திருப்பங்கள் நிறைந்த ராமராஜன் வாழ்க்கை: டிக்கெட் கிழிக்கும் ஊழியராக இருந்தவர் நடிகர் - டைரக்டராக உயர்ந்தார்
திருப்பங்கள் நிறைந்த ராமராஜன் வாழ்க்கை: டிக்கெட் கிழிக்கும் ஊழியராக இருந்தவர் நடிகர் - டைரக்டராக உயர்ந்தார்
டிக்கெட் கிழிக்கும் ஊழியராக இருந்து இயக்குனராகவும், நடிகராகவும் உயர்ந்தவர் ராமராஜன். அவரது வாழ்க்கை திருப்பங்கள் நிறைந்தது ஆகும்.  நடிகர் ராமராஜனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் ஓக்கூர். தந்தை ராமையா. நாடக நடிகர். தாயார் வெள்ளையம்மாள். ராமராஜனின் சகோதரர்கள் கருப்பையா, பாண்டி, சகோதரிகள் புஷ்ப வல்லி, வைராத்தாள்.

ராமராஜனுக்கு பெற்றோர் வைத்த பெயர் குமரேசன். ராமராஜன் பிறந்த ஒரு ஆண்டிலேயே சொந்த ஊரில் இருந்து மேலூருக்கு வந்து விட்டனர். இதனால், நடிகர் ராமராஜன் மேலூர் அரசு பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் மேலூர் அரசு கலை கல்லூரியில் பி.யூ.சி படித்தார். படிக்கும் வயதிலேயே, நிறைய சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ராமராஜனுக்கு இருந்தது. அதிகமாக சினிமாவைப் பார்த்துப் பார்த்து, `நாமும் நடிக்க வேண்டும் என்ற ஆசை' எழுந்தது. அதற்கு வடிகாலாக ராமராஜன் வசித்த தெருவில் 1972-ம் ஆண்டு 'அப்பல்லோ நாடக கலா மன்றம்' ஆரம்பித்தார்கள்.

அந்த நாடக மன்றம் மூலம், 'ஆசையின் விளைவு', 'பண்ணையார் மகள்', 'இன்பமுடிவு' ஆகிய நாடகங்கள் நடத்தப்பட்டன. அந்த நாடகங்களில் ராமராஜன் நடித்தார். பண்ணையார் மகள் நாடகத்தில் கதாநாயகனாக நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றார். நாடகத்தில் நடித்த ராமராஜனுக்கு, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால், சென்னைக்குப் போக வேண்டும். சென்னையில் யாருடைய ஆதரவை நாடிச் செல்வது என்ற கேள்வி எழுந்து, தயக்கத்தை உண்டாக்கியது. அந்த நேரத்தில், தங்கராஜ் என்ற நண்பர் மூலம் மேலூரில் 'ராஜா டூரிங் டாக்கீஸ்' என்ற திரையரங்கில் ராமராஜனுக்கு வேலை கிடைத்தது. அங்கு டிக்கெட் கிழித்து கொடுப்பது, கேஷியர் வேலை, மானேஜர் வேலை, படத்தை ஆப்பரேட் செய்வது என அனைத்து வேலைகளையும் செய்தார்.

அதன் பின்னர் மேலூரில் மீனாட்சி சுந்தரம் என்கிற அம்பலக்காரரும், ராமசாமி என்பவரும் புதிதாக கட்டிய கணேஷ் தியேட்டரில் ராமராஜன் வேலைக்கு சேர்ந்தார். டிக்கெட் கொடுப்பது முதல் அனைத்து வேலைகளையும் ராமராஜனே செய்து முடிப்பார். அப்போது தியேட்டருக்கு தேவையான திரைப்பட போஸ்டர்கள், படப்பெட்டி ஆகியவற்றையும் மதுரைக்கு சென்று ராமராஜன் வாங்கி வருவார்.

தனது தியேட்டர் அனுபவம் பற்றி ராமராஜன் கூறியதாவது:- 'மேலூரில் நாடகம், தெருக்கூத்து, கரகாட்டம் எங்கு நடந்தாலும் அதை நான் விரும்பிப் பார்ப்பேன். சினிமாவும் அதிகமாக பார்ப்பேன். ஒரு காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர். படங்கள் என்னை அதிகமாக கவரத் தொடங்கின. எங்கள் தெருவில் 'பண்ணையார் மகள்' என்ற நாடகம் போட்டார்கள். அதில் நான்தான் கதாநாயகன்.

அப்போது 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் வெளியாகி இருந்தது. அந்தப் படத்தில் வரும் 'பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ' என்ற பாடலுக்கு நாடகத்தில் நான் நடனமாடினேன். அப்போதே எம்.ஜி.ஆர். போட்டது போல பச்சை கலர் பேண்ட், பச்சை கலர் சட்டை அணிந்து நடனமாடினேன். அப்பொழுது எல்லாம் எம்.ஜி.ஆர். படம் பார்க்க வேண்டுமென்றால், மதுரைக்குத்தான் செல்வோம்.

எங்கள் வீட்டு அருகே இருக்கும் செக்கடி நாகாத்தம்மன் கோவில் திருவிழாவின்போது விடிய விடிய நாடகம் நடக்கும். அங்கு நாடகத்தை இரவு முழுவதும் உட்கார்ந்து பார்த்தால் எங்கள் வீட்டில் எதுவும் சொல்லமாட்டார்கள். ஆனால், சினிமாவுக்குப் போனால் அடிப்பார்கள்! அதனால் பாதி நாடகத்தில் எழுந்து சினிமாவுக்கு சென்றுவிட்டு, மீண்டும் நாடகம் நடக்கும் இடத்திற்கு வந்துவிடுவோம்! இந்த நேரத்தில்தான் தியேட்டரில் வேலைக்குச் சேர்ந்தேன்.

பணம் கொடுக்காமல் 3 காட்சிகள் படம் பார்க்கலாமே என்ற ஆர்வத்தில்தான் சேர்ந்தேன். டிக்கெட் கிழிப்பதிலிருந்து மானேஜர் வேலை வரை அனைத்தையும் நான் ஒருவனே செய்வேன். மாத சம்பளம் 22 ரூபாய். அதில் ரூ.15 வீட்டுக்கு கொடுக்க வேண்டும். இந்த நிலையில் சம்பளம் போதாததால் அம்பலக்காரர் என்பவரும், என் உறவினர் ராமசாமியும் சேர்ந்து கட்டிய கணேஷ் தியேட்டரில் வேலைக்கு சேர்ந்தேன்.

அங்கு 90 ரூபாய் சம்பளம் கிடைத்தது. படம் பார்க்கும்போதெல்லாம் `நாமும் நடிகராக வேண்டும். ஒரு சிறு வேடத்திலாவது நடிக்க வேண்டும்' என்ற ஆசை ஏற்பட்டது. எங்கள் தியேட்டருக்கு படம் பார்க்க வந்த நடிகர் பிரேம் ஆனந்துடன் நின்று, ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன்.' 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"