"தூக்குத் தூக்கி"யில் சிவாஜியின் ஜனரஞ்சக நடிப்பு- சிறந்த நடிகராக தேர்வு பெற்றார்
1954_ம் ஆண்டில், "மனோகரா" தவிர, இல்லறஜோதி, அந்த நாள், கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி, துளி விஷம், கூண்டுக்கிளி, தூக்குத்தூக்கி, எதிர் பாராதது ஆகிய படங்கள் வெளி வந்தன.

இவற்றில், "தூக்குத்தூக்கி" வெற்றிகரமாக ஓடிய ஜனரஞ்சகமான படம். "கொண்டு வந்தால் தந்தை; கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கொண்டு வந்தால் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் தோழன்" என்ற பொன்மொழிகளை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் எழுதப்பட்ட கதை. "மனோகரா"வைப் போலவே, இக்கதையும் எல்லா நாடகக் கம்பெனிக்கும் நாடகமாக நடித்து வந்தன.

நவரசங்களும் கலந்த ஜனரஞ்சகமான படங்களிலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை இப்படத்தில் சிவாஜி நிரூபித்தார். இப்படத்தில் லலிதா, பத்மினி, ராகினி ஆகியோர் சிவாஜியுடன் நடித்தனர். முக்கியமான வேடத்தில் (லலிதாவை மயக்கும் சேட்ஜி) டி.எஸ்.பாலையா நடித்தார்.

இது அருணா பிலிம்ஸ் தயாரிப்பு. வசனத்தை, ஏ.கிருஷ்ணசாமி, வி.என்.சம்பந்தம் ஆகியோர் நகைச்சுவை கலந்து எழுதினார்கள். பாடல்களை மருதகாசி, உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் எழுத, ஜி.ராமநாதன் இசை அமைத்தார். ஒளிப்பதிவையும், டைரக்ஷனையும் ஆர்.எம்.கிருஷ்ணசாமி கவனித்தார்.

அரச குமாரனாகத் தோன்றும் சிவாஜி, பலமாறு வேடங்கள் போட்டு பிரமாதமாக நடித்தார். குறிப்பாக, "குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்" என்ற பாடலை, பத்மினி, ராகினியுடன் சேர்ந்து அவர்களுக்கு இணை யாக ஆடினார். பாட்டும், நடனமும் ரசிகர்களின் கைதட்டலைப் பெற்றன.

"அபாய அறிவிப்பு, வாத்தியார் ஐயா!" என்ற பாடலை, வாத்தியாராக நடிக்கும் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையிடம் சிவாஜி பாடுவார். இந்த யதார்த்தம் பொன்னுசாமியின் நாடக சபாவில்தான் சிவாஜி முதன் முதலாக சேர்ந்து, நடிப்பு பயிற்சி பெற்றார்.

இந்தப்படத்தில், சிவாஜி கணேசனுக்கான பாடல்கள் அனைத்தையும் டி.எம்.சவுந்தரராஜன் பாடினார். சிவாஜிக்கு அவர் குரல் வெகுவாகப் பொருந்தியது. இந்தப் படத்துக்குப் பிறகுதான் சிவாஜிக்காக டி.எம்.எஸ். தொடர்ëந்து பாடலானார். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த "தூக்கு தூக்கி", பொருளாதார ரீதியில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

"தூக்குத்தூக்கி" ரிலீஸ் ஆன அதே தேதியில் (26_8_1954) எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இணைந்து நடித்த ஆர்.ஆர்.பிக்சர்ஸ் "கூண்டுக்கிளி"யும் வெளிவந்தது. இருபெரும் நடிகர்கள் சேர்ந்து நடித்த ஒரே படம் என்ற சிறப்பைத் தவிர, வேறு எந்த சிறப்பையும் பெறாத படம் இது. படத்தை டி.ஆர்.ராமண்ணா டைரக்ட் செய்திருந்தார்.

