ராமராஜன், டைரக்டர் ஆனார்!: ஒரு காட்சியில் நடிக்க ஏங்கியவருக்கு அடித்தது அதிர்ஷ்டம்
ராமராஜன், டைரக்டர் ஆனார்!: ஒரு காட்சியில் நடிக்க ஏங்கியவருக்கு அடித்தது அதிர்ஷ்டம்
ஒரு காட்சியில் நடிக்க ஏங்கிய ராமராஜனுக்கு, அதிர்ஷ்டம் அடித்தது. உதவி இயக்குனராக இருந்தவர், ‘மண்ணுக்கு ஏத்த பொண்ணு’ படம் மூலம் டைரக்டர் ஆனார்.

நடிகர் ராமராஜன் வேலை பார்த்த தியேட்டரின் முதலாளி அம்பலக்காரர், ‘அச்சாணி’ என்ற படத்திற்கு நிதி உதவி செய்தார். எனவே, அந்த படத்தின் இயக்குனரான காரைக்குடி நாராயணன் அம்பலக்காரரை பார்க்க அடிக்கடி தியேட்டருக்கு வருவார்.

அப்போது, நடிகர் ராமராஜன் மின்னல் வேகத்தில் காரைக்குடி நாராயணனுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்வார். டிபன் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பார். இதைப் பார்த்த காரைக்குடி நாராயணன் ‘இந்த பையன் சுறுசுறுப்பாக இருக்கிறான்’ என்று பாராட்டினார்.

உடனே தியேட்டர் முதலாளி அம்பலக்காரர், ‘இவனுக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என்று கூறினார். காரைக்குடி நாராயணனும், ‘பட வாய்ப்பு கொடுக்கிறேன்’ என்று கூறிவிட்டுச் சென்றார்.

மாதங்கள் உருண்டோடின. நாராயணனின் பதிலுக்கு ராமராஜன் காத்து இருந்தார். ‘நடிக்க வா’ என்று அழைத்தால், சென்னையைப் பார்த்து ஓடிவிடலாமே என்ற கனவுடனும், எதிர்பார்ப்புடனும் இருந்தார். ஆனால் நாராயணனிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

1978-ம் ஆண்டு ராமராஜன் டெல்லிக்கு சென்றார். அங்கு இருக்கும் தனது சித்தி மகன் கோபால்ராசு என்பவரது வீட்டில் தங்கினார். அங்கு தங்கி இருந்து பல வீடுகளுக்கு சென்று வீடு எடுபிடி வேலைகளைச் செய்தார்.

டெல்லியில் ராமராஜன் தங்கி இருந்தாலும், அவரது மனமும், கனவும் சென்னையை சுற்றியே வட்டமிட்டன. எப்படியாவது சென்னைக்கு சென்று ஒரு சீனில் நடிக்கும் நடிகனாகி விடவேண்டும் என்று நினைத்தார். அதனால், 1 மாதம் டெல்லியில் இருந்து விட்டு சென்னைக்கு வந்தார்.

சென்னை அமைந்தகரையில் வசித்து வந்த பெரியம்மா மகன்கள் ராமன், லட்சுமணனுடன் ராமராஜன் தங்கி இருந்து வாய்ப்பு தேட ஆரம்பித்தார். தினமும் காலையில் எழுந்ததும் வடபழனிக்குச் சென்று ஏவி.எம், வாஹினி ஸ்டூடியோக்களுக்கு அலைவதை வழக்கமாக வைத்து இருந்தார்.

3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் காரைக்குடி நாராயணனை சந்தித்தார். அப்போது ‘மீனாட்சி குங்குமம்’ என்ற படத்தை காரைக்குடி நாராயணன் இயக்கினார். இராம.நாராயணனும், ராஜசேகரும் இந்தப் படத்தை தயாரித்தனர். அந்த படத்திற்கும் மேலூர் தியேட்டர் முதலாளி அம்பலக்காரர் நிதி உதவி செய்து இருந்தார்.

இந்த படத்தில் நடிக்க ராமராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆடுகள் சண்டை போடும் காட்சியில், அதை வேடிக்கை பார்க்கும் வேடத்தில் நடிகர் ராமராஜன் கூட்டத்தோடு கூட்டமாக நின்றார்!

‘மீனாட்சி குங்குமம்’ படத்தில் சிறு வேடத்தில் நடித்து முடித்து இருந்த நேரத்தில், மேலூர் பொதுப்பணித்துறையில் வேலைக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு ராமராஜனுக்கு வந்தது. எனவே, சூட்டிங்கை முடித்துக்கொண்டு, முகத்தில் போட்டுக்கொண்ட மேக்கப்போடு ஊருக்கு சென்றார்.

அங்கு தனது நண்பர்களிடம், திரைப்படத்தில் நடித்து விட்டு வந்தது பற்றி பெருமையாகக் கூறினார். பின்னர், பொதுப்பணித்துறை வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு சென்றார். அங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு ராமராஜன் சரியாக பதில் சொல்லவில்லை. எல்லா கேள்விகளுக்கும், ‘தெரியாது’ என்ற ஒரே பதிலையே திரும்பத் திரும்ப சொன்னார்.

காரணம், ‘அரசாங்க வேலை கிடைத்தால் நடிக்க போக முடியாது. எனவே, இந்த வேலை வேண்டாம்’ என்று ராமராஜன் நினைத்தார். மீண்டும் மேலூரில் ராஜா டூரிங் டாக்கீசில் வேலைக்குச் சேர்ந்தார்.

இந்த நிலையில் காரைக்குடி நாராயணன் அழைப்பின் பேரில் சென்னை வந்த ராமராஜன் ‘அன்பே சங்கீதா’ படத்திற்கு காசாளராக பணிபுரிந்தார். இந்தப் படத்தில் சர்வராக ராமராஜன் நடித்தார். படத்தை காரைக்குடி நாராயணன் தயாரித்து இயக்கினார்.

எம்.ஏ.காஜா இயக்கத்தில் வெளிவந்த ‘மாந்தோப்பு கிளியே’, ‘தெருவிளக்கு’, ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ ஆகிய படங்களிலும் சிறு வேடங்களில் நடித்தார். இராம.நாராயணன், ராஜசேகர் இருவரும் கூட்டாகத் தயாரித்த ‘பவுர்ணமி நிலவில்’ படத்திற்கு முதன் முதலாக ராமராஜன் ‘கிளாப்’ அடித்தார்.

நடிகர் ராமராஜனின் திறமையை பார்த்து, அவரை தனது உதவியாளராக ராஜசேகர் சேர்த்துக்கொண்டார். அந்த படத்தில் திரையிடப்படும் ஒரு படத்தில் கதாநாயகனாக ராமராஜன் நடித்தார். அதில் கதாநாயகியை பார்த்து ‘காடுகளையும், மேடுகளையும் கடந்து வரவேண்டாமா, கண்ணே’ என்று வசனம் பேசினார். அவர் பேசிய முதல் வசனம் இதுதான். படம் வெற்றி பெற்றது.

1980-ம் ஆண்டு இராம.நாராயணனிடம் ராமராஜன் உதவி இயக்குனராக சேர்ந்தார். அப்போது இராம.நாராயணன் இயக்கிய ‘மீனாட்சி’ படத்தில் சலவை தொழிலாளி வேடத்தில் நடித்தார். தொடர்ந்து ‘சுமை’, ‘சிவப்புமல்லி’, ‘பட்டம் பறக்கட்டும்’, ‘இளஞ்ஜோடிகள்’ என 35 படங்களில் இராம.நாராயணனுடன் உதவி இயக்குனராக நடிகர் ராமராஜன் பணிபுரிந்தார். சில படங்களில் சிறு வேடத்தில் நடித்தார்.

1984-ம் ஆண்டு ‘சபாஷ்’ என்ற படத்தின் படப்பிடிப்பின்போது பி.எஸ்.வீரப்பாவிடம், படம் இயக்குவதற்கு ராமராஜன் வாய்ப்பு கேட்டார். தொடர்ந்து ‘கடமை’ படத்திற்கு உதவி இயக்குனராகவும், வசன உதவியாளராகவும் ராமராஜன் பணியாற்றினார்.

அப்போது பி.எஸ்.வீரப்பாவின் மகனிடம் ராமராஜன் ஒரு கதையை சொன்னார். 1985-ம் ஆண்டு `மண்ணுக்கு ஏத்த பொண்ணு' என்ற படத்தை இயக்க பி.எஸ்.வீரப்பா வாய்ப்பு கொடுத்தார். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தையும் ராமராஜனே செய்தார். இதில் கதாநாயகனாக பாண்டியனும், கதாநாயகியாக இளவரசியும் நடித்தனர்.

இந்தப்படம் வெற்றி பெற்று, ராமராஜன் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ‘குமரேசன்’ ராமராஜன் ஆனது எப்படி என்பது பற்றி அவர் கூறியதாவது:-

‘என்னுடைய நிஜப்பெயரான குமரேசன் நாடகப் பெயர்போல இருந்தது. சினிமாவுக்கு அந்தப் பெயர் செட்டாகாது என்று நினைத்தேன். எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற பெயரில் உள்ள `ராம' என்ற சொல்லும் என் தந்தை பெயரான ராமையாவில் உள்ள ‘ராம’ என்ற சொல்லும் பிடித்திருந்தன. ‘ராஜா’ தியேட்டரில் வேலை பார்த்ததை குறிக்கும் விதத்தில் அதையும் சேர்த்து ‘ராமராஜன்’ என வைத்துக்கொண்டேன்.

இவ்வாறு ராமராஜன் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
மேலும் சினி வரலாறு