'நம்ம ஊரு நல்ல ஊரு' மூலம் கதாநாயகனாக மாறினார் ராமராஜன்: ஒரே ஆண்டில் 8 படங்களில் நடித்தார்
'நம்ம ஊரு நல்ல ஊரு' மூலம் கதாநாயகனாக மாறினார் ராமராஜன்:  ஒரே ஆண்டில் 8 படங்களில் நடித்தார்
'நம்ம ஊரு நல்ல ஊரு' என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக மாறிய ராமராஜன், 1988-ம் ஆண்டு 8 படங்களில் நடித்தார். ராமராஜனின் கதை, திரைக்கதை, வசன இயக்கத்தில் 'ஹலோ யார் பேசறது' என்ற படம் வெளியானது. படத்தை பார்த்த இயக்குனர் பாரதிராஜா, ராமராஜனை பாராட்டினார். தனக்கு ஒரு படம் இயக்கித் தருமாறு கேட்டுக்கொண்டார்.

பாரதிராஜாவுக்காக 1985-ம் ஆண்டு 'மருதாணி' என்ற படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார், ராமராஜன். இதில் பாண்டியனும், ஷோபனாவும் நடித்தனர். தொடர்ந்து பி.எஸ்.வீரப்பாவுக்காக 'மறக்க மாட்டேன்', இராம நாராயணனுக்காக 'சோலைபுஷ்பங்கள்' ஆகிய படங்களுக்கும் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார், ராமராஜன்.

திரைப்பட வாய்ப்பு கிடைத்தது பற்றி ராமராஜன் கூறியதாவது:-

'திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையே எனக்கு இருந்தது இல்லை. ஒரு சினிமா படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன். `அச்சாணி' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால், டெல்லிக்கு சென்றேன். அங்கு எனது அண்ணன் கோபால்தாஸ் வீட்டில் தங்கி இருந்து வீடு கழுவியதோடு பல வேலைகள் செய்தேன். ஒருநாள், அண்ணனுடன் நான் டெல்லியை சுற்றிப்பார்க்க சென்றேன்.

அப்போது பாராளுமன்றத்தை வெளியிலிருந்து பார்த்தேன். 'உள்ளே போகமுடியுமா' என்று என் அண்ணனிடம் கேட்டேன். 'நாமெல்லாம் உள்ளே செல்லமுடியாது' என்று என் அண்ணன் சொன்னார். அதே பாராளுமன்றத்திற்குள், பிற்காலத்தில் நான் சென்றேன். பின்னர் சென்னைக்குப் புறப்பட்டு வந்தேன். 3 மாதமாக அலைந்து காரைக்குடி நாராயணனை கண்டுபிடித்தேன். அப்போது அவர் இயக்கிய 'மீனாட்சி குங்குமம்' படத்தில் என்னை நடிக்க வைத்தார். அடுத்ததாக வசனம் பேசி நடித்தால் நன்றாக இருக்குமே என்று நìனைத்தேன்.

அதை இயக்குனரிடம் கூறினேன். அதனால் நடிகை அபர்ணாவுடன் 3 மைனர்கள் நடனமாடும் காட்சியில் நானும் ஒரு மைனரானேன். அப்போது, 'குளோசப்பில் எனது முகத்தை எடுங்கள்' என்றேன். எடுக்கவில்லை. சூட்டிங் முடிந்ததும், என்னை ஊருக்கு கிளம்பும்படி கூறினார்கள்.' இவ்வாறு ராமராஜன் கூறினார். இயக்குனராக வலம் வந்த ராமராஜனுக்கு படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதை ராமராஜன் பயன்படுத்திக்கொண்டார். 1986-ம் ஆண்டு 'நம்ம ஊரு நல்ல ஊரு' என்ற படம் வெளியானது. இந்த படத்தில், ராமராஜன் கதாநாயகனாக நடித்தார். ரேகா கதாநாயகியாக நடித்தார். படத்தை வி.அழகப்பன் இயக்க, சிவராமதாஸ், ராகவன் தம்பி ஆகியோர் தயாரித்தனர். படம் வெற்றிகரமாக ஓடியது. இயக்குனராக இருந்த ராமராஜன், பொதுமக்களால் நடிகராக அங்கீகரிக்கப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடிக்க ராமராஜனுக்கு அழைப்பு வந்தது.