"நரசு காபி" நிறுவனத்தின் அதிபரான வி.எல்.நரசு தயாரித்த படம், "துளி விஷம்". திரைக்கதை _ வசனம் எழுதி படத்தை இயக்கியவர் ஏ.எஸ்.ஏ.சாமி. இப்படத்தில் கே.ஆர். ராமசாமி கதாநாயகனாகவும், சிவாஜிகணேசன் வில்லனாகவும் நடித்தனர். கதாநாயகி கிருஷ்ணகுமாரி. (சவுகார் ஜானகியின் தங்கை). முக்கிய வேடத்தில் டி.வி.நாராயணசாமி நடித்தார். படம், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

ஏவி.எம்.மின் "அந்த நாள்", ஆடல் _பாடல் இல்லாமல் தயாரிக்கப்பட்ட முதல் படம். புதுமை விரும்பியான "வீணை" எஸ்.பாலசந்தர் டைரக்ட் செய்தார். ஜாவர் சீதாராமன், பண்டரிபாய், சூர்யகலா, டி.கே.பாலசந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அகீஷா குருஷேவா என்ற டைரக்டர், உலகின் தலைசிறந்த டைரக்டராகப் போற்றப்படுகிறார். அவர் தயாரித்த "ரோஷமான்" என்ற படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் "அந்த நாள்".

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், சிவாஜிக்கு பதிலாக வேறொரு நடிகரை வைத்துத்தான் அந்தநாளை தயாரித்தார்கள். படம் கிட்டத்தட்ட முடிவடையும் தருணத்தில், அதுவரை தயாராகியிருந்ததை போட்டுப் பார்த்தார், ஏவி.மெய்யப்ப செட்டியார். படம் அவருக்குப் பிடிக்கவில்லை. "எதற்கப்பா விஷப்பரீட்சை! சிவாஜிகணேசனை கதாநாயகனாக போட்டு, படத்தை முடியுங்கள்" என்று கூறிவிட்டார்.

"பராசக்தி" படத்தில் சிவாஜி நடித்த சில காட்சிகளைப் பார்த்துவிட்டு, "எதற்கப்பா விஷப்பரீட்சை. கே.ஆர்.ராமசாமியைப் போட்டு படத்தை எடுங்கள்" என்று சொன்ன அதே மெய்யப்பச் செட்டியார், "அந்த நாள்" படத்தை பார்த்துவிட்டு, "விஷப்பரீட்சை வேண்டாம். சிவாஜியை வைத்து படம் எடுங்கள்" என்றார்!

இதுபற்றி பின்னர் சிவாஜி குறிப்பிடும்போது, "இது ஏவி.எம். அவர்களின் பெருந்தன்மை. நான் செய்த பாக்கியம். காரணம், அவர் புகழும் அளவுக்கு நான் வளர்ந்து விட்டேன்" என்று கூறினார். "அந்த நாள்" மிகப்பெரிய வெற்றிப்படம் அல்ல; என்றாலும், அனைவராலும் பாராட்டப்பட்ட சிறந்த படம்.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "இல்லற ஜோதி" சுமாராகவே ஓடியது என்றாலும், நல்ல படம் என்று பெயர் வாங்கியது. இதன் கதை _ வசனம் _பாடல்களை கண்ணதாசன் எழுதினார். கற்பனை வளம் மிக்க எழுத்தாளராக சிவாஜி நடித்தார். ஸ்ரீரஞ்சனி, அவருடைய மனைவி.

இவர்களின் வாழ்க்கையில் பத்மினி குறுக்கிடுகிறார். இந்த முக்கோண காதல் கதையை டைரக்ட் செய்தவர் ஜி.ஆர்.ராவ். ஜி.ராமநாதன் இசையில் பாடல்கள் இனிமையாக ஒலித்தன. இதில் இடம் பெற்ற "அனார்கலி" ஓரங்க நாடகத்தை மு.கருணாநிதி அருமையாக எழுதியிருந்தார். சிவாஜி கணேசன் சலீமாகவும், பத்மினி அனார்கலியாகவும் பாத்திரத்துடன் ஒன்றி நடித்தனர். இந்த ஓரங்க நாடகம், இசைத்தட்டாக வெளிவந்து சக்கை போடு போட்டது.

1954_ம் ஆண்டுக்கான சிறந்த படம், சிறந்த நடிகர் _நடிகைகளை சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம் தேர்ந்தெடுத்தது. சிறந்த நடிகராக சிவாஜி கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தேர்வு செய்யப்பட்டது "மனோகரா" படத்துக்காக அல்ல; "தூக்குத்தூக்கி" படத்துக்காக!