறிவரும் காளை', பிரதியுஷாவுடன் 'பொன்னானநேரம்' ஆகிய படங்களிலும் ராமராஜன் நடித்தார். எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்த நடிகர் ராமராஜன், அ.தி.மு.க. கட்சியில் இணைந்து, கட்சி பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். 'எம்.பி' ஆனார் 1998-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ராமராஜன் போட்டியிட்டு 'எம்.பி' ஆனார். 13 மாத காலமே இந்தப்பதவியை வகித்தார்.

காரணம் 13 மாதத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்து, பாராளுமன்றம் கலைக்கப்பட்டது ஆகும். அரசியல் ஈடுபாடு பற்றியும், தேர்தலில் போட்டியிட்டது பற்றியும் ராமராஜன் கூறியதாவது:-

'நான் எம்.ஜி.ஆரின் ரசிகன். நானும், நளினியும் காதல் திருமணம் செய்து கொண்டு, அப்போது முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை சந்தித்தோம். அவர்தான், வரவேற்பு நிகழ்ச்சி வைக்க சொன்னார். திருமண வரவேற்புக்கு அவரும் வந்தார். 1987-ல் எம்.ஜி.ஆர். மறைந்ததைத் தொடர்ந்து, நடிகர் சங்கத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் கண் கலங்கினேன். 1988-ம் ஆண்டு ஜனவரியில் அ.தி.மு.க.வில் சேர்ந்தேன். எம்.ஜி.ஆருக்குப் பிறகு அம்மாதான் என்று நினைத்து சேர்ந்தேன்.

அந்த நேரம் என்னுடைய 2 படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தன.   சினிமாவில் இருந்து கொண்டே கட்சி பிரசார பணியிலும் ஈடுபட்டேன். எனக்கு குழந்தை பிறந்தபோது நேரில் வந்து குழந்தைக்கு செயின் அணிவித்தார், இன்றைய முதல்-அமைச்சர். அதன் பிறகு 1998-ம் ஆண்டு, திருச்செந்தூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார். நானும் அந்த தொகுதியில் போட்டியிட்டு அ.தி.மு.க. சார்பில் எம்.பி.யானேன்.

நான் எம்.பி.யானதற்கு இன்றைய முதல்-அமைச்சர்தான் காரணம். தற்பொழுதும் அ.தி.மு.க.வில் எனது பணியை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறேன். அந்த பணி தொடரும்.' இவ்வாறு நடிகர் ராமராஜன் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif