AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif
'கல்யாணப் பரிசு' ரிலீஸ் அன்று ஸ்ரீதருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!
'கல்யாணப் பரிசு' ரிலீஸ் அன்று ஸ்ரீதருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!
'கல்யாணப் பரிசு' மகத்தான வெற்றிப் படம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், அப்படம் திரையிடப்பட்ட முதல் நாள் முதல் காட்சியின்போது நிகழ்ந்த சம்பவம் ஸ்ரீதரை அதிர்ச்சி அடையச் செய்தது.

'நம் படம் தோல்வி அடைந்துவிட்டது' என்றுதான் அவர் நினைத்தார். 1959 ஏப்ரல் 9-ந்தேதி 'கல்யாணப்பரிசு' ரிலீஸ் ஆயிற்று. முதல் காட்சியைப் பார்க்க, நண்பர்களுடன் சென்னை காசினோ தியேட்டருக்கு ஸ்ரீதர் சென்றார். அப்போது ஏற்பட்ட அனுபவம் பற்றி, அவர் தன் வாழ்க்கை வரலாற்றில் எழுதியிருப்பதாவது:-

'காசினோ தியேட்டரில், பால்கனியில் நண்பர்களுடன் அமர்ந்து முதல் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படத்திலேயே முக்கியமான, ஆழமான சென்டிமென்டுடன் கூடிய காட்சி, கதாநாயகி தன் காதலனிடம் கேவிக்கேவி வசனம் பேசுகிறாள்: 'அத்தான் (கேவல்)... நீங்கள் (கேவல்)... என்னுடைய (கேவல்)....' என்னது! தியேட்டர் சவுண்ட் பாக்சில் கோளாறா? அல்லது வாய்ஸ் ரிகார்டிங்கிலேயே கோளாறு ஏற்பட்டுவிட்டதா? ஏகப்பட்ட கேவல் ஒலி கேட்கிறதே! விஷயம் புரிந்ததும் 'ஷாக்' அடித்தது போலிருந்தது எனக்கு!

படம் பார்க்கும் அத்தனை பேரும் கதாநாயகியுடன் சேர்ந்து கேவுகிறார்கள் கேலியாக! 'ஹிக்! ஹிக்! ஹிக்!' வார்த்தைக்கு வார்த்தை கேவல் ஒலி கொடுக்கச் சொன்னது டைரக்டரான என் தவறுதான். அதுதான் உள்ளத்தை நெகிழ்த்துவதற்குப் பதில் பரிகசிப்புக்கு உள்ளாக்கிவிட்டது. வெளியே வந்தேன் `இதை எப்படி கவனிக்கத் தவறினேன்?' என்று என்னையே நொந்து கொண்டேன். அடுத்த கணம், 'படம் அடிவாங்கிவிட்டது. கிளம்புங்கள் போகலாம்' என்று நண்பர்களிடம் காதோடு கூறிவிட்டு, வெளியே வந்துவிட்டேன்.

என் மனச்சோர்வை நான் மறைத்துக்கொள்ள முயன்றும் பயனில்லை. தியேட்டர் மானேஜர் புரிந்து கொண்டுவிட்டார். 'பாதிப்படத்தில் போகாதீங்க சார். கொஞ்ச நேரம் ஆபீஸ் ரூமில் இருங்க. படம் முடியும்போதுதான் சரியான ரியாக்ஷன் தெரியவரும்' என்றார். வேண்டா வெறுப்பாய் சம்மதித்தேன். அவர் சொன்னது மிகவும் சரி. ரசிகர்கள் அந்த ஒரு காட்சியைக் கிண்டல் செய்தபோதிலும், படத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். கிளைமாக்ஸ் உள்பட எல்லாமே அவர்களுக்குப் பிடித்துவிட்டது என்பது புரிந்தது. அப்போதுகூட 'கல்யாணப்பரிசு' அப்படி ஓர் அபார வெற்றி பெறப்போகிறது என்று நாங்கள் எண்ணவில்லை.' இவ்வாறு ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீதர் சிறந்த கதை-வசன கர்த்தா என்று ரசிகர்கள் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார்கள். ஆனால், அவருடைய டைரக்ஷன் பற்றி பெரிய எதிர்பார்ப்பு இல்லை. முதல் நாள் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்கள், 'படம் பிரமாதம்! கதை, வசனம், நடிப்பு, படப்பிடிப்பு, பாட்டு எல்லாமே ஏ ஒன்' என்று கூறினார்கள். அவ்வளவுதான். நாளுக்கு நாள் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. பத்திரிகைகளில் கல்யாணப்பரிசை ஓகோ என்று பாராட்டி விமர்சனங்கள் வெளியாயின.

