"பராசக்தி" உள்பட வெற்றிப்படங்களை இயக்கிய கிருஷ்ணன்- பஞ்சு
"பராசக்தி" உள்பட வெற்றிப்படங்களை இயக்கிய கிருஷ்ணன்- பஞ்சு
சிவாஜிகணேசன் அறிமுகமான "பராசக்தி" உள்பட பல வெற்றிப்படங்களை டைரக்ட் செய்த கிருஷ்ணன்- பஞ்சு, இறுதிக்காலம் வரை இணை பிரியாத நண்பர்களாக வாழ்ந்தனர்.

பல படங்களை இணைந்து டைரக்ட் செய்த கிருஷ்ணனும், பஞ்சுவும் சகோதரர்கள் என்று பலர் நினைக்கக்கூடும். அது சரியல்ல. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

பஞ்சுவின் சொந்த ஊர் கும்பகோணத்தை அடுத்த உமையாள் புரம். இயற்பெயர் பஞ்சாபகேசன். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்.

சிறு வயதிலேயே முற்போக்கு எண்ணங்கள் கொண்டவராக விளங்கினார். மகாகவி பாரதியார் தன் பூணூலை கழற்றி கங்கையில் விட்டு விட்டார் என்று படித்த பஞ்சு, தன் பூணூலைக் கழற்றி, காவிரி ஆற்றில் விட்டு விட்டார். எஸ்.எஸ்.எல்.சி. தேறியதும், சினிமாத்துறையில் சேர விருப்பம் கொண்டு, அன்றைய பிரபல டைரக்டர் ராஜா சாண்டோவிடம் உதவியாளராகச் சேர்ந்தார். எடிட்டிங் துறையில் பயிற்சி பெற்றார்.

இந்தக் காலக்கட்டத்தில் கோவையில் கந்தன் ஸ்டூடியோ என்ற சினிமா ஸ்டூடியோ நடந்து வந்தது. இந்த ஸ்டூடியோவைத்தான் பிற்காலத்தில் ஸ்ரீராமுலு நாயுடு வாங்கி, "பட்சிராஜா ஸ்டூடியோ" என்ற பெயரில் நடத்தினார். கந்தன் ஸ்டூடியோவில் லேபரட்டரியில் பணியாற்றிய கிருஷ்ணனும், பஞ்சுவும் நண்பர்களானார்கள்.

இந்த சமயத்தில், ராஜா சாண்டோவின் டைரக்ஷனில் "ஆராய்ச்சி மணி" என்ற படம் தயாராகி வந்தது. மனு நீதி சோழனின் கதை இது. இதில் கன்றை இழந்த பசு, கண்ணீர் விட்டபடி அரண்மனைக்கு ஓடிவந்து, ஆராய்ச்சி மணியின் கயிற்றை பல்லால் கடித்து இழுத்து, மணியை அடிக்கவேண்டும்.

இந்தக் காட்சியை பலமுறை எடுத்தும் சரியாக வரவில்லை. எடிட்டிங் துறையில் நன்கு பயிற்சி பெற்றிருந்த பஞ்சுவும், கிருஷ்ணனும் டைரக்டர் ராஜா சாண்டோவிடம் சென்று, அக்காட்சியை எப்படி படமாக்கலாம் என்பது குறித்து யோசனை தெரிவித்தனர்.

"வெறும் யோசனை வேண்டாம். உங்களால் முடியும் என்றால் இக்காட்சியை எடுத்துக்காட்டுங்கள்" என்றார், ராஜா சாண்டோ.

பஞ்சுவும், கிருஷ்ணனும் தங்கள் திறமை முழுவதையும் பயன்படுத்தி டிரிக் ஷாட் (தந்திரக் காட்சி) மூலம் அந்தக் கட்டத்தை படமாக்கினர். மாடு கண்ணீர் வடிப்பது, கயிற்றை வாயினால் இழுத்து மணியை அடிப்பது ஆகிய காட்சிகள் தத்ரூபமாக அமைந்தன.

அதைப் பார்த்த ராஜா சாண்டோ, கிருஷ்ணனையும், பஞ்சுவையும் கட்டித் தழுவிக்கொண்டார். "இளைஞர்களாக இருந்தாலும் மிகத் திறமைசாலிகளாக இருக்கிறீர்கள். இனி நீங்கள் உதவியாளர்களாக இருக்கவேண்டாம். இருவரும் சேர்ந்து டைரக்டர்களாக ஆகுங்கள். "பூம்பாவை" என்ற படத்தை டைரக்ட் செய்ய எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. தயாரிப்பாளரிடம் சொல்லி, அந்த வாய்ப்பை உங்களுக்கு வாங்கித் தருகிறேன்" என்றார்.

அதன்படி "பூம்பாவை" படத்தை இயக்கும் பொறுப்பை கிருஷ்ணன்- பஞ்சுவுக்கு வாங்கித் தந்தார். இந்தப் படத்தில் கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாகவும், யு.ஆர்.ஜீவரத்தினம் கதாநாயகியாகவும் நடித்தனர். மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், டி.ஆர்.ராமச்சந்திரன், கே.சாரங்கபாணி ஆகியோர் நடித்த இந்தப்படம் 1944 ஆகஸ்டு மாதம் வெளிவந்தது.

படம் வெற்றிகரமாக ஓடியது.

பின்னர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்தபோது, அவருடைய நாடகக் குழுவில் இருந்தவர்களின் நலனுக்காக தயாரிக்கப்பட்ட "பைத்தியக்காரன்" படத்தை, இந்த இரட்டையர் டைரக்ட் செய்தனர். எஸ்.வி.சகஸ்ரநாமம், எம்.ஜி.ஆர், டி.ஏ.மதுரம் ஆகியோர் இப்படத்தில் நடித்தனர்.

படம் முடிவடையும் தருணத்தில், லட்சுமிகாந்தன் வழக்கில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நிரபராதி என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்தது.

இதைத்தொடர்ந்து பைத்தியக்காரன் படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, என்.எஸ். கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் புதிதாக எடுக்கப்பட்டு, படத்தில் சேர்க்கப்பட்டன.

பின்னர் பி.யு.சின்னப்பா -பானுமதி நடித்த "ரத்தின குமார்", அறிஞர் அண்ணா கதை -வசனம் எழுதிய "நல்ல தம்பி" ஆகிய படங்கள் கிருஷ்ணன்- பஞ்சு டைரக்ஷனில் 1949-ல் வெளிவந்தன.

1952 தீபாவளிக்கு வெளிவந்த "பராசக்தி", வரலாறு படைத்தது. சிவாஜிகணேசனின் நடிப்பும், கலைஞர் கருணாநிதியின் வசனமும், கிருஷ்ணன் - பஞ்சுவின் டைரக்ஷனும் சேர்ந்து "பராசக்தி"க்கு இமாலய வெற்றியைத் தேடித்தந்தன.

பின்னர், எம்.ஆர்.ராதா நடித்த "ரத்தக்கண்ணீர்" படத்தை டைரக்ட் செய்தனர். இதன்பின் ஏவி.எம்.ஸ்டூடி யோவில் உருவான பல சிறந்த படங்கள் கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ஷனில் உருவாயின. குலதெய்வம், தெய்வப்பிறவி, உயர்ந்த மனிதன், அன்னை, சர்வர் சுந்தரம், குழந்தையும் தெய்வமும் உள்பட பல படங்களை சிறப்பாக டைரக்ட் செய்தனர்.

குலதெய்வம் படத்தை "பாப்பி" என்ற பெயரில் இந்தியில் ஏவி.எம். தயாரித்தது. கிருஷ்ணன் -பஞ்சு டைரக்ட் செய்த இந்த படம், மகத்தான வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். நடித்த "பெற்றால்தான் பிள்ளையா" படத்தையும் இந்த இரட்டையர்கள் டைரக்ட் செய்தனர்.

கதையை திரைக்கதை ஆக்குவதில் கிருஷ்ணன் முக்கிய பங்கு எடுத்துக்கொள்வார். படப்பிடிப்பை சுறுசுறுப்பாக நடத்தி, "எடிட்டிங்" வேலைகளை கவனிப்பது பஞ்சுவின் பொறுப்பு. சிறந்த நட்புக்கு கிருஷ்ணனும், பஞ்சுவும் எடுத்துக்காட்டாக விளங்கினர்.

கிருஷ்ணனின் ஒன்றுவிட்ட தங்கையை பஞ்சு மணந்து கொண்டார். ஒல்லியான தோற்றம் உடையவர் பஞ்சு. சட்டைக்கு பொத்தான் போடாமல் காட்சியளிப்பார். அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். பஞ்சுவுக்கு ஆஸ்துமா நோய் உண்டு. 1984-ல் உடல் நலம் பாதிக்கப்பட்டு, தியாகராய நகரில் டேனியல் தெருவில் உள்ள அவரது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.

6-4-1984 அன்று உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது. அன்றிரவு 10-30 மணி அளவில் அவர் உயிர் பிரிந்தது. மரணம் அடைந்தபோது அவருக்கு வயது 70. பஞ்சு மறைவு செய்தி அறிந்ததும் அவருடைய உடன்பிறவா சகோதரராக விளங்கி வந்த கிருஷ்ணன் விரைந்து வந்தார். பஞ்சுவின் உடலை பார்த்து கதறி அழுதார்.

தி.மு.கழக தலைவர் கருணாநிதிக்கு பஞ்சு நீண்ட கால நண்பர் ஆவார். பஞ்சு மறைவு குறித்து தகவல் தெரிந்ததும், கருணாநிதி பஞ்சுவின் வீட்டுக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பஞ்சுவின் மனைவி பெயர் சரோஜா. 3 மகன்கள், சவுமித்ரா என்ற ஒரே மகள். சவுமித்ராவின் கணவரான நரேந்திரா டைரக்டர் பீம்சிங்கின் மகன். பஞ்சு மறைவுக்குப்பிறகு, கிருஷ்ணன் எந்த படத்தையும் டைரக்ட் செய்யவில்லை. நண்பர் மறைந்த சில காலத்துக்குப் பிறகு, அவரும் காலமானார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif