ரஜினியை வைத்து 25 படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன்!
ரஜினியை வைத்து 25 படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன்!
சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமலஹாசன் மற்றும் முன்னணி நடிகர்கள் நடித்த 75 படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். இவற்றில் ரஜினிகாந்த் நடித்த படங்கள் மட்டும் 25. ரஜினிகாந்தின் அதிக படங்களை இயக்கியவர் இவர்தான்.

இயக்குனர் எஸ்.பி.முத்துராமனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி. இவருடைய தந்தை இராம.சுப்பையா, தாயார் விசாலாட்சி. எஸ்.பி.முத்துராமனுக்கு செல்வமணி, சுவாமிநாதன், சுபவீரபாண்டியன் ஆகிய 3 தம்பிகளும், கனகம் என்கிற ஒரே தங்கையும் உண்டு.

எஸ்.பி.சுபவீரபாண்டியன் பழ.நெடுமாறனின் தமிழ் தேசிய இயக்கத்தில் ஈடுபாடு உள்ளவர். பல புத்தகங்களை எழுதி உள்ளார். எஸ்.பி.முத்துராமனின் தந்தை இராம.சுப்பையா, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தீவிர பற்று கொண்டவர். இதனால் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றார்.

கல்லக்குடி போராட்டத்தில் கருணாநிதியுடன் கைதாகி சிறை சென்றவர். அவர் செட்டிநாட்டில் திராவிட இயக்கம் வளரக் காரணமாக இருந்தவர் என்று கருணாநிதியே கூறி உள்ளார்.

இராம.சுப்பையா 1972-ம் ஆண்டு முதல் 1978-ம் ஆண்டு வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். இராம.சுப்பையா மனைவி விசாலாட்சியும் அந்த காலத்திலேயே மேடைகளில் ஏறி சுயமரியாதை இயக்க கருத்துக்களை பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தை இராம.சுப்பையா பற்றி எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது:-

"என் தந்தை மேடையேறி பேசமாட்டார். தனிப்பட்ட முறையில் பேசி, இயக்கத்தில் தொண்டர்களை சேர்த்துவிடுவார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திராவிட இயக்கத் தலைவர்கள் யார் வந்தாலும், எங்கள் வீடான சமதர்ம இல்லத்தில்தான் தங்குவார்கள். சுயமரியாதை இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும் எங்கள் வீடுதான் வேடந்தாங்கல்.

இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் கூறினார்.

தேவகோட்டை டிபிரிட்டோ உயர்நிலைப்பள்ளியில் 9-வது வகுப்பு படிக்கும்போது தனது பள்ளியில் நாடகங்களையும், கலை நிகழ்ச்சிகளையும் எஸ்.பி.முத்துராமன் நடத்தினார். அவரது கலை ஆர்வத்திற்கு பாதிரியார் மச்சோடோ ஊக்கமளித்தார்.

காரைக்குடி சண்முகவிலாஸ் தியேட்டரில் டி.கே.எஸ்.நாடகக் குழுவினரின் நாடகத்தைப் பார்க்க தனது தந்தையுடன் எஸ்.பி.முத்துராமன் சென்றார். நாடகத்தைப் பார்க்க, பார்க்க கலைத்துறை மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.

1952-ம் ஆண்டு கருணாநிதியின் சிறப்பான வசனத்தில், சிவாஜிகணேசன் அற்புதமாக நடித்த பராசக்தியை பார்த்த எஸ்.பி.முத்துராமன், "இனி நம் வாழ்க்கை திரையுலகம்தான்'' என்று முடிவு செய்தார். அதை பெற்றோரிடமும் தெரிவித்தார். அவர்களும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

எஸ்.எஸ்.எல்.சி முடித்ததும் சென்னை புறப்பட்டார், முத்துராமன். கண்ணதாசனின் தென்றல் பத்திரிகையில் பணிபுரிய, முத்துராமனை அவரது தந்தையே சேர்த்துவிட்டார். பத்திரிகையில் பணிபுரிந்தாலும் சினிமாவில் சேரவேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போனது.

இதை புரிந்து கொண்ட முத்துராமனின் தந்தை, தனது மகனை ஏவி.எம். புரொடக்ஷனில் சேர்த்துவிட்டார். ஏவி.மெய்யப்ப செட்டியார், முத்துராமனை அழைத்து எடிட்டிங் துறையில் பணியாற்ற அனுப்பி வைத்தார்.

1956-ம் ஆண்டு ஏவி.எம்.மில் சேர்ந்த முத்துராமனுக்கு எடிட்டர் சூரியா, இயக்குனர் கே.சங்கர் ஆகியோர் தொழில் கற்றுக்கொடுத்தனர். மெய்யப்ப செட்டியாரின் மகன்கள் முருகன், குமரன், சரவணன், மருமகன் ஏ.வீரப்பன் ஆகியோர் இணைந்து தயாரித்த களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குனராக எஸ்.பி. முத்துராமன் பணிபுரிந்தார். இந்த படத்தை டி.பிரகாஷ்ராவ், ஏ.பீம்சிங் ஆகியோர் இயக்கினார்கள். கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சு, யோகானந்த், கிருஷ்ணன் நாயர், புட்டண்ணா கனகல் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதன்பின்னர் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தரிடம் உதவி இயக்குனராக முத்துராமனை ஏவி.எம்.சரவணன் சேர்த்துவிட்டார்.

இதுபற்றி எஸ்.பி.முத்துராமன் கூறும்போது, "ஏ.சி.திருலோகசந்தர் ஏவி.எம்.ஸ்டூடியோவுக்காக இயக்கிய பல படங்களில் நான் உதவி இயக்குனராக இருந்தேன். அவரை என் குருவாக நினைத்து அவரிடமிருந்து தொழில் கற்றுக்கொண்டேன்'' என்றார்.

வி.சி.குகநாதன் தயாரிப்பில் ஜெய்சங்கர், முத்துராமன் நடித்த கனிமுத்துபாப்பா என்ற படத்தை இயக்க எஸ்.பி.முத்துராமனுக்கு வாய்ப்பு கிடைத்தது. படம் வெளிவந்து 75 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து 1973 முதல் 1975-ம் ஆண்டு வரை வி.சி.குகநாதன் தயாரிப்பில் பெத்த மனம் பித்து, காசி யாத்திரை, அன்புத்தங்கை, தெய்வக்குழந்தை ஆகிய படங்களை முத்துராமன் இயக்கினார்.

தொடர்ந்து எங்கம்மா சபதம் என்ற படத்தையும், முத்துராமன் - சுஜாதா நடித்த மயங்குகிறாள் ஒரு மாது என்ற படத்தை இயக்கினார். இந்த படம் சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்டது. கல்லூரி வாழ்க்கையில் தவறி விழுந்த கதாநாயகியை (சுஜாதா), கதாநாயகன் (முத்துராமன்) ஏற்றுக்கொள்வார். சுஜாதாவை, தேங்காய் சீனிவாசன் பிளாக்மெயில் செய்து பணம் பறிப்பார். கடைசியில், "எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்டுதான் நான் திருமணம் செய்தேன்'' என்று முத்துராமன் அறிவிப்பார். எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக அமைந்த இப்படம் 100 நாட்கள் ஓடியது.    
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"