இயக்குனராக இருந்து நடிகரானது பற்றி ராமராஜன் கூறியதாவது:-

'திரைப்படத்தில் சிறு வேடத்திலாவது நடிக்க முடியுமாப என்று ஏக்கத்தோடு இருந்தேன். சிறு, சிறு வேடங்களில் நடித்தேன். அதன் பிறகு இயக்குனராகிவிட்டேன். இந்த சூழ்நிலையில், 'ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறாயாப என்று என்னிடம் ஜே.துரை கேட்டார். 'கதாநாயகனாகவாப நான் நடிப்பதாப' என்று ஆச்சரியமுடன் கேட்டேன். 'ஆமாம். உன்னை கதாநாயகனாக நடிக்க வைத்து படம் எடுக்க ஒரு கம்பெனி தயாராக இருக்கிறது' என்றார். பல்வேறு யோசனைக்கு பிறகு, கதையை கேட்டுவிட்டு முடிவு செய்யலாம் என்று படத்தின் கதையைக் கேட்டேன்.

கதை பிடித்து இருந்ததால், நடிக்க சம்மதித்தேன். படம் சூப்பர்ஹிட்டானது. தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்தேன்.' இவ்வாறு நடிகர் ராமராஜன் கூறினார். 1987-ம் ஆண்டு 5 படங்களில் நடித்தார். அதில் மீனாட்சி ஆர்ட்சின் 'எங்க ஊரு பாட்டுக்காரன்' வெற்றிப்படமாக அமைந்தது. ராமராஜனுடன் ரேகா, நிஷாந்தி ஆகியோர் நடித்து இருந்தனர். சங்கிலி முருகன் படத்தை தயாரித்தார். நடிகர் ராமராஜனுடன் மாதுரி நடித்த 'இவர்கள் இந்தியர்கள்', ராமராஜன் இயக்கி நடித்த 'ஒன்று எங்கள் ஜாதியே' மற்றும் 'நேரம் நல்லா இருக்கு', 'கிராமத்து மின்னல்' ஆகிய படங்கள் வெளிவந்தன.

அனைத்து படங்களும் ஓரளவு வெற்றி பெற்றன. அதனால் 1988-ம் ஆண்டு 8 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. லட்சுமண் மூவிஸ்சின் 'செண்பகமே செண்பகமே' படம் வெளியானது. ராமராஜனுடன் ரேகா நடித்து இருந்தார். கிராமத்தை மையமாகக் கொண்ட கதை. முறைப்பெண்ணை பல்வேறு இன்னல்களுக்கு இடையே திருமணம் செய்து பெற்றோருடன் இணையும் காதல் கதை.

முழுக்க முழுக்க கிராம சூழலில் வெளிவந்த படம் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியது. தொடர்ந்து ரேகாவுடன் 'ராசாவே உன்னை நமëபி', நிஷாந்தியுடன் 'ரெயிலுக்கு நேரமாச்சு', பல்லவியுடன் 'பார்த்தால் பசு', சபிதா ஆனந்துடன் 'என்னை விட்டு போகாதே', சரண்யாவுடன் 'மேளம் கொட்டு தாலிகட்டு', கவுதமியுடன் 'எங்க ஊரு காவல்காரன்', 'நம்ம ஊரு நாயகன்' ஆகிய படங்களில் ராமராஜன் நடித்தார். அனைத்தும் கிராமத்தை மையமாக கொண்ட கதைகள். இந்த படங்களை மக்கள் விரும்பிப் பார்த்தனர்.

அதனால் வெற்றிகரமாக ஓடின. தொடர்ந்து கிராம கதைகளில் நடித்தது பற்றி ராமராஜன் கூறியதாவது:-

'கிராமம் என்பது நான் பிறந்து வளர்ந்த இடம். நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் மாணவனாக நடித்தேன். ஆனால் `எங்க ஊரு பாட்டுக்காரன்' படத்தின் கதையும், பாட்டும் ஜனரஞ்சகமாக இருந்ததால், மக்களை எளிதாக சென்று சேர்ந்தது. அதனால் என்னை 'பாட்டுக்காரன் ராமராஜன்' என்றார்கள். அதன் பிறகு, தொடர்ந்து சிறிய பட்ஜெட் படங்களில் நடித்தேன். கிராம படத்தைத்தான் விரைவாக எடுத்து முடிக்க முடியும்.

தயாரிப்புக்கு அதிக செலவு இல்லாமல் கதையும், பாடலும் நிற்க வேண்டும் என்பதற்காக கிராம கதைகளிலேயே அதிகமாக நடித்தேன்.' இவ்வாறு நடிகர் ராமராஜன் கூறினார். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
மேலும் சினி வரலாறு