'தமிழ்ப்பட வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனை' என்று பிரபல பத்திரிகை ஒன்று எழுதியது. கல்யாணப்பரிசு படத்தில் அப்படி என்ன விசேஷம் இருந்தது? நீளமான வசனங்களுக்குப் பதிலாக, எளிமையான வார்த்தைகளைக் கொண்டு மனதைத் தொடும் வகையில் சுருக்கமாக வசனம் எழுதியிருந்தார், ஸ்ரீதர். வின்சென்ட் ஒளிப்பதிவு பிரமாதமாக இருந்தது. கேமரா ஒரு இடத்தில் நிற்காமல் நகர்ந்து கொண்டே இருந்தது.

கேமரா மூலம் கதை சொல்லும் உத்தியை வெற்றிகரமாக கையாண்டிருந்தார், ஸ்ரீதர். அதுவரை பின்னணிப் பாடகராக இருந்த ஏ.எம். ராஜாவை, துணிந்து இசை அமைப்பாளராக அறிமுகம் செய்திருந்தார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கருத்தாழம் மிக்கப் பாடல்களுக்கு, இனிமையாக இசை அமைத்திருந்தார், ஏ.எம்.ராஜா. படத்தில் நகைச்சுவை பிரமாதமாக அமைந்தது.

வேலை வெட்டி இல்லாத தங்கவேலு, தன்னை பிரபல எழுத்தாளர் என்று 'டூப்' அடித்து, கடைசியில் எம்.சரோஜாவிடம் மாட்டிக்கொண்டு விழிப்பார்! ரசிகர்கள் இன்றளவும் மறக்காத காமெடி இது. எல்லாவற்றுக்கும் மேலாக, படத்தின் உச்சகட்டம், யாரும் ஊகிக்க முடியாததாக - நெஞ்சைத் தொடுவதாக அமைந்திருந்தது. அதாவது, 'ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள்' என்று சிலரால் பயமுறுத்தப்பட்ட கிளைமாக்ஸ், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது! மேற்கண்ட காரணங்களால், அனைத்துத் தரப்பினரும் விரும்பிப் பார்க்கும் படமாக 'கல்யாணப்பரிசு' அமைந்தது.

குறிப்பாக, மாணவ- மாணவியரை கல்யாணப்பரிசு வெகுவாகக் கவர்ந்தது. தமிழ் நாட்டில் ஏற்கனவே சிறந்த டைரக்டர்கள் பலர் இருந்தார்கள் என்றாலும், மிகக்குறைந்த வயதில் (25), முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றி பெற்றவர் ஸ்ரீதர்தான். இதனால், ஸ்ரீதருக்கு பெரிய ரசிகர் கூட்டமே உருவாகியது. பொதுவாக, பெரிய நடிகர்- நடிகைகளைப் பார்க்கத்தான் ரசிகர்கள் தவம் கிடப்பார்கள்.

ஆனால், ஸ்ரீதரை பார்ப்பதற்கும் அவர் வீட்டுமுன் தினமும் பெரும் கூட்டம் கூடியது. அவர்களை எல்லாம் சந்தித்துப் பேசி, வழி யனுப்பி வைப்பதற்கே ஸ்ரீதர் கணிசமான நேரத்தை ஒதுக்க வேண்டியிருந்தது. அவர் எங்கு போனாலும் ரசிகர்கள் கூட்டம் பின் தொடர்ந்தது. கையில் வலி எடுக்கும்வரை ஆட்டோ கிராப்பில் கையெழுத்துப் போட்டார். தங்கள் படத்தை டைரக்ட் செய்யும்படி கேட்டு, ஸ்ரீதர் வீட்டுக்குப் பட அதிபர்கள் படை எடுத்தனர். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif

மேலும் சினி வரலாறு