ஸ்ரீதர் டைரக்ட் செய்த முதல் படம் `கல்யாணப் பரிசு'
ஸ்ரீதர் டைரக்ட் செய்த முதல் படம் `கல்யாணப் பரிசு'
'கல்யாணப் பரிசு' கதையை தன் நண்பர்களிடம் ஸ்ரீதர் கூறியபோது, பலருக்கு அது பிடிக்கவில்லை. படம் தயாராகி முடிந்ததும், 'கிளைமாக்ஸ்' காட்சியை மாற்றும்படி கூறினார்கள். இந்த தடைகளையெல்லாம் மீறி, வெற்றிக்கொடி நாட்டினார், ஸ்ரீதர்.

'ரத்த பாசம்' வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீதரின் புகழ் பரவியது. பட உலகில் முன்னேறத் தொடங்கினார். ஜுபிடர் நிறுவனத்தில் இருந்த சுந்தரம்பிள்ளை, ஜி.உமாபதி, கிருஷ்ணமூர்த்தி (பிற்காலத்தில் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி) ஆகியோரும், வேறு சிலரும் சேர்ந்து புதிய படக்கம்பெனி ஒன்றை தொடங்கினார்கள். அவர்களுக்காக ஸ்ரீதர் எழுதிக் கொடுத்த கதை 'எதிர்பாராதது.' கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் இக்கம்பெனிக்கு ஒரு கதையை எழுதிக்கொடுத்திருந்தார். இரு கதைகளும், படத்தின் கதாநாயகனான சிவாஜிகணேசன் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 'எதிர்பாராதது' கதை தனக்குப் பிடித்திருப்பதாக சிவாஜிகணேசன் தெரிவித்தார். ஆயினும், இக்கதைக்கு கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதினால் நன்றாக இருக்கும் என்று அவர் எண்ணினார்.

இதை, பட அதிபர் மூலமாக அறிந்த ஸ்ரீதர், 'எனக்கு 3 நாள் அவகாசம் கொடுங்கள். முழு வசனத்தையும் எழுதித் தருகிறேன். அது சிவாஜிக்குப் பிடித்திருந்தால் வைத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், என்னை விட்டு விடுங்கள். கதையை மட்டும் தருவதில் எனக்கு விருப்பம் இல்லை' என்றார்.   அதன்படி முழு வசனத்தையும் எழுதி முடித்தார். சிவாஜியை சந்தித்து வசனத்தைப் படித்துக் காட்டினார்.

ஸ்ரீதரின் வசனங்கள், சிவாஜி கணேசனுக்குப் பிடித்துப் போய்விட்டன. 'வசனம் பிரமாதம்! இந்தத் தம்பியின் வசனத்தையே வைத்துக் கொள்ளலாம்' என்று, பட அதிபரிடம் கூறிவிட்டார். 1954 கடைசியில் 'எதிர்பாராதது' வெளிவந்தது. சிவாஜியும், பத்மினியும் நடித்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பின்னர், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான 'மகேஸ்வரி' படத்துக்கு வசனம் எழுதினார். மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில் பெரிய நூலகம் ஒன்று இருந்தது. திரைப் படத்தயாரிப்பு பற்றிய பல ஆங்கிலப் புத்தகங்கள் அந்த நூலகத்தில் இருந்தன. அவற்றையெல்லாம் ஸ்ரீதர் படித்தார்.

படத்தயாரிப்பு, டைரக்ஷன் பற்றிய பல நுட்பங்களை தெரிந்து கொண்டார். 'தேவதாஸ்' புகழ் ஏ.நாகேஸ்வர ராவ், தெலுங்கிலும், தமிழிலும் 'எங்கள் வீட்டு மகாலட்சுமி' என்ற படத்தைத் தயாரித்தார். தமிழ்ப்படத்துக்கு, ஸ்ரீதர் வசனம் எழுதினார். 'ரத்த பாசம்' கதைக்கு 500 ரூபாய் சன்மானம் பெற்ற ஸ்ரீதர், 'எங்கள் வீட்டு மகாலட்சுமி'க்கு வசனம் எழுதி பெற்ற தொகை ரூ.9 ஆயிரம்.   நாகேஸ்வரராவ் தயாரித்த அடுத்த படத்துக்கும் ('மஞ்சள் மகிமை') ஸ்ரீதர் வசனம் எழுதினார்.

அந்த படத்துக்கு பெற்ற தொகை ரூ.15 ஆயிரம். புகழிலும், பொருளாதாரத்திலும் நாளுக்கு நாள் வளர்ந்து வந்த ஸ்ரீதர், தன் நண்பர்களான கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜன் ஆகியோருடன் சேர்ந்து, 'வீனஸ் பிக்சர்ஸ்' என்ற படக்கம்பெனியைத் தொடங்கினார். இந்தப் பட நிறுவனத்தின் முதல் படம் 'அமரதீபம்.'

கதை- வசனத்தை ஸ்ரீதர் எழுதினார். சிவாஜிகணேசனுடன், பத்மினியும், சாவித்திரியும் இணைந்து நடித்தனர். சலபதிராவ் இசை அமைக்க, பிரகாஷ்ராவ் டைரக்ட் செய்தார். 1956-ல் வெளிவந்த 'அமரதீபம்', மெகாஹிட் படமாக அமைந்தது. அமரதீபத்தைத் தொடர்ந்து வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த படம் 'உத்தமபுத்திரன்.' சிவாஜிகணேசன் முதன் முதலாக இரட்டை வேடத்தில் நடித்தார்.

வசனத்தை ஸ்ரீதர் எழுத, டைரக்ட் செய்தவர் பிரகாஷ்ராவ். இந்தப்படமும் வெற்றிகரமாக ஓடியது. வீனஸ் பிக்சர்சின் அடுத்த படத்துக்கான கதையை ஸ்ரீதர் தயார் செய்தார். அதுதான் 'கல்யாணப்பரிசு.' தன் பங்குதாரர்களான கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜன் ஆகியோரிடம் கதையை உணர்ச்சி பொங்க கூறினார். அவர்கள் உதட்டைப் பிதுக்கினர்.

'வேறு நல்ல கதையாகப் பார், ஸ்ரீதர்!' என்று கூறினார்கள். சில நாட்கள் கழித்து, ஒளிப்பதிவாளர் வின்சென்ட், உதவி ஒளிப்பதிவாளர் சுந்தரம், 'ஸ்டில்' திருச்சி அருணாசலம் (ஆனா ரூனா'), நண்பரும் வசன கர்த்தாவுமான கோபு ஆகியோருடன் கடற்கரைக்கு காற்று வாங்கப் போனார், ஸ்ரீதர். அங்கு, 'கல்யாணப்பரிசு' கதையை நண்பர்களிடம் கூறினார்.

'இந்த அருமையான கதையையா கிருஷ்ணமூர்த்தி நிராகரித்தார்?' என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். 'இதே கதையை படமாக எடுங்கள். நீங்களே டைரக்ட் செய்யுங்கள்' என்று கூறினார்கள். டைரக்டர் ஆகவேண்டும் என்ற ஆசை ஸ்ரீதருக்கும் இருந்தது. ஆயினும், 'இவ்வளவு குறுகிய காலத்தில் -சிறு வயதில் டைரக்ஷன் பொறுப்பை ஏற்பதா?' என்ற தயக்கமும் இருந்தது. எனினும் படத்தைப் பற்றி இறுதி முடிவு எடுக்க வேண்டியவர் கிருஷ்ணமூர்த்திதான். எனவே அவரிடம் மீண்டும் 'கல்யாணப் பரிசு' கதையைச் சொன்னார். 'சரி. வேறு வழி இல்லை. இதையே எடுப்போம்' என்றார், கிருஷ்ணமூர்த்தி. அருகில் இருந்த நண்பர்கள், 'இந்தப் படத்தை ஸ்ரீதரே டைரக்ட் செய்யலாம்' என்று கூறினார்கள்.

திகைத்துப்போன கிருஷ்ணமூர்த்தி, 'சரி!' என்று அரை மனதுடன் சம்மதம் தெரிவித்தார். இதை சவாலாக ஏற்றார், ஸ்ரீதர். 'சில காட்சிகளை நான் டைரக்ட் செய்கிறேன். அதைப் போட்டுப் பார்ப்போம். திருப்தியாக இருந்தால் தொடர்ந்து டைரக்ட் செய்கிறேன். இல்லையென்றால், வேறு யாராவது டைரக்ட் செய்யட்டும்' என்று கூறினார்.

ஜெமினிகணேசன், சரோஜாதேவி, விஜயகுமாரி, தங்கவேலு, எம்.சரோஜா ஆகியோர் இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். சில காட்சிகள், ஸ்ரீதர் டைரக்ஷனில் படமாக்கப்பட்டன. அதைப் போட்டுப் பார்த்த வீனஸ் பிக்சர்ஸ் பங்குதாரர்கள், 'பரவாயில்லை. நன்றாக வந்திருக்கிறது. தொடர்ந்து ஸ்ரீதரே டைரக்ட் செய்யட்டும்' என்று கூறினார்கள். படத்தை உற்சாகத்தோடு எடுத்து முடித்தார், ஸ்ரீதர். முதல் பிரதி தயாரானதும், படத்தைப் போட்டுப் பார்த்தார்கள்.

படத்தின் 'கிளைமாக்ஸ்' (சரோஜாதேவி தன் காதலை தியாகம் செய்ய, ஜெமினிகணேசன் சோகத்துடன் திரும்புவது) கிருஷ்ணமூர்த்திக்குப் பிடிக்கவில்லை. அதை மாற்றிவிடலாம் என்று கூறினார். வீனஸ் பிக்சர்ஸ் சம்பந்தப்பட்டவர்கள் இரு பிரிவாகப் பிரிந்து, கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாக சிலரும், ஸ்ரீதருக்கு ஆதரவாக சிலரும் காரசாரமாக விவாதித்தார்கள். 'சில பிரிண்டுகளை இந்த கிளைமாக்ஸ் காட்சியுடன் இப்படியே அனுப்புவோம்.

வேறு சில பிரிண்டுகளில் `கிளைமாக்ஸ்' மாற்றி ரிலீஸ் செய்வோம்' என்று ஸ்ரீதர் கூறினார். கிருஷ்ணமூர்த்தி சற்று நேரம் யோசித்துவிட்டு, 'இல்லை. உன் விருப்பப்படியே விட்டு விடுகிறேன். இந்த கிளைமாக்ஸ் காட்சியே இருக்கட்டும்' என்று கூறிவிட்டார். படத்தின் ரிலீசுக்கு முதல் நாள் இரவு ஸ்ரீதருக்கு தூக்கமே வரவில்லை. 'படம் வெற்றி பெறவேண்டுமே. கிளைமாக்சை, ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே' என்ற கவலையால் தூக்கம் இன்றி தவித்தார். